ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் அவர்கள் இன்று (08) அவசரகாலச் சட்ட விவாதத்தில் கலந்து கொண்டு ஆற்றிய உரை இணைக்கப்பட்டுள்ளது
இங்கே நாங்கள் பிரச்சினைகளைப் பற்றித் தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பதில் எந்தப் பிரயோசனமும் மக்களுக்கோ நாட்டுக்கோ கிடைக்கப்போவதில்லை. அந்தப் பிரச்சினைகள் தீரப்போவதுமில்லை.அவலங்களைச் சொல்லிக் கொண்டிருப்பதாலும் அரசாங்கத்தையும் பிறரையும் குறைசொல்லிக் கொண்டிருப்பதாலும் எந்த நன்மையும் மக்களுக்கும் நாட்டுக்கும் கிடைத்து விடாது.
இன்றைய சர்வதேச அரசியல் பொருளாதாரப் போட்டிகளில் வெளியுலகம் இலங்கையை முற்றுமுழுதாக விழுங்கி விடவே முயற்சிக்கிறது. வல்லரசு நாடுகளுக்கிடையிலான சந்தைப் பொருளாதாரப் போட்டியில் இலங்கையை தமது நலன்களுக்காகவும் தேவைகளுக்காகவும் பயன்படுத்தவே அவை விளைகின்றன.
இதில் கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு என்ற வேறுபாடுகள் எல்லாம் கிடையாது. இந்த வணிக ஆதிக்கப் போட்டிகளின் விளைவுகள்தான் உள்நாட்டிலும் தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. நடந்த போரும் சரி போருக்குப் பின்னரான நிலைமைகளிலும் சரி இந்தத் தாக்கங்கள் இருக்கின்றன.
இந்த நிலைமையில் இலங்கைக்கு வரும் நெருக்கடி என்பது சகலருக்கும் வருகின்ற நெருக்கடியாகவே இருக்கும். அதில் தமிழ் சிங்கள முஸ்லிம் என்ற பேதங்கள் இருக்கமாட்டாது. எனவே, இதனைச் சகலரும் புரிந்து கொள்வது அவசியம்.
இலங்கைக்கு வரும் ஆபத்து என்பது எல்லோருக்குமான ஆபத்தாகும். இலங்கைக்கு வருகின்ற நெருக்கடி எல்லோருக்குமான நெருக்கடியாகும்.
எனவே இந்த நெருக்கடிகளை நாம் ஒன்றிணைந்தே - எங்களுக்கிடையிலான பிரச்சினைகளையும் விவகாரங்களையும் பேசித்தீர்த்தே - நாம் இலங்கையர் என்ற அடிப்படையிலேயே - எங்களுடைய நெருக்கடிகளை அகற்றிக் கொள்ள முடியும்.
எந்த விவகாரங்களையும் பற்றி முதலில் நம்பிக்கையுடன் பேசுவது கலந்துரையாடுவது முக்கியம். பிரச்சினைகளைப் புரிய வைப்பது அந்தப் பிரச்சினைகளைப் புரிந்து கொள்வது சகிப்புணர்வுடனும் மேன்மையாகவும் விட்டுக் கொடுப்பது, சிலவற்றை நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் ஏற்றுக்கொள்வது என்று ஒரு புதிய வழியை ஏற்படுத்தினால் பல பிரச்சினைகள் தீர்ந்து விடும்.
இது சகல தரப்பினருக்கும் பொருந்தும். அதுமட்டுமல்ல இதுதான் இன்றைய தேவையுமாகும். இதைச் சகலதரப்பினரும் கட்டாயம் பின்பற்றியே ஆகவேண்டும்.
இன்று சர்வதேச சமூகத்தின் மொழியானது முரண்பாடுகளைக் களைவதைப் பற்றியதாகவே இருக்கிறது. முரண்பாடுகளைக் களைவதற்கான கல்வியை உலகம் இன்று பாடசாலைகளில் கூட கற்பிக்கின்றது.
எங்களுடைய பாடசாலைகளிலும் முரண்பாடுகளைக் களைவதற்கான கல்வியை பிள்ளைகள் படிக்கிறார்கள். ஆனால் எமது நாட்டில் ஏன் இந்த நாடாளுமன்றத்தில் கூட முரண்பாட்டை வளர்க்கும் விதமாகவே பேச்சுகளும் சிந்தனைகளும் அமைந்து கொண்டிருக்கின்றன.
இது உண்மையில் வருத்தந்தருகிறது. கவலையை அளிக்கிறது. முரண் அரசியல் துருவ நிலைப்பட்ட போக்குகள் எல்லாம் மீண்டும் அழிவுகளையும் நெருக்கடிகளையுமே தரும். நாடு இப்போதுதான் மூச்சு விடுகிறது. மக்கள் இப்பொழுதுதான் கொலைகளைப் பற்றிய அச்சம் இல்லாமல் சாவைப் பற்றிய கவலைகள் இல்லாமல் இருக்கின்றனர்.
அழிவுகளுக்கும் அபாயங்களுக்கும் காரணமான நிலைமைகளைத் தூண்டி உருவாக்கிவிட்டு முரண்பாடுகளை தணிந்து விடாமல் ஊக்கப்படுத்திக் கொண்டு தீர்வைப் பற்றிப் பேசுவது மக்களை ஏமாற்றும் நடவடிக்கையாகும்.
மனப்பூர்வமாக தீர்வு முயற்சியை விரும்பினால் அதற்காக அக்கறையோடும் நம்பிக்கையோடும் பொறுப்புணர்வோடும் பாடுபடவேண்டும். அதற்கான சூழலை உருவாக்க வேண்டும். தீர்வுக்கான வழிவகைகளைக் காணவேண்டும்.
அரசியல் நெருக்கடிதான் அவசரகால நிலைமைக்குக் காரணம். அவசரகாலச் சட்ட விவாதத்தைப் புறக்கணிப்பதால் மட்டும் நெருக்கடி நிலைமை தீர்ந்து விடாது. நெருக்கடி நிலையை அவசரகாலச் சட்ட விவாதத்துக்குரிய சூழலை முதலில் நீக்க வேண்டும். அதுதான் புத்திபூர்வமான நடவடிக்கை. அதுதான் இந்த நாட்டுக்கும் மக்களுக்கும் தேவையானது.
யார் எப்படி பாதகமாக நடந்து கொண்டாலும் அதை மதிநுட்பத்தால் வென்று விடலாம். அந்த மதிநுட்பத்தை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். அதைப் பயன்படுத்த வேண்டும்.
ஆகவே மக்கள் இன்னும் துன்பப்படுகிறார்கள் அவர்களுடைய அவலம் தீரவில்லை. அவர்கள் இன்னும் நெருக்கடிக்குள்ளேதான் இருக்கிறார்கள் என்றால் அதற்கு சகலரும்தான் பொறுப்பு. இங்கே இருக்கின்ற சகலருக்கும் மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். மக்களுடைய வாக்குகளைப் பெற்றே இங்கே எல்லோரும் வந்திருக்கிறோம்.
ஆகையால் மக்களுடைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக இங்கே நாம் சிந்திப்போம். நாடாளுமன்றத்தில் கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்துவதில் இதுவரையில் பின்பற்றிய அணுகுமுறைகளை நாம் நிச்சயம் மாற்ற வேணும்.
குறுகிய சுயநலம் மிக்க சொந்த மக்களுக்கே விரோதமான அந்நிய ஆதிக்க சக்திகளுக்கு வாய்ப்பளிக்கின்ற அரசியலைத் தயவு செய்து விட்டுவிடும்படி அவ்வாறான அரசியலைச் செய்யும் தரப்பினரைக் கேட்கின்றேன்.
நமது மக்களை நாம் மந்தைகளாகவும் உலகம் புரியாதவர்களாகவும் தோற்றுப்போனவர்களாகவும் வைத்திருக்க முடியாது. இருக்கும் வாய்ப்புகளை நோக்கி மக்களை அழைத்துச் செல்ல வேண்டும். அதற்காகத்தான் இந்த நாடாளுமன்ற அமர்வுகள் நடக்கின்றன. அது முடியாதென்றால் பின்னர் எதற்காக நாடாளுமன்றத்துக்கு நாம் வரவேணும்?
இருக்கின்ற வாய்ப்புகளையும் வளங்களையும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனுபவிக்கலாம் ஆனால் அதை மக்கள் அனுபவிக்கக்கூடாது என்று சிந்திப்பது எத்தகைய நாகரீகமாகும்? அது எவ்வாறான நியாயமாகும்?
இப்போது இங்கே அவசரகாலச்சட்ட விவாதம் நடக்கிறது. இந்த விவாதத்தில் கலந்து கொண்டு இந்த சட்டத்தை தொடரவேண்டிய தேவை என்ன அந்தத் தேவையை எப்படி இல்லாமற் செய்வது என்று பேசவேண்டுமே தவிர கலந்து கொள்ளாமல் விடுவதன் மூலம் சட்டம் நீங்கிவிடுவதில்லை. இதுதான் கடந்த காலத்திலும் நடந்தது.
தமிழ் பேசும் மக்களின் சார்பாகவும் இலங்கையின் அனைத்து மக்களின் சார்பாகவும் நான் செயற்படுகின்றேன் என்ற உணர்வு வரும்போது பல பிரச்சினைகள் தீர்ந்து விடும். அந்த உணர்வுதான் இன்று தேவை. இன்றைய இலங்கை என்பது நாளைய தலைமுறைகளுக்கான இலங்கை. அந்த இலங்கை அமைதியானதாகவும் இந்த மாதிரியான நெருக்கீடுகள் அற்றதாகவும் இருக்கவேண்டும்.
முடியாது என்றிருந்த போர் இன்று முடிந்திருக்கிறது. நாளைக்கு இதேமாதிரி தீராது என்று சிலர் எண்ணியிருக்கும் இனப்பிரச்சினையும் தீர்ந்து விடும். அதற்கான வாய்ப்புகள் நிறையவே இருக்கின்றன.
இப்போதுள்ள பிரச்சினை கடந்த காலங்களைப் போல வாய்ப்புகளை தவறவிடுவா என்பதைப் பற்றியதே. எதிர்முரண் போக்கில் எப்போதும் எதிர்ப்பாகவும் முரணாகவும் நின்றால் வாய்ப்புகள் தவறியே போகும். எனவே இதைப் பற்றி மக்கள் சிந்திக்கவேண்டும்.
இந்த இடத்தில் இந்தச் சந்தர்ப்பத்தில் மக்களின் பிரதிநிதிகள் மக்களின் ஆணையைப் பெற்றவர்கள் தங்களுடைய கடமைகளைச் சரிவரச் செய்யவேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
பிரச்சினைகளைப் பற்றிப் பேசிப்பேசியே காலத்தைக் கடத்தி மக்களை மீண்டும் மீண்டும் அழிவுப்பாதையிலும் நெருக்கடிக்குள்ளும் சிக்கவைக்காமல் அந்த மக்களுக்கு உருப்படியாகவும் நன்றியாகவும் நாம் ஏதாவது செய்யவேண்டும். அத்தகையை ஒரு நல்ல மரபை - இனியாவது புதிதாகக் கைக்கொள்ளுமாறு எல்லோரையும் கேட்டுக் கொள்கிறேன்.
போருக்குப்பின்னர் மக்கள் புதிதாக வாழத் தொடங்கியிருக்கிறார்கள். அவர்களுக்கு பல பிரச்சினைகள் இருக்கின்றன. அந்தப் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கான பல நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்து வருகிறது. நாங்கள் மக்களின் தேவைகளையும் பிரச்சினைகளையும் நேரில் அந்தப் பகுதிகளில் நின்று அவதானித்து வருகிறோம். அரசாங்கத்தின் பல அமைச்சர்களும் மக்கள் மீள் குடியேறிய பகுதிகளுக்கு நேரில் விஜயம் செய்து மக்களைச் சந்தித்து, அவர்களுக்கான பல தேவைகளைளும் நிறைவேற்றி வருகின்றனர். மக்கள் மீண்டும் அமைதியான ஒரு வாழ்க்கையை வாழ விரும்புகிறார்கள்.
தங்களுடைய குடும்ப உறுப்பினர்கள் மீண்டும் ஒன்றாகச் சேர்ந்திருக்கும் நாட்களை எதிர்பார்த்திருக்கிறார்கள். அதை அவர்களுக்கு நாம் எல்லோரும் உருவாக்கிக் கொடுக்க வேண்டும். கல்வி மருத்துவம் போக்குவரத்து மின்சாரம் தொழில் வாய்ப்புகள் போன்றவற்றுக்காக சிறப்பு வேலைத்திட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
போர் முடிந்து ஓராண்டுக்குள் எண்பது வீதமானவர்கள் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கான அடிப்படை வசதிகள் மீள் கட்டுமானப்பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதைப்போல ஏறக்குறைய மூவாயிரத்துக்கும் அதிகமான விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர். இதைப் போல இன்னும் துரிதகதியில் ஏனைய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
இதேவேளை யாழ்ப்பாண மாவட்டத்தில் உயர்பாதுகாப்பு வலயப் பகுதிகளான வலிகாமம் வடக்கு வடமராட்சி கிழக்கு போன்ற பகுதிகளிலும் கிளிநொச்சி மாவட்டத்தின் சில பகுதிகளிலும் மக்கள் இன்னும் மீள் குடியேற்றப்படவில்லை. ஆனால் இந்த மக்களையும் விரைவில் அவர்களுடைய சொந்த இடங்களில் குடியமர்த்துவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள அரசாங்கத்திடம் கேட்டிருக்கிறோம். இந்த மக்களின் நிலைமையைக் குறித்து அரசாங்கத்துக்கு தெளிவு படுத்தியிருக்கின்றோம். ஆகவே இந்த மக்களும் விரைவில் குடியமர்த்தப்படுவார்கள் என நம்புகின்றேன்.
இவ்வாறு குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு தொழில் வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கவும் தீர்மானித்திருக்கிறோம்.














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’