மக்களுக்கான நலத் திட்டங்களை செயல்படுத்துவதில் அரசியல் இருக்கக்கூடாது என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.
திருவாரூரில் புதிய அரசு மருத்துவக் கல்லூரியை செவ்வாய்க்கிழமை திறந்து வைத்த முதல்வர் கருணாநிதி பேசியது :
திருவாரூர் இன்று விழக்கோலம் பூண்டுள்ளது. தேரோட்ட திருவிழாவுக்கு பிறகு இந்த பெருவிழா நடைபெறுகிறது. திருவாரூரில் தற்போது காணுகின்ற காட்சி கண்களுக்கு குளிர்ச்சியாகவும், கருத்துக்கு இனிமையாகவும் உள்ளது. பள்ளி சிறுவனாக திருவாரூர் வீதிகளில் விளையாட்டுப் பிள்ளையாக இருந்து பெரியாரின் மாணவனாக, அண்ணாவின் தம்பியாக மாறி உங்களுடைய பேர் அன்பால், ஆதரவால், கருணையால் தமிழகத்தை ஆளுகின்ற பொறுப்பை ஏற்றுக்கொண்டு இருக்கிறேன்.
அந்த பொறுப்பை நான் ஒழுங்காக நிறைவேற்ற வேண்டும். நீங்கள் திருப்தி அடையும் வகையில் எங்களுடைய வேலை, கடமை இருக்க வேண்டும்.
அதன் ஒரு பகுதியாக மருத்துவக்கல்லூரி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் ரூ.500 கோடி பணிகள் நடைபெறவுள்ளன். இந்த மண்ணுக்கு மட்டும் அல்ல. மாவட்டத்துக்கு மாவட்டத்துக்கு மட்டும் அல்ல.
தமிழகம் முழுவதும் பல கோடி ரூபாய்களுக்கு திட்டம் நல்வாழ்வுத்துறையில் மட்டும் செலவு செய்யப்படுகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் ரூ.1457 கோடி ரூபாய் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் தற்போது ரூ.3889.41 கோடி ரூபாய்க்கு அரும்பணிகள் ஆற்றப்பட்டு வருகின்றன.
பல்வேறு கட்சிகளைச் சார்ந்த யாவரும் பாராட்டும் வகையில் மக்கள் நல்வாழ்வுத்திட்டமாக திட்டங்களில் எல்லாம் சிகரம் வைத்தது போல கலைஞர் காப்பீட்டுத் திட்டம், 108 அழைப்பு ஆகிய திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன.
நம்மை எதிர்த்து பிரச்சாரம் செய்பவர்கள் கூட மனதுக்குள் பாராட்டிக்கொண்டுதான் வெளியில் விமர்சிக்க முடியும் என்ற அளவிற்கு இந்த திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன.
இது அரசு விழா. இங்கு அரசியல் பேசக்கூடாது. ஆனால், அரசியல் இல்லாமல் அரசு இருக்க முடியாது. வள்ளூவர் கூட அரசியல் என்ற அதிகாரத்தை வகுத்துள்ளார்.
வள்ளுவருக்கே தேவைப்பட்ட அரசியல் அவர் வழி வந்த நமக்கும் தேவைதான். அதே சமயம் மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவதில் அரசியல் இருக்கக்கூடாது.
வெவ்வேறு கருத்துக்களை, முரண்பட்ட கருத்துக்களை கொண்டு இருப்பவர்களும், நாட்டுக்கு ஊருக்கு நன்மை செய்வேண்டும் என்று கூற முழு உரிமை சுதந்திரம் உள்ளது. அந்த உரிமையை எடுத்துக்கொண்டு கம்யூனிஸ்ட் எம்எல்ஏ சிவபுண்ணியம் இங்கே பல்வேறு கோரிக்கைகளை வைத்தார்.
இந்த விழா பாராட்டத்தக்க, வரவேற்கத்தக்க விழாவாக நடைபெறுகிறது. பாராட்டினாலே கட்சியைவிட்டு விலக்கும் நிலை கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு பிரிவில் உள்ளது. ஆனால், விலக்கினாலும் பரவாயில்லை. நல்லதை செய்ய வேண்டும் என்றும், செய்தால் பாராட்டுவேன் என்றும் அதற்காக எங்கும் குரல் கொடுப்பேன் என்றும் சிவபுண்ணியம் வந்து இருக்கிறார்.
நான் அவரை சூழ்ச்சி செய்து மாட்டி விடுவதாக அவர் கருத மாட்டார். ஏன் என்றால் என்னுடைய நல்ல உள்ளம் அவருக்கு தெரியும். அவருடைய தூய உள்ளம் எனக்கு தெரியும்.
மக்கள் நலம் என்று வருகிற போது அதில் கட்சி கிடையாது. வாய்க்கால் வெட்டுவதாக இருந்தாலும் சரி, பாலம் கட்டுவதாக இருந்தாலும் சரி அதில் எல்லோரும் சேர்ந்துதான் செய்ய வேண்டும். ஏனென்றால் அது ஒரு பொதுக் காரியம்.
இதுபோன்ற பொது நிகழ்ச்சிகளில் அரசியல் மாச்சரியங்களை விடுத்து, அரசியலுக்கு அப்பாற்பட்டு கலந்து கொண்டால் தமிழகத்தில் எவ்வளவோ நல்ல காரியங்களை நம்மால் செய்ய முடியும்.
எனக்கு யாரிடத்திலும் மன வருத்தம் கிடையாது. யார் குறை கூறினாலும், குற்றம்சாட்டினாலும் அதில் உண்மை இருப்பது தெரிந்தால், தவறு என்று தெரிந்தால் அதை திருத்திக் கொள்வேன்.
மக்களின் நன்மைகளை மட்டுமே மனதில் பதிய வைத்து நாம் செயல்பட வேண்டும்.
இன்று காலை திருவாரூரில் ஏற்பட்டுள்ள மாற்றம் பற்றி என்னுடைய நண்பர் தென்னனிடம் கூறி பரவசம் அடைந்தேன். திருவாரூர் மட்டுமல்லாமல் எல்லா ஊர்களும் தமிழகத்தில் இத்தகைய வளர்ச்சியை பெற வேண்டும்.
இதை நான் இருந்து பார்க்க முடியவில்லை என்றாலும் கூட இந்த வளர்ச்சிகளை தொடர்ந்து காண அனைவரும் ஆதரவளிக்க வேண்டும்," என்றார் முதல்வர் கருணாநிதி.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’