வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 27 ஜூலை, 2010

ஆப்கான் போர் ஆவணங்களை அம்பலப்படுத்தியது விக்கிலீக்ஸ்... கோபத்தில் அமெரிக்கா!

'ஆப்கானிஸ்தானில் போர்க்குற்றங்களை இழைத்தது அமெரிக்கா ராணுவம்', 'நேட்டோ படையை அழிக்க தாலிபான்களுக்கு உதவியது பாகிஸ்தான்,' என சர்வதேச அரசியலில் அதிர்ச்சியலையை ஏற்படுத்தும் விதமான ஆவணங்களை அம்பலப்படுத்தியிருக்கிறது, 'விக்கிலீக்ஸ்' இணையதளம்.
உலக அளவில் அரசுகள் மற்றும் மிகப் பெரிய நிறுவனங்களின் வெளியிடப்படாத ரகசிய ஆவணங்கள், குற்றம்சார்ந்த செயல்பாடுகளின் விவரங்கள் முதலியவற்றை சேகரித்து, பொதுமக்களின் பார்வைக்கு பகிரங்கமாகவே வைப்பதே 'விக்கிலீக்ஸ்' இணையதளத்தின் நோக்கம்.
ரகசிய தகவல்களைத் திரட்டும் மூல ஆதாராங்களை மிக ரகசியமாக வைத்து இயங்கும் இந்த இணையதளம், தற்போது 2004-ல் இருந்து 2009 வரையில் ஆப்கானிஸ்தான் போர் தொடர்பான நடவடிக்கைகள் அடங்கிய அமெரிக்க ராணுவத்தின் 92 ஆயிரம் ஆவணங்களைக் கசிய விட்டு, அமெரிக்காவை கலங்கடித்துள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ், பிரிட்டனின் கார்டியன், ஜெர்மனியின் டெர் ஸ்பீஜெல் ஆகிய பத்திரிகைகளின் மூலமாக விக்கிலீக்ஸின் ஆப்கான் போர் தொடர்பான ஆவண விவங்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க ராணுவத்தின் போர்க் குற்றங்கள் தொடர்பான கேள்விகளை எழுப்பியுள்ள இந்த ஆவணங்கள், தாலிபான்களுக்கு பாகிஸ்தான் அரசு உதவி வருவதை பகிரங்கப்படுத்தியுள்ளது.
விக்கிலீக்ஸ் கசிய விட்ட ஆவணங்களில் குறிப்பிடத்தக்க அம்சங்களாவன:
* ஆப்கானிஸ்தானில் தாலிபான்களை ஒழிப்பதற்காக அமெரிக்கா தலைமையில் போர் புரிந்து வரும் நேட்டோ படைகள், பயங்கரவாதிகள் எனக் கருதி அப்பாவி மக்கள் 195 பேரை கொன்றுள்ளது. 174 பேர் காயம் அடைந்துள்ளனர்.
தாலிபான் - பாகிஸ்தான் கூட்டு!
* பயங்கரவாதிகளை ஒழிப்பதற்கு பாகிஸ்தானுடன் கூட்டு சேர்ந்து அமெரிக்கா நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால், அமெரிக்காவுக்கு உதவுவதாக நாடகமாடிக் கொண்டே ஆப்கானிஸ்தானில் தாலிபான் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் உதவி செய்து வருகிறது. இதற்கு, பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. அதிகாரிகளே பயன்படுத்தப்படுகின்றனர்.
(இதனை முழுமையாக மறுத்துள்ளது, பாகிஸ்தான். இதுபற்றி கருத்து கூறியுள்ள அமெரிக்கா, பாகிஸ்தான் உடனான உறவு மிக முக்கியம் என்று அறிவித்திருக்கிறது)
* தாலிபான் பயங்கரவாதியுடன் சேர்ந்து பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யைச் சேர்ந்த அதிகாரி ஒருவர், ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்சாயை படுகொலை செய்ய சதி திட்டம் தீட்டியதாக, 2008 ஆகஸ்ட் மாத ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் 'எஸ் பிரிவு' என்றொரு பிரிவு செயல்படுவதாகவும், அதுதொடர்பான முடிவுகள் எடுக்க அந்தப் பிரிவுக்கு அதிக அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
இந்திய தூதரக தாக்குதல்..
* கடந்த 2008 ஜூலை 7-ம் தேதி காபூலில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது தாலிபான்கள் தாக்குதல் நடத்தினர். இதில் 58 பேர் பலியாகினர். இந்தத் தாக்குதலுக்கு சரியாக ஒரு வாரம் முன்பு, இந்திய தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என போலந்து உளவுத் துறை எச்சரித்தது. இந்தத் தாக்குதலில் பாகிஸ்தானுக்கும் தொடர்புள்ளது.
அமெரிக்கா ரியாக்ஷன்...
ஆப்கான் போர் தொடர்பான ஆவணங்களை பொது இடத்தில் அம்பலப்படுத்தியிருக்கும் செயல், அமெரிக்காவை கடுங் கோபத்துக்கு ஆளாக்கியுள்ளது.
இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ராபர்ட் கிப்ஸ் கூறுகையில், "இத்தகைய ஆவணங்களை வெளியிடுவது, அமெரிக்கா மற்றும் அதனுடைய கூட்டு நாடுகளின் வீரர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவுக்கும். அத்துடன் நாட்டின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாக அமையும்," என்றார்.
அமெரிக்கா ஆய்வு...
இதனை கிரிமினல் செயல் என்று சாடியுள்ள பெண்டகன் செய்தித் தொடர்பாளர் டவே லேபன், "வெளியான ஆவணங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்துவருகிறார்கள். அதன் மூல ஆதாரங்கள் குறித்து ஆராயப்பட்டு வருகிறது. ஒரு சில நாட்களில் முழு பின்னணியும் தெரியவரும்," என்றார்.
முன்னதாக, லண்டனில் செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய 'விக்கிலீக்ஸ்' நிறுவனர் ஜூலியன் அஸ்ஸாஞ்ச், "இந்த ஆவணங்களின் நம்பகத்தன்மை குறித்து சந்தேகப்பட வேண்டியதில்லை. இந்த வெளியீட்டால், அப்பாவி மக்களுக்கு பாதிப்பு ஏதும் வராது என நம்புகிறோம்.
இந்த ஆவணங்கள் எல்லாம் 7 மாதங்களுக்கு முந்தையவை. தற்போதைய சூழல் இடம்பெறவில்லை. எனினும், இது மிக முக்கியத்துவம் வாய்ந்தது," என்றார் ஜூலியன் அஸ்ஸாஞ்ச்.
அமெரிக்க அரசை கலங்கடித்துள்ள விக்கிலீக்ஸ் கசிய விட்ட ஆவணங்கள், சர்வதேச அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விக்கிலீக்ஸ் கசிய விட்ட முழுமையான ஆவணத்தைக் காண... http://wardiary.wikileaks.org/

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’