வடக்கில் கடந்த காலங்களில் இடம்பெற்ற யுத்த சூழ்நிலையில் கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களின் குடும்பங்களுக்கு உதவ படிப்படியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று ஊடகத்துறை அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
தேசிய சமாதானப் பேரவையின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கு ஊடகவியலாளர்கள், தெற்கு நோக்கிய நல்லெண்ண விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் இவர்கள் இன்று பிற்பகல் அரச தகவல் திணைக்களத்தில் ஊடகத்துறை அமைச்சரைச் சந்தித்து உரையாற்றும் போது இவ்விடயம் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், உயிரிழந்த ஊடகவியலாளர்களுன் குடும்பங்களுக்கான உதவிகளை உடனடியாக மேற்கொள்ளும்போது பல நடைமுறைச் சிக்கல்கள் காணப்படுகின்றன என்றும் படிப்படியாக இதற்கான தீர்வைப் பெற முயற்சிப்போம் என்றும் கூறினார்.
அத்துடன், அனைத்து இன மக்களதும் நல்லுறவு மற்றும் பாதுகாப்பு என்பவற்றுடன் நாட்டு மக்களின் பிரச்சினைகளை வெளிக்கொண்டுவந்து நாட்டின் அபிவிருத்திக்கு ஊடகவியலாளர் உதவவேண்டும். ஊடக அமைச்சர் என்ற வகையில் நான் ஊடகவியலாளர்களுடன் ஒரு ஊடக நண்பனாகவே உள்ளேன். இந்நிலையில், நீங்கள் அனைவரும் இங்கு வந்ததையிட்டுப் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
ஊடகவியலாளர்கள் என்ற வகையில், கடந்த காலங்களில் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டிருப்பீர்கள். இதற்கு மத்தியில் தான் இங்கும் வருகை தந்துள்ளீர்கள். தற்போது வடக்கு கிழக்கில் வரலாறு காணாத அபிவிருத்தி இடம்பெற்று வருகின்றது. இந்த விடயங்களை ஊடகங்கள் வாயிலாக வெளிக்கொண்டு வர வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
அபிவிருத்திகள் தொடர்பான செய்திகளை பிரசுரிக்காத ஊடக நிறுவனங்கள் குறித்து எம்மிடம் முறையிடலாம். யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் வெகு விரைவில் ஊடகப் பிரிவுகளை உருவாக்க நடவடிக்கைகள் எடுக்கவுள்ளோம் என்று அமைச்சர் கெஹெலிய மேலும் கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’