வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 3 ஜூன், 2010

தடுத்து வைக்கப்பட்டுள்ள துவாரகாவை விடுவிக்கக் கோரி மனு

பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரால் பேராதனைப் பல்கலைக்கழகத்திற்குள் வைத்து கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கிளிநொச்சியைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவி இராசையா துவாரகாவை விடுதலைச் செய்யக்கோரி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நேற்று பிற்பகல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவி துவாரகாவின் பெற்றோர் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.
பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது மகளை நேற்று நன்பகல் பார்வையிட்ட பெற்றோர் அதனைத் தொடர்ந்து இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் மனுவொன்றினையும் தாக்கல் செய்துள்ளனர்.
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் உதுல் பிரேமரத்னவினால் இதற்கான ஏற்பாடுகள் மற்றும் ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு மனுவைத் தாக்கல் செய்ய வந்த துவாரகாவின் பெற்றோர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில், விடுதலைப் புலிகளுடன் தொடர்பு கொண்டார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் தமது பிள்ளை கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தனது பிள்ளை சிறையில் உரிய முறையில் நடத்தப்படுவதில்லை எனவும் குறிப்பிட்டனர்.
தொடர்ந்தும் கண்ணீர் மல்க கருத்து தெரிவித்த பெற்றோர் நிலைமை இப்படியே சென்றால் தனது பிள்ளை மரணித்துவிடும் நிலை ஏற்படும் எனவும் ஆகையால் தயவு செய்து அவரைக் காப்பற்றி விடுதலைப் பெற உதவுமாறும் கேட்டுக்கொண்டார்.
அதுமாத்திரமன்றி கிளிநொச்சியில் பிறந்த தனது மகள் கிளிநொச்சியிலேயே வளர்ந்து பாடசாலையில் விளையாட்டு மற்றும் கல்வி என்பவற்றில் சிறப்பு சித்தி பெற்றதாகவும் இதனால் அன்று கிளிநொச்சியில் தலைவராக திகழ்ந்த வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் தனது மகள் சான்றிதழ் மற்றும் பதக்கத்தையும் பெற்றதாகவும் குறிப்பிட்டார்.
இவ்வாறு விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் கையால் சான்றிதழ் மற்றும் பதக்கம் பெற்றது ஓர் குற்றமா? என கேள்வி எழுப்பிய பெற்றோர், அப்பகுதியின் தலைவர் என்ற ரீதியில் யார் பதக்கம் மற்றும் சான்றிதழ்களைக் கொடுத்திருந்தாலும் வாங்கிக்கொள்ள வேண்டியது தமது கடமை எனவும் சுட்டிக்காட்டினர்.
இந்த ஒரு காரணத்தினால் தனது மகள் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு மிகவும் கஷ்டமான நிலையில் சிறையில் தமது காலத்தைக் கழித்து வருவதாகவும் குறிப்பிட்டனர்.
இதனால் அவரின் கல்வியையும், எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு அவர் குற்றமற்றவர் என்ற ரீதியில் விடுதலைச் செய்யப்படவேண்டும் எனவும் துவராகாவின் பெற்றோர் ஊடகவியலாளர்களிடம் குறிப்பிட்டனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’