புகைப் பிடிப்பதை நாகரிகச் செயலாக காட்டும் விளம்பரங்கள் பெருகிவருகின்றன |
வளரும் நாடுகளில் இளம் பெண்களிடம் சிகரெட்டுக்களை சந்தைப்படுத்துவதற்காக சிகரெட் தயாரிப்பு நிறுவனங்கள் மனச்சாட்சியற்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உலக சுகாதார நிறுவனம் குற்றஞ்சாட்டுகிறது.
புகையிலை உற்பத்திகளுக்கான விளம்பரங்கள் மற்றும் அனுசரணைகளுக்கான சாத்தியங்கள் செல்வந்த நாடுகளில் சுருங்கிவரும் நிலையில், புகையிலை தொழிற்துறை தற்போது தமது கவனத்தை வளரும் நாடுகளை நோக்கி திருப்பியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.குறிப்பாக அதிக பணம் செலவு செய்யும் இளம் பெண்களை இலக்குவைத்து அவை தமது சந்தையை திறந்துவருகின்றன.
இந்த வருடம் உலக புகையிலை ஒழிப்பு தினத்தை அனுட்டிக்கும் வகையில் புகைக்கும் பெண்களை இலக்கு வைத்து உலக சுகாதார நிறுவனம் தனது நடவடிக்கைகளை முடுக்கிவிட்டிருக்கிறது.
புகைக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
கடந்த பல தசாப்தங்களாக புகைபிடிக்கும் ஆண்களின் எண்ணிக்கைதான் பெண்களை விட அதிகம். ஆனால் நைஜீரியா, உருகுவே, சிலி மற்றும் பல்கேரியா போன்ற சில வளரும் நாடுகளிலும், வேகமாக வளரும் பொருளாதாரங்களைக் கொண்ட சில நாடுகளிலும், ஆண்களை விட தற்போது புகை பிடிக்கும் இளம் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது என உலக சுகாதார நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
உலக சுகாதார நிறுவனம் கவலை புகைபிடிப்பது என்பது நாகரிகமானது, கவர்ச்சிகரமானது என்ற ஒரு தோற்றத்தை வறிய நாடுகளில் புகையிலை உற்பத்தி நிறுவனங்கள் ஏற்படுத்தி வருகின்றன, அதுவும் டிஸ்கோ நடன நிகழ்ச்சிகளிலும், களியாட்ட நிகழ்வுகளிலும் சிகரெட்டுக்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. |
"பெண்களுக்கான சஞ்சிகைகளும், நாகரிக சஞ்சிகைகளும் ஏனையவையும், பெண்களை புகையிலை நுகர்வுக்குள் இட்டுச் செல்வதை எதிர்ப்பதே இந்த வருடம் எங்களது பிரச்சாரத்தின் நோக்கம்." என்கிறார் உலக சுகாதார நிறுவனத்தைச் சேர்ந்த டக்ளஸ் புச்சர்.
ஆசிய நாடுகளின் நிலை
உலக சுகாதார நிறுவனம் மேற்கொண்ட கணிப்பீடுகளின்படி, உலகில் புகைபிடிக்கும் நூறு கோடி பேரில் முக்கால்வாசிக்கும் அதிகமானோர் சில ஆசிய நாடுகளிலேயே வாழ்ந்து வருகிறார்கள்.
மேல்தட்டு இந்தியப் பெண்களிடம் புகைக்கும் வழக்கம் அதிகரிக்கிறது |
இந்தோனேசியா, வியட்னாம் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளிலும் அதிக வீதமான மக்கள் புகை பிடிக்கிறார்கள்.
பல ஆசிய நாடுகளைப் போன்று சீனாவிலும் ஆண்களே ஆகக்கூடுதலாக புகை பிடிக்கின்ற போதிலும், அங்கெல்லாம், மிகவும் படித்த இளம் பெண்கள் இந்த புகைபிடிக்கும் கலாச்சாரத்துக்குள் ஈர்க்கப்படும் போக்கும் அதிகரித்து வருகின்றது.
மேலும் பல பெண்கள், மற்றவர்கள் புகை பிடிப்பதால் தங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளால் இறக்கிறார்கள்.
சீனாவில் அரசாங்கமே புகையிலை உற்பத்தியில் ஏக போக உரிமையை கொண்டிருக்கிறது.
இந்தோனேசியாவில் தேசிய வருமானத்தில் சுமார் பத்து வீதம் சிகரெட் வணிகத்தினாலேயே கிடைக்கிறது.
பாதிப்புகள் புள்ளிவிவரம்
புகைப்பதன் மூலமும், புகையிலையை மெல்லுவதன் மூலமும் உலகில் வருடாந்தம் 50 லட்சம் பேர் இறக்கிறார்கள்.
அதாவது ஒவ்வொரு 6 வினாடிக்கு ஒருவர் இவ்வாறு இறக்கிறார்.
பல நாடுகளில் புகைத்தலை ஒழிப்பது என்பது பொருளாதார காரணங்களால் நீண்ட காலம் பிடிக்கும் ஒரு நடவடிக்கையாகவே இருக்கிறது.
பல நாடுகளில் ஒரு பக்கம் சுகாதார சேவைக்கு பெருமளவு பணத்தைச் செலவு செய்யும் அரசாங்கங்கள், மறுபக்கம் சிகரட் விற்பனையின் மூலம் பெரும் வரிப்பணத்தையும் வருமானமாக பெறுகின்றன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’