இலங்கையின் உள்நாட்டுப் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு ஒரு வருடம் பூர்த்தியாகியுள்ள நிலையிலும் தமிழ் மக்கள் தொடர்ந்தும் பல துன்பங்களை அனுபவித்து வருகின்றனர் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஜெயராம் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் இலங்கைத் தமிழ் மக்களின் உண்மை நிலையினை வெளிப்படுத்துவதில் தமிழக முதலமைச்சர் கருணாநிதியும் அவர் சார்பான குழுவினரும் தவறியுள்ளனர் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
ஜெயலலிதாவினால் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார் என்று இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
அந்த அறிக்கையில், யுத்தம் காரணமாக வீடுகளை இழந்த அப்பாவி இலங்கைத் தமிழர்கள் தொடர்ந்தும் முகாம்களிலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர்களில் பெண்கள், அனைத்து விதமான பிரச்சினைகளுக்கும் ஆளாகியுள்ளனர் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்தப் பெண்களைப் பாதுகாக்க வேண்டிய தந்தையர்களும், கணவர்மாரும், சகோதரர்களும் இல்லாத சூழ்நிலையில், பாதுகாப்பு தரப்பினர் முன்னிலையிலான பொது இடங்களில், வெட்ட வெளிகளில், இயற்கை உபாதைகளை கழிக்க வேண்டிய நிலைமைக்கும், குளிக்க வேண்டிய சூழ்நிலைக்கும் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
எமக்கு மிக அருகில் உள்ள நமது தமிழ் சகோதர, சகோதரிகளின் இத்தகைய நிலைமை மனித உரிமை ஆர்வலர்கள், முற்போக்கு நாடுகளின் அரசுக்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் கோபத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், இலங்கைக்கு சென்று அங்குள்ள தமிழ் மக்களின் நிலைமைகளை பார்வையிட்டு வந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணியைச் சேர்ந்த பத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், இலங்கைத் தமிழ் மக்கள் அனைவரும் நலமாக இருக்கிறார்கள் என்ற செய்தியுடன் இந்தியா வந்தடைந்தனர்.
ஆனால், இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதமொன்றை எழுதிய முதலமைச்சர் கருணாநிதி, அம்மக்களின் பிரச்சினைக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
அப்படியாயின், இலங்கை சென்று திரும்பிய குழுவினர் பொய்யான தகவலைத் தெரிவித்திருக்கிறார்கள் என்பது இதிலிருந்தே தெளிவாகத் தெரிகிறது. இந்நிலையில், இலங்கையின் உண்மை நிலையை கண்டறிவதற்காக மற்றுமொரு குழுவை அனுப்புமாறு பிரதமரை கருணாநிதி கேட்டுள்ளார்.
இதன் மூலம் இதற்கு முன்பு அனுப்பப்பட்ட குழுவின் மதிப்பீடு உண்மைக்குப் புறம்பானது என்று முதலமைச்சர் கருணாநிதி ஒப்புக்கொண்டிருக்கிறார்" என்று ஜெயலலிதா வெளியிட்டுள்ள தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’