இலங்கைத் தமிழர்களை கைவிட மாட்டோம்' என்று முதல்வர் கருணாநிதி உறுதியளித்ததாக, இலங்கைத் தமிழ் எம்.பி.க்கள் தெரிவித்தனர். 
சம்பந்தன், சேனாதி ராஜா, சுரேஷ் பிரேமசந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சுமந்திரன் ஆகிய இலங்கை தமிழ் எம்.பி.க்கள்  இன்று சென்னையில், முதல்வர் கருணாநிதியை கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்தனர். 
சுமார் ஒரு மணி நேரம் வரை நீடித்த இந்தச் சந்திப்பு குறித்து இலங்கைத் தமிழ் எம்.பி.க்கள், நிருபர்களிடம் கூறியது:
"முதல்வர் கருணாநிதியை சந்தித்து, இலங்கையில் உள்ள தமிழர்கள் பிரச்னை குறித்து பேசியிருக்கிறோம். ஏற்கெனவே, ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் தீர்வை ஏற்படுத்துவதற்கு இலங்கை அரசு ஆக்கப்பூர்வமான எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. அரசியல் தீர்வு ஏற்படும் என்று 2006-ல் இந்தியப் பிரதமர் வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், இதுவரையில் அது இலங்கை அரசினால் நிறைவேற்றப்படவில்லை. 
இதுதொடர்பாக, இலங்கை அரசுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருந்தும், அவர்கள் இதுவரையில் பேச்சுவார்த்தை நடத்தவில்லை.
இலங்கையில் உள்ள நமது தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் பாதிக்கப்பட்ட, வெளியேற்றப்பட்ட லட்சக்கணக்கான மக்கள் இன்னும் அவரவர் பகுதிகளுக்கு குடியேற்றப்படாமல் இருக்கிறார்கள். அந்தப்பகுதிகளில் எல்லாம் இன்னும் புனரமைப்புப் பணிகள் நடைபெறாமல் உள்ளன. இந்த புனரமைப்புப் பணிகளை மேற்கொள்வதாக இந்திய அரசு நிதியுதவி செய்திருக்கிறது. அதற்காக இந்திய அரசுக்கு நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம்.
ஆனால், வெளியேற்றப்பட்ட தமிழ் மக்கள், ஒரு வருட காலமாகியும் இன்னும் அவரவர் பகுதிகளில் பழைய வாழ்க்கையை ஆரம்பிக்க இயலாத சூழ்நிலையே உள்ளது. ஆனால், வடகிழக்குப் பிரதேசத்திலும், வன்னி பிரதேசத்திலும் பெரும்பாலான இடங்களை ராணுவ மயமாக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. சிங்களர்களும் குடி அமர்த்தப்பட்டு வருகிறார்கள். ஆனால், நமது மக்களுக்குத் தேவையான வீடுகளை கட்டித் தருவதில் இன்னும் பணிகள் மெத்தனமாகவே உள்ளது.
ஒருபுறம் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும்; மற்றொரு புறம் நமது மக்களுக்குத் தேவையான வசதிகள் ஏற்படுத்தித்தரப்பட வேண்டும். எனவே, இந்த நடவடிக்கைகளைச் செயல்படுத்த இந்திய அரசும், தமிழக முதல்வரும் உதவி செய்ய வேண்டுமென்று நாங்கள் உறுதியாகக் கோரிக்கை வைத்திருக்கிறோம்.
எங்களுடைய கருத்துக்களை மிக கவனமாகக் கேட்டுக்கொண்ட, முதல்வர் தன்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்வதாகத் தெரிவித்திருக்கிறார்.
இலங்கைத் தமிழர்களைக் கைவிட மாட்டோம் என முதல்வர் உறுதியளித்ததார். இலங்கைத் தமிழர் நிலை பற்றி தமக்குத் தகவல் வந்து கொண்டிருப்பதாகவும், இன்னும் கூடுதல் தகவல்களைக் கூறினால், அவற்றை சோனியாவின் கவனத்துக்குக் கொண்டு செல்வேன் என்றும் அவர் தெரிவித்தார்.இந்தச் சந்திப்பு எங்களுக்கு மிகவும் திருப்திகரமாக உள்ளது.
இலங்கைக்கு இந்திய அரசு சிறப்புத் தூதரை அனுப்ப வேண்டுமென்ற தமிழக முதல்வரின் கோரிக்கை வரவேற்புக்குரியது. இந்திராகாந்தி காலத்திலேயே முதல்வர் கருணாநிதி இதுபோன்று விசேஷ தூதரை இலங்கைக்கு அனுப்ப வேண்டுமென்று கேட்டார். இப்போதும் கோரிக்கை விடுத்திருக்கிறார். அது நல்ல கருத்து," என்றனர்
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படும் நிகழ்வு, 1983 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக நடைபெறுகிறது. இதற்கொரு முடிவு வர வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம்.
இந்திய பிரதமர் இலங்கையில் அரசியல் தீர்வு காணப்படும் என்று தெரிவித்திருக்கிறார். ஏற்றுக் கொள்ளப்பட்ட அரசியல் தீர்வு இன்னும் ஏற்படவில்லை என்பது அனைவருக்கும் நன்றாகத் தெரியும். அரசியல் தீர்வு ஏற்படாத அதே நேரத்தில், தமிழ் பேசும் மக்கள், அவர்கள் வாழ்ந்த பகுதிகளிலேயே மீண்டும் குடியேற தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டும் என்பது தான் மிக முக்கியமான கோரிக்கையாக இப்போது உள்ளது," என்று இலங்கைத் தமிழ் எம்.பி.க்கள் தெரிவித்தனர்.
                      -
                    

  












1 கருத்துகள்:
கேடு கெட்ட கூத்தணிக்கு யாருடைய கோவணத்திலாவது தொங்கித் திரிய வேண்டி உள்ளது. இருக்கும் கொஞ்ச நஞ்ச தமிழரையும அழிக்க கொலைஞனுடன் கூததடிக்குது. முள்ளிவாய்கால் கொலைவெறியாட்டத்தின் போது இந்த மஞ்சல் காமாலைக்காரன் போட்ட கூத்து மறந்துவிட்டு மறுபடியும் மறுபடியும்....! யாழ்
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’