இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துடனான சர்ச்சைக்குரிய ஹெஜிங் ஒப்பந்தம் தொடர்பாக பிரித்தானிய வணிக நீதிமன்றத்தில் ஸ்டாண்டர்ட சாட்டர்ட் வங்கி வழக்குத் தொடுத்துள்ளது. இவ்வழக்கு அடுத்த வருடம் மார்ச் 28 ஆம் திகதி விசாரிக்கப்படவுள்ளதாக அதிகாரபூர்வ வட்டாரங்கள் நேற்று வியாழக்கிழமை தெரிவித்தன.
ஹெஜிங் ஒப்பந்தம் தொடர்பான வர்த்தகச் செயற்பாடுகளை மீறியமைக்காக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மீது மேற்படி வங்கி வழக்குத் தொடுத்துள்ளது.
பெற்றோலிய பொருட்களின் விலை அதிகரிப்பின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்குடன் 5 வங்கிகளுடன் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஹெஜிங் உடன்படிக்கையை செய்திருந்தது.
இது தொடர்பாக ஏனைய வங்கிகள் சிங்கப்பூரில் மத்தியஸ்த சபை நாடியிருந்தன. இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஜுலை 26 ஆம் திகதி சிங்கப்பூரில் நடைபெற்றது. அடுத்த மத்தியஸ்த மன்றம் இவ்வருடம் ஒக்டோபர் மாதம் ஒன்றுகூட வேண்டும் என இவ்வங்கிகள் வலியுறுத்துகின்றன.
மேற்படி ஹெஜிங் உடன்படிக்கையின்படி உலக சந்தையில் ஒரு கட்டத்திற்கு மேல் விலை உயர்ந்தால் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இறக்குமதி செய்யும் எரிபொருட்களுக்கான மேலதிக செலவை வங்கிகள் ஏற்றுக்கொள்ளும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் எரிபொருள் விலை ஒரு குறிப்பிட்ட தொகைக்கு கீழ் குறைந்தால் வங்கிகளுக்கு லாபம் கிட்டும்.
இவ்வாறான நிலையில் உலக சந்தையில் பெற்றோலிய பொருட்களின் விலை தொடர்ச்சியாக குறைவடைந்த போது பெற்றோலிய கூட்டுத்தாபனம் மேற்படி வங்கிகளுக்கு பெருமளவு பணத்தை செலுத்த வேண்டியிருந்தது.
அதனால் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு, வங்கிகளுக்கு வழங்கப்படுவதை இடைநிறுத்துமாறு நீதிமன்றம் இடைக்கால உத்தரவொன்றை வழங்கியது. எனினும் பெற்றோலிய விலை தொடர்பான நீதிமன்ற உத்தரவை அரசாங்கம் நிறைவேற்றத் தவறியதால் தனது இடைக்கால உத்தரவுகள் அனைத்தையும் நீதிமன்றம் இரத்துச் செய்தமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’