பிரிட்டனுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வர்த்தகத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளில் இரண்டு மடங்காக உயர்த்துவதற்கு, பிரிட்டனின் பிரதமர் டேவிட் கேமரன் மற்றும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இணைந்து முடிவெடுத்திருக்கிறார்கள்.
பிரிட்டிஷ் பிரதமர் டேவின் கேமரனின் இரண்டு நாள் இந்தியப் பயணத்தின் முடிவில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார். இரண்டு மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு, கலாச்சார ரீதியாக இரு நாடுகளும் நெருக்கமாக செயல்படுவதற்கான உடன்பாடு கையெழுத்தானது.அதன்பிறகு, இரு பிரதமர்களும் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டபோது, இரு நாடுகளும் மேலும் இணைந்து செயல்படுவது என்றும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் இருநாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை இரு மடங்காக உயர்த்துவது என்றும் முடிவெடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார்கள். கல்வி உள்ளிட்ட மற்ற துறைகளிலும், பாதுகாப்பு, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட துறைகளிலும் ஒத்துழைப்பை மேம்படுத்த முடிவெடுக்கப்பட்டது. மேலும், ஆப்கானிஸ்தான் நிலவரம், பயங்கரவாதம் உள்ளிட்ட அம்சங்கள் விவாதிக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
இந்தப் பயணம் தனக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்ததாக டேவிட் கேமரன் தெரிவித்தார்.
பின்னர் இரு தலைவ்ரகளும் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்கள். பாகிஸ்தான் தொடர்பாக டேவிட் கேமரன் தெரிவித்த கருத்து எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என மன்மோகன் சிங்கிடம் கேட்டபோது, பாகிஸ்தான் இந்தியாவிடம் ஏற்கெனவே அளித்த உறுதிமொழியைக் காப்பாற்றி, இந்தியாவுக்கு எதிராக செயல்படும் பயங்கரவாத சக்திகளை ஒடுக்கும் என நம்புவதாகத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், ``பாகிஸ்தான் தனது மேற்கு எல்லையில் பயங்கரவாதத்தை ஒடுக்க எடுக்கும் நடவடிக்கைகளைப் போன்று இந்திய எல்லையை ஒட்டியும் நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன். உலக சமுதாயம், இதை ஊக்குவிக்க உதவும் என்று நம்புகிறேன்’’ என்று தெரிவித்தார் மன்மோன் சி்ங்.
இதுபற்றி டேவிட் கேமரன் கூறும்போது, ``பயங்கரவாத அச்சுறுத்தலை மட்டும் நாம் பார்க்கவி்ல்லை. அதன் தாக்கத்தை மும்பை தெருக்களில், லண்டன் தெருக்களில் பார்த்தோம். ஆப்கானிஸ்தானில் வாரந்தோறும் பலர் கொல்லப்படுகிறார்கள். அதை அனுமதிக்க முடியாது. பாகிஸ்தானில் இருக்கும் பயங்கரவாதக் குழுக்கள், பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் உலக நாடுகளுக்கும் ஆபத்தை ஏற்படுத்துகின்றன. பாகிஸ்தானுடன் இணைந்து அதை ஒடுக்க வேண்டும். லஷ்கர் இ தொயிபா, பாகிஸ்தான் தாலிபான், ஆப்கன் தாலிபான் என எதுவாக இருந்தாலும் ஒடுக்க வேண்டும்’’ என்றார் டேவி்ட் கேமரன்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’