நேற்று முன்தினமிரவு இனந்தெரியாத ஆயுதக்குழு ஒன்று அம்பாறை மாவட்டத்தின் கிராமவாசிகள் சிலரைத் தாக்கியதை அடுத்து அக்கிராமவாசிகள் தங்கள் கிராமங்களைவிட்டு வெளியேறி உள்ளார்கள்.
பொத்துவில், பாணம, ராகம்வெல ஆகிய கிராமங்களுள் நுழைந்த இந்த ஆயுதக்குழுவினர் கிராமவாசிகளைத் தாக்கியதோடு அங்கிருந்த வீடுகளையும் சேதப்படுத்தியுள்ளனர். ராகம்வெலவில் உள்ள வாலுகாராம விகாரையும் தாக்குதலுக்குள்ளானது. தாக்குதலுக்குள்ளானவர்களில் உணவட்டுணே விஜயவன்ச தேரோவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இரவு ஒரு மணியளவில் எங்களை எழுப்பிய ஆயுததாரிகள் விகாரையை விட்டு ஓடிவிடுமாறு எம்மை அச்சுறுத்தித் தாக்கினர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஆயுததாரிகளின் தாக்குதலுக்குள்ளான பாணமவைச் சேர்ந்த முதியான்சலாகே பண்டார கூறுகையில், நள்ளிரவில் வந்த ஆயுததாரிகள் கறுப்புத் துணியினால் தமது முகத்தை மூடி மறைத்திருந்தனர். எம்மை வீட்டுக்கு வெளியே அழைத்த அவர்கள் எம்மைக் கொன்றுவிடப் போவதாக அச்சுறுத்தினர். அவர்களிடம் இரண்டு ரி56 துப்பாக்கிகள் இருந்தன. நான் ஒருவாறு அங்கிருந்து தப்பி வந்து விட்டேன். வரும்போது திரும்பிப் பார்த்தபோது அவர்கள் எங்கும் நெருப்பு வைத்துக் கொண்டிருந்தார்கள். உபாலி அபேநாயக்கா என்ற ஓய்வுபெற்ற படையதிகாரி ஒருவரும் தாக்குதலுக்குள்ளானார். அவர்கள் எங்களைக் கொல்ல வந்தார்கள். நாங்கள் ஒருவாறு அங்கிருந்து தப்பித்தோம். நாங்கள் அங்கிருந்து தப்பி வந்து விசேட அதிரடிப்படை காவலரணில் முறையிட்டோம். ஆனால் அப்பகுதிக்கு செல்வதற்கான அனுமதி தமக்கு இல்லையென்று கூறி அவர்கள் மறுத்து விட்டார்கள். இதேவேளை ஊடகவியலாளர்களை அப்பகுதிக்குச் செல்ல ராகம்வெல பொலிஸார் அனுமதி வழங்கவில்லை என உள்ளுர் ஊடகவியலாளர் அமைப்புக்கள் தெரிவிக்கின்றன.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’