இலங்கையில் தமிழர் பகுதிகளில் மறுவாழ்வு மற்றும் நிவாரணப் பணிகளை மதிப்பீடு செய்ய சிறப்புப் பிரதிநிதியை அனுப்ப வேண்டும் என்ற தமிழக முதல்வர் கருணாநிதியின் யோசனையை, பிரதமர் மன்மோகன் சிங் ஏற்றுக் கொண்டார்.
இந்தத் தகவலை, திமுகவின் நாடாளுமன்ற கழக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு வெளியிட்டார்.
மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கவுள்ளதையொட்டி,டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் ஆலோசனை நடத்தின.
இதில் திமுக சார்பில் பங்கேற்ற நாடாளுமன்ற கழக குழுத்தலைவர் டி.ஆர்.பாலு, அண்மையில் பிரதமருக்கு முதல்வர் கருணாநிதி அனுப்பிய கடிதம் குறித்து பேசினார்.
அப்போது, " 'இலங்கை அரசு தமிழர் பகுதிகளில் மேற்கொண்ட மறுவாழ்வுப் பணிகளையும், பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ள உண்மையான நிலைமைகளையும் கண்டறியவும் இந்திய அரசு தூதரகம் மூலமாகவோ அல்லது சிறப்பு தூதரை அனுப்புவதன் மூலமாகவோ நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
அத்துடன், பாதிக்கப்பட்ட தமிழர்களின் மறுவாழ்வுக்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் அவர்கள் திருப்தி அடையும் வகையில் அமைய இன்னும் எத்தனை நாட்கள் தேவைப்படும் என்பதையும் அறிந்து வர வேண்டும்,'என்று முதல்வர் கருணாநிதி தனது கடிதத்தில் கூறியிருந்தார்.
அவரது இந்த ஆலோசனையை உடனடியாக செயல்படுத்த தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு இந்திய அரசின் சார்பில் மூத்த அதிகாரிகள் குழுவை நியமித்து, இந்திய அரசு கொடுத்த நிதி இலங்கை தமிழர்களுக்கு முறையாக கிடைத்து அதன் பயனை முழுமையாக அவர்கள் அடைய வேண்டும்.
இலங்கையில் மழைக்காலம் தொடங்கி விட்ட நிலையில் அங்கே தமிழ் மக்கள் அல்லலூறாமல் தடுக்க உடனடியாக இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்," என்று டி.ஆர்.பாலு பேசினார்.
இதற்கு பதிலளித்த பிரதமர் மன்மோகன்சிங், "இந்தியாவின் மூத்த அரசியல் தலைவரான தமிழக முதல்வர் கருணாநிதியின் கோரிக்கை நிச்சயமாக நிறைவேற்றப்படும்.
இந்திய அரசு இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வுக்காக வழங்கப்பட்ட நிதி முறையாக செலவிடப்படுகிறதா என்பதை அறிந்திட அதிகாரிகள் குழுவை நியமித்து, முறைப்படி அனுமதி பெற்று இலங்கைக்கு அனுப்பி வைத்திட நடவடிக்கை எடுக்கப்படும்," என்று உறுதியளித்தார் பிரதமர் மன்மோகன் சிங்.
இலங்கை நிலைப்பாடு...
முன்னதாக, இலங்கை தனது பொறுப்புகளை சரியான முறையில் நிறைவேற்றி வருவதால், மறுவாழ்வுப் பணிகளள ஆய்வு செய்ய சிறப்புத் தூதரை இந்தியா அனுப்ப வேண்டிய அவசியமில்லை என இலங்கை அமைச்சர் டலஸ் அழகப்பெரும பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தமிழ் மக்களின் மறுகுடியமர்வு தொடர்பாக அரசு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாகவும், சிறப்புத் தூதரை இந்தியா அனுப்ப வேண்டாம் எனவும் அவர் கூறியுள்ளார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’