வடக்கு கிழக்கில் வாழும் அனைத்து தமிழ் மக்களும் தமது வாக்குரிமை பெற முழுமையாகத் தம்மைப் பதிவு செய்ய வேண்டும். இந்த வகையில் யாழ் மாவட்டத்தில் வாழும் தமிழ் மக்கள் இடப்பெயர்வுகளுக்கு உள்ளாகி இருப்பதனால் அவர்கள் தமது வாக்காளர் இடாப்பில் தமது பெயரைப் பதிவு செய்யத் தவறக் கூடாது என பவ்ரால் அமைப்பு தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணம், கோபால் வீதியில் அமைந்துள்ள பேராசிரியர் இரா.சிவச்சந்திரனின் இல்லத்தில் ஊடகவியலாளர்களுக்கும் பவ்ரால் அமைப்பின் பிரதி நிதிகளுக்கும் இடையில் சந்திப்பொன்று நேற்று மாலை 5.30 மணியளவில் நடைபெற்றது.
இதன் போது மேலும் தெரிவிக்கப்பட்டதாவது :
"நாட்டில் நல்லாட்சியையும் ஜனநாயகத்தையும் கொண்டுவர வேண்டுமானால் அனைவரும் தமது வாக்குகளைப் பதிவு செய்ய வேண்டும். 18 வயது பூர்த்தி செய்த அனைவரின் பெயரையும் வாக்காளர் இடாப்பில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
தமிழ் மக்கள் வாக்களிக்கிறார்களோ இல்லையோ அனைவரும் தமது வாக்குகளைப் பதிவு செய்ய வேண்டும். குறிப்பாக ஒரு மாவட்டத்தில் வாழ்பவர்கள் தமது மாவட்டத்தில் எந்த வகையான இடையூறுகளும் இன்றி தமது வாக்களிப்புக்கான தரவுகளை, தாம் தற்போது வதியும் கிராம அலுவலர்களிடம் பதிவு செய்து கொள்ள முடியும்.
இது குறித்து நாம் வியாழனன்று, யாழ். மாவட்டத்தின் உதவித் தேர்தல் அலுவலருடன் கதைத்த போது, அவரும் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். சில கிராம அலுவலர்கள் விளக்கமின்மையாலோ அன்றி வேண்டும் என்றோ பொது மக்களை அலைக்கழிக்கின்றார்கள்.
இதனையிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் கவனத்தில் எடுப்பதுடன் பதிவுகளை மேற்கொள்வதற்கு வாக்காளர்களை ஊக்கவிக்கவும் வேண்டும்.
அதேபோன்று, இன்று வெளிநாடுகள் மற்றும் தொழில் நிமித்தம் இரட்டைக் குடியுரிமை உள்ளவர்களும் கூட தம்மை வாக்காளர் இடாப்பில் பதிவு செய்ய உரித்துடையவர்கள். இதனை குடும்பத் தலைவர்கள் கருத்தில் கொள்வது அவசியம்.
பொது மக்களைப் பொறுத்த வரையில் தமது வாக்குரிமைகளை பதிவு செய்யாவிட்டால், எதிர்காலத்தில் பாரிய பின்னடைவுகளை எதிர்நோக்க வேண்டியேற்படும்."
இவ்வாறு அங்கு கூறப்பட்டது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’