தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் வேறு நாடுகளிடம் இருந்து ஆயுதப் பயிற்சி பெற்று கடல் வழியாக இலங்கைக்கு வந்து தாக்குதல் நடத்தக் கூடும் என்று பாதுகாப்பு அமைச்சுச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ அச்சம் தெரிவித்துள்ளார்.
அவர் முல்லைத்தீவில் பாதுகாப்புப் படையினரின் முதலாவது பிராந்திய தலைமைக் காரியாலயத்தைத் திறந்து வைத்து உரையாற்றியபோதே இவ்வாறு கூறினார்.அவர் அங்கு தெரிவித்தவை வருமாறு:
”தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு மிகவும் பலமாகவே உள்ளது.ஆனால் அவர்கள் இராணுவ நடவடிக்கையில் ஈடுபடக் கூடிய நிலையில் தற்போது இல்லை.
குறிப்பாக பிரித்தானியாவில் உள்ள உலகத் தமிழர் பேரவை,அமெரிக்காவை தளமாகக் கொண்டு செயற்பட்டு வரும் நாடு கடந்த தமிழீழ அரசு,நோர்வேயில் உள்ள தமிழ் குழுக்கள் புலிகளின் கொள்கையைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றன.
ஆகவே இராணுவ இராணுவ மற்றும் பொலிஸ் புலாய்வுப் பிரிவினரும் அரச படையின் ஒவ்வோர் பிரிவினரும் எப்போதும் உஷாராக இருக்க வேண்டும். புலிகளிடம் இருந்து நாட்டைப் பாதுகாக்கும் நடவடிக்கையில் கடற்படையினரின் பங்கு மிகவும் காத்திரமானது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் வேறு நாடுகளிடம் இருந்து ஆயுதப் பயிற்சி பெற்று கடல் வழியாக இலங்கைக்கு வரக் கூடும்.அவர்களிடம் இருந்து நாட்டைப் பாதுகாக்க வேண்டிய முக்கிய பொறுப்பு கடற்படையினரைச் சேரும்.
இராணுவத்தினர் பொதுமக்களுடன் ந்ல்லுறவைப் பேண வேண்டும். புலிகளின் உளவுத் துறையின் பலத்தை படையினர் உணர்ந்து கொள்கின்றமை அவசியம்.ஏராளமான தியாகங்களுக்கும், பேரின்னல்களுக்கும் இடையில் படையினால் நாட்டில் அமைதி நிலைநாட்டப்பட்டிருக்கிறது.
அந்த அமைதியைத் தொடர்ந்தும் பேணிப் பாதுகாக்க வேண்டும். நாட்டை மீண்டும் இருளடந்த யுகத்துக்கு கொண்டு செல்லாமல் பாதுகாக்கும் முக்கிய பொறுப்பு படையினருடையது.
கடந்த காலங்களில் முகாம்களில் கடமையாற்றும் படையினருக்குப் போதிய வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருக்கவில்லை.
அவருடைய கடமைகளைத் திறம்படச் செய்யக் கூடிய வகையில் அனைத்து வசதிகளும் உடனடியாகச் செய்து தரப்படும்.”
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’