வடக்கு மக்களின் அவல நிலைமைகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியும் முக்கிய பொறுப்பாளி என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயாகமூர்த்தி முரளீதரன் எனப்படும் கருணா அம்மான் தெரிவித்துள்ளார்.
யுத்தத்தை நிறுத்த வேண்டுமெனக்கோரி தாம் புலிகள் அமைப்பிலிருந்து வெளியேறிய போதிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யுத்தத்தை முன்னெடுப்பதற்கு புலிளுக்கு ஊக்கமளித்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வன்னி மக்களின் நிலைமைகள் திருப்தியடையக் கூடியவகையில் இல்லை என்பது உண்மை என்றபோதிலும், குறைகளை மட்டும் கண்டுபிடிப்பதில் அர்த்தமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குற்றம் கண்டுபிடிப்பது மிகவும் இலகுவானது எனவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் குறைகளைக் கண்டுபிடிப்பதில் கூடுதல் ஆர்வம் காட்டாது, தமிழ்மக்களது பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் நடவடிக்கைகளில் முனைப்புக்காட்ட வேண்டும். வடக்கு கிழக்கு மாகாணம் பிரிக்கப்பட்டமைக்கு புலிகளே பொறுப்பு. இரண்டு மாகாணங்களாக செயற்படுவதில் தவறில்லை. இரண்டு மாகாண அலகுகளாக இயங்குவதன் மூலம் அதிகளவு வளங்களை ஒதுக்கீடு செய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகிறது. மக்களின் மீள்குடியேற்றம் நடவடிக்கைகள் குறித்து தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. புத்தளம் பிரதேசத்தில் தங்கியுள்ள முஸ்லிம் இடம்பெயர் மக்களை தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். சிறுசிறு கட்சிகளை உருவாக்கி அதன்மூலம் தமிழ்மக்களுக்கு சேவையாற்ற முடியும் என்ற கோட்பாட்டில் எனக்கு உடன்பாடில்லை. அரசாங்கத்துடன் இணைந்து கொள்வதன் ஊடாக அதிக வளங்களை ஒதுக்கீடு செய்துகொள்ள முடியும். தமிழ் மக்களுக்கு இந்நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் நோக்கிலேயே நான், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை உருவாக்கினேன். கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானுடன் எனக்கு எவ்வித முரண்பாடுகளும் கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’