வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 28 ஜூன், 2010

முறையான அழைப்பு விடுத்தால் ஒற்றுமை குறித்து பேசத் தயார்-தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படுவது தொடர்பில் முறையான அழைப்பு விடுக்கப்படின் அது குறித்து பரிசீலிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராகவே இருக்கின்றது. எனினும் தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமை என்ற அடிப்படையை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஏற்றுக் கொள்கின்றாரா என்று கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி எழுப்பினார்.

தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு தீர்வினை எட்டுவதற்கான தமிழ்க் கட்சிகளின் கூட்டு நடவடிக்கைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து கொள்ள வேண்டும் என்று ஈ.பி.டி.பி. யின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருப்பது தொடர்பில் கேட்டபோதே சுரேஷ் எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் பல அமைப்புக்களைக் கொண்ட ஒரு பாரிய அரசியல் சக்தியாக இருக்கின்றது. இந்நிலையில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஒருமித்த கருத்துக்களோடு பேசப்படுமாயின் அதுவே சிறந்ததாகும்.
தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமை என்பது தமிழ் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயமாகும். ஆனாலும் இந்த அடிப்படையை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஏற்கனவே நிராகரித்திருந்தார். இந்நிலையில் தற்போது அவரது நிலைப்பாடு என்னவாக இருக்கின்றது என்பது தெரிய வேண்டும். அதாவது சுய நிர்ணய உரிமை என்ற அடிப்படையையும் அது தொடர்பிலான நகர்வுகளையும் அவர் ஏற்றுக் கொள்கின்றாரா எனக் கேட்க விரும்புகிறேன்.
எமது சமூகத்துக்கான தீர்வுகள் தொடர்பில் ஒருமித்து செயற்பட வேண்டியது சிறந்தது. எனினும் நோக்கமும் முன்னெடுப்புகளும் ஒன்றானதாகவே அமைய வேண்டும். அந்த வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு அழைப்புக்கள் ஏதும் விடுக்கப்படும் பட்சத்தில் அது தொடர்பில் கூட்டமைப்பின் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’