இன்று நடந்த நடிகர் சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் இலங்கைக்குப் படப்பிடிப்புக்குப் போயுள்ள நடிகை ஆசினுக்கு கண்டனம் தெரிவித்து ராதாரவியும், சத்யராஜும் மட்டும் பேசினார்கள்.
ராதாரவி பேசுகையில், இலங்கைக்கு நடிகர்- நடிகைகள் செல்லக்கூடாது என்று திரைப்பட சங்கங்கள் முடிவு செய்து அறிவித்துள்ளன. அதை மீறி அசின் இலங்கை சென்றிருக்கிறார். அவர் கேரளாவை சேர்ந்தவர். எல்லோருக்கும் இன உணர்வு வேண்டும்.
அசின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டது. ஆனால் அதை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று சங்கத்தின் தலைவர் சரத்குமார் கேட்டுக் கொண்டார். அதற்காக அசின் இதுவரை சரத்குமாரிடம் தொடர்பு கொண்டு ஒரு நன்றி கூட தெரிவிக்கவில்லை.
இலங்கை சென்றதற்காக அசின் நடிகர் சங்கத்தில் நேரில் ஆஜராகி வருத்தம் தெரிவித்து கடிதம் கொடுக்க வேண்டும். இனிமேல் இலங்கைக்கு நடிகர்-நடிகைகள் யார் செல்வதாக இருந்தாலும் நடிகர் சங்கத்தில் சொல்லி விட்டுத்தான் செல்ல வேண்டும் என்றார்.
சத்யராஜ் பேசுகையில், அசின் இலங்கை சென்றது மட்டுமின்றி ராஜபக்சே மனைவியுடன் சேர்ந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார். அதை பார்த்த போது ரத்தம் கொதித்தது. ரத்தக் கண்ணீர் வடிந்தது.
இலங்கை என்பது ரத்த பூமி. அங்கு நடிகர்-நடிகைகள் செல்லக் கூடாது. நடிகர் கருணாஸ் இலங்கையில் முருகன் கோவிலுக்கு செல்ல முடிவு செய்திருப்பதாக கூறியுள்ளார். கருணாசை நான் கேட்டுக் கொள்கிறேன். தயவு செய்து நீங்கள் இலங்கை செல்ல வேண்டாம். அங்கு தனித்தமிழ் ஈழம் மலர்ந்த பிறகு நீங்கள் போகலாம். நானும் வருகிறேன். நான் ஒரு நாத்திகனாக இருந்தாலும் தமிழ் ஈழநாடு உருவான பிறகு அங்குள்ள கோவிலுக்கு செல்ல தயாராக இருக்கிறேன்.
இலங்கை சென்று தான் சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்க வேண்டாம் அப்படி ஒரு நிலை வந்தால் உயிரையே விடலாம் என்றார் அவர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’