பாடசாலை கரப்பந்தாட்ட அணிகளுக்கான தேசிய பயிற்சி முகாம் 2010 இன்றைய தினம் யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமானது. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன) |
இன்று காலை ஆரம்பமான இப்பயிற்சி முகாமில் தேசிய கரப்பந்தாட்ட சம்மேளனத் தலைவரும் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் பிரதி அமைச்சருமான டிலான் பெரேராவின் அழைப்பின் பேரில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.
சுமார் 30 பாடசாலைகளைச் சேர்ந்த 200 மாணவ மாணவிகள் பங்கு கொள்ளும் இப்பயிற்சி முகாமானது 2015ம் ஆண்டில் சர்வதேச போட்டிகளில் பங்கு பற்றும் பொருட்டு வடபகுதி வீர வீராங்கனைகளை தயார்படுத்தும் ஓர் ஆரம்ப முயற்சி என்பது குறிப்பிடத்தக்கது. இக்கரப்பந்தாட்ட பயிற்சி முகாமிற்கு இலங்கையின் பிரபல வர்த்தக நிறுவனமான டி.எஸ்.ஐ தனது முழுமையான அனுசரணையினை வழங்கியுள்ளது.
இன்றைய நிகழ்வில் தலைமையுரையாற்றிய பிரதி அமைச்சர் டிலான் பெரேரா அவர்கள் வடபகுதி விளையாட்டுத்துறை வளர்ச்சியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஆற்றிவரும் பணிகளை வெகுவாக பாராட்டினார். கடந்தகால யுத்த அனர்த்தத்தினால் சீரழிந்து போன வடபகுதியை மீளமைத்து அபிவிருத்தி செய்வதில் மட்டுமல்ல விளையாட்டுத்துறை வளர்ச்சியிலும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் முழு அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதையிட்டு தான் பெருமிதம் அடைவதாகவும் டிலான் பெரேரா அவர்கள் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பாடசாலை அணிகளுக்கான தேசிய பயிற்சி முகாமை யாழ்ப்பாணத்தில் நடாத்துவதற்காக பிரதி அமைச்சர் டிலான் பெரேரா அவர்களுக்கு தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டதுடன் இதற்கு முழு அனுசரணை வழங்கும் டி.எஸ்.ஐ. நிறுவனத்திற்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார். அத்துடன் கரப்பந்தாட்ட பயிற்சி மத்திய நிலையமாக யாழ் மத்திய கல்லூரி தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்ததுடன் வடக்கு - தெற்கின் உறவுப்பாலமாக விளையாட்டுத்துறையும் நிச்சயம் விளங்கும் என்ற நம்பிக்கையினையும் வெளிப்படுத்தினார்.
இன்றைய இந்நிகழ்வில் முக்கிய அம்சமாக கரப்பந்தாட்ட துறைக்கான பெறுமதி வாய்ந்த உபகரணங்கள் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் பிரதி அமைச்சரினால் யாழ் கரப்பந்தாட்ட அணியின் தலைவர் மற்றும் செயலாளரிடம் கையளிக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து சகல விளையாட்டு வீர வீராங்கனைகளும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கும் மற்றும் பிரதி அமைச்சர் உள்ளிட்ட பிரமுகர்களுக்கும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.
மேற்படி நிகழ்வில் பாடசாலைகளுக்கான தேசிய கரப்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் நிஹால் பெர்ணான்டோ செயலாளர் சுனில் செனவிரட்ன யாழ் மாவடட பாராளுமன்ற உறுப்பினர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் டி.எஸ்.ஐ. நிறுவனத் தலைவர் அனுர சேனாநாயக்க யாழ் மாவட்ட கரப்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் பி. ஏகாம்பரம் செயலாளர் மனோகரன் யாழ் மத்திய கல்லூரி அதிபர் ஓங்காரமூர்த்தி யாழ் வேம்படி மகளிர் தேசிய பாடசாலை அதிபர் திருமதி பொன்னம்பலம் தென்னிலங்கை பயிற்றுவிப்பாளர்கள் விளையாட்டுத்துறை பொறுப்பாசிரியர்கள் மற்றும் பாடசாலை அணிகளின் வீர வீராங்கனைகள் பெருமளவில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’