வெலிக்கடை சிறைச்சாலையின் 40 ஏக்கர் காணி விற்பனைக்கு வரவுள்ளது. சிறைச்சாலையை வேறிடத்திற்கு மாற்றப்பட்ட பின்னர் இக்காணி விற்பனை செய்யப்படும் என புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலை முறைமை தொடர்ச்சியான பல மாற்றங்களுக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும் வெலிக்கடை, போகம்பரை, யாழ்ப்பாணம், பொரளை உட்பட பாரிய சிறைச்சாலைகள் அனைத்தும் இடமாற்றம் செய்யப்படவுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
சுமார் 10 பில்லியன் ரூபா செலவில் 2 வருட காலத்தில் இம்மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
வெலிக்கடை சிறைச்சாலை வளாகம் கொழும்பு நகரின் மிகப்பெரிய தனியான காணிகளில் ஒன்றாக உள்ளது. இதை விற்பனை செய்வதன் மூலம் சிறைச்சாலை மறுசீரமைப்புத் திட்டத்திற்கு நிதியை திரட்டிக்கொள்ள சிறைச்சாலை மறுசீரமைப்பு முயற்சிக்கிறது. தனியாரும் இக்காணியை வாங்க முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கான நடவடிக்கைகள் விரைவில் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் கூறினார்.
இதேவேளை யாழ்ப்பாணத்திலுள்ள சிறைச்சாலை பொன்னாலை வீதியிலுள்ள இடத்திற்கு மாற்றப்படவுள்ளது. கண்டி போகம்பரைச் சிறைச்சாலை பள்ளேகலவுக்கு மாற்றப்படவுள்ளது.
1844 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட சிறைச்சாலைகள் திணைகளம் இலங்கையின் மிகப்பழைய அரச திணைக்களங்களில் ஒன்றாக விளங்குகிறது.
தற்போது இலங்கை சிறைச்சாலைகளில் 11,000 பேருக்கு மாத்திரமே இடமுள்ள போதிலும் தற்போது சுமார் 30,000 கைதிகள் அவற்றில் உள்ளனர்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’