பூரண அமைதி நிலவும் நாட்டில் முன்னர் இடம்பெற்ற யுத்த விளைவுகளை மீள் பரிசீலிப்பதில் பயனில்லை. இன்று உலக நாடுகளில் அநியாயமாகப் பலர் தினமும் கொல்லப்படுகின்றனர். இதை தடுப்பதற்கு உலக நாடுகள் முன்வர வேண்டுமென பிரதமர் டி.எம்.ஜயரத்ன வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மடவளை மதீனா தேசிய பாடசாலையில் அஷ்ரப் கேட்போர் கூடத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 15 ஆவது வருட ஒன்று கூடலின் போது பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது,
ஊடகவியலாளர்கள் மீது பல்வேறு அழுத்தங்களும் மிரட்டல்களும் இடம்பெறுவதாகக் கூறப்படுகிறது. இதில் உண்மையில்லை. இலங்கையில் சிங்கள, தமிழ், முஸ்லிம், மலே, பறங்கிய இனங்கள் ஐந்தும் பௌத்தம், சமயக் கருத்துக்களை முறையாக கடைப்பிடிக்க வேண்டும். கொடூர யுத்தத்தை வெற்றி கொண்ட ஒரே நாடு இலங்கை என்ற வகையில் சில நாடுகள் எம்மீது பொறாமை கொண்டுள்ளனவா என்ற ஐயம் நிலவுகிறது.
இன்று பல உலக நாடுகளில் அநியாயமாக பலர் தினமும் கொல்லப்படுகின்றனர். இதை தடுக்க உலக நாடுகள் முன்வர வேண்டும். அதை புறம் தள்ளி விட்டு பூரண அமைதி நிலவும் நாட்டில் யுத்தத்தின்போது ஏற்பட்ட விளைவுகளை மீள் பரீசிலிப்பதில் பயன் இல்லை. ஊடகங்கள் தவறுகளை சுட்டிக்காட்டுதல் வேண்டும். நாம் அதனை ஏற்று தவறைத் திருத்திக் கொள்ள வேண்டும். ஆனால் தேவையற்ற பிழையான விடயங்களை திரும்பத் திரும்ப எழுதி அதனை பிரசாரமாக்கக் கூடாது.
ஏனெனில் தொடர்ந்து ஒன்றை உள்ளத்தில் திணித்து அதன் எதிர்த்தாக்கத்தை தாராளமாக்கி விடக் கூடாது. சமூக விரோத செயல்களை அடிக்கடி எழுதி பிரசார மேடையாக்கி சமூகத்தை வழிகெடுக்க காரணமாக மாறக் கூடாது. இன்று பல உலக நாடுகள் ஊடக சட்ட விதிகளைப் பின்பற்றுகின்றன. இதுபோல் இலங்கையிலும் ஊடக விதிகளை நாம் அனுசரித்து நடக்க முயற்சிக்க வேண்டும். ஊடகவியலாளர்கள் மீது பல்வேறு அழுத்தங்களும் மிரட்டல்களும் இடம்பெறுவதாகக் கூறப்படுகிறது. இதில் உண்மையில்லை. 30 வருட யுத்தம் காரணமாக பல்வேறு சம்பவங்கள் இடம்பெற்றன. இதில் ஓரிரு ஊடகவியலாளர் சம்பந்தப்பட்டிருக்கலாம். அவ்வாறான 30 வருட நீண்ட கால யுத்தத்தில் நடந்த ஓரிரு சிறு சம்பவங்கள் பெரிதுபடுத்தப்பட அவசியமில்லை.
இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் தமிழ் மொழி பேசிய போதும் மற்ற நாடுகளில் வெவ்வேறு மொழிகள் பேசுகின்றனர். அந்த வகையில் முழு உலக முஸ்லிம்களும் ஒரே இனமாகின்றனர். எவன் இஸ்லாத்தை விட்டு நீங்கினானோ அவன் முஸ்லிமாக இருக்க முடியாது. எனவே சகலரும் இதுபோல் தங்கள் சபயக் கருத்துக்களை அனுசரித்தல் வேண்டும். இவ்வைபவத்தில் பிரதி அமைச்சர் பைஸர் முஸ்தபா, நாடாளுமன்ற அங்கத்தவர்களான ஏ. எச். எம். அஸ்வர், எம். எச். ஏ. ஹலீம் உட்பட பலர் உரையாற்றினர்.ஊடகத்துறையுடன் தொடர்புபட்ட நீண்ட காலம் சேவை செய்த 10 பேரும் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து ஊடகவியலாளர்களும் கௌரவிக்கப்பட்டனர். காலம் சென்ற ஊடகவியலாளர் ஐ. ஏ. ரஸாக் நினைவாக ஐ. ஏ. ரஸாக் அரங்கம் என பெயரிடப்பட்டு இவ்வைபவம் நிறைவடைந்தது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’