அமெரிக்க மக்கள் மத்தியில் அதிபர் ஒபாமாவின் செல்வாக்கு சரிந்து வருவதாக கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன.
பாராளுமன்ற தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், வெளியான இந்த முடிவால் ஒபமாவின் ஜனநாயக கட்சி அதிர்ச்சி அடைந்துள்ளது.சில ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, உலகம் முழுவதும் எதிரொலித்தது. எனவே, அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஒபாமா, 18 மாதங்களுக்கு முன் அதிபர் பதவிக்கு வந்தார். அப்போது, அவர் மீது மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர்.`பொருளாதார நெருக்கடியை ஒபாமா சமாளிப்பார்' என 60 சதவீத அமெரிக்கர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். ஆனால், அவர் ஆட்சிக்கு வந்த பிறகும் நிலைமை மாறவில்லை. சமீபத்தில், 90 வங்கிகள் திவாலாகின. மேலும், வேலையில்லா பிரச்சினையும் அதிகரித்துள்ளது. இந்த சூழ்நிலையில், வருகிற நவம்பர் 2-ந் தேதி அன்று அமெரிக்க பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
10-க்கு 6 பேர் அதிருப்தி
எனவே, அமெரிக்க மக்களிடையே இரண்டு தனித்தனி கருத்துக் கணிப்புகள் நடத்தப்பட்டன. `வாஷிங்டன் போஸ்ட்-ஏ.பி.சி. நியுஸ்' இணைந்து தனியாகவும், `சி.பி.எஸ். நிïஸ்' தனியாகவும் கருத்துக் கணிப்புகளை நடத்தின. அப்போது, அமெரிக்காவில் உள்ள 10 பேரில் 6 பேர் ஒபாமா மீது நம்பிக்கை இழந்துள்ளது தெரிய வந்தது.
பொருளாதார பிரச்சினையை ஒபாமா கையாளும் விதத்தை 54 சதவீதம் மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. 43 சதவீதம் பேர் மட்டுமே அவரை ஆதரிக்கின்றனர். ஒரு ஆண்டுக்கு முன், இது 61 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதுபோல, ஒபாமாவின் முடிவுகள் எடுக்கும் திறமை மீது 57 சதவீதம் மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர்.
இரண்டு கருத்துக் கணிப்புகளின் முடிவுகளுமே, ஏறத்தாழ சம நிலையில் உள்ளன. அதாவது 53 முதல் 60 சதவீதம் பேர் வரை, ஓபாமா மீது அதிருப்தியில் இருக்கின்றனர்.
நவம்பரில் பாராளுமன்ற தேர்தல்
நவம்பர் மாதம் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள சூழ்நிலையில், கருத்துக் கணிப்பு முடிவுகளால் ஒபமாவின் ஜனநாயக கட்சி அதிர்ச்சி அடைந்துள்ளது. தற்போது, அமெரிக்க பாராளுமன்றத்தில் ஜனநாயக கட்சியை விட எதிர்க்கட்சியான குடியரசு கட்சிக்கு (முன்னாள் அதிபர் புஷ் கட்சி) 39 இடங்கள் அதிகமாக உள்ளன.
இதனால், ராணுவத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு, பருவநிலை மாற்றம் குறித்த சட்டம், குடியுரிமை சீர்திருத்தம் போன்ற சட்ட மசோதாக்களை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதில் கடும் சவாலை ஒபாமா நிர்வாகம் எதிர் கொண்டது. குடியரசு கட்சி எம்.பி.க்களின் ஆதரவைப் பெற்றே அவற்றை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
மேல்-சபையிலும் (செனட்) இந்த நிலைமையே நீடிக்கிறது. எனவே, தற்போதைய நிலைமை நீடித்தால் அடுத்த பாராளுமன்றத்திலும் குறைவான இடங்களே ஜனநாயக கட்சிக்கு கிடைக்கும் என்று கருதப்படுகிறது. அதனால், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்துக்குள் பொருளாதார ரீதியாக நல்ல முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் ஒபாமா அரசு உள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’