வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 27 ஜூன், 2010

தமிழக சட்டசபை காங். தலைவர் சுதர்சனம் மாரடைப்பால் மரணம்

தமிழக சட்டசபை காங்கிரஸ் தலைவரும், பூந்தமல்லி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான சுதர்சனம் கோவை ஆஸ்பத்திரியில் நேற்று இரவு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 67. அவரது உடலுக்கு முதல்-அமைச்சர் கருணாநிதி உள்பட தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.

சுதர்சனம் எம்.எல்.ஏ.

தமிழக சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவராகவும், பூந்தமல்லி தொகுதி எம்.எல்.ஏ.வுமான டி.சுதர்சனம் கோவையில் நடைபெற்று வரும் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக வந்திருந்தார். முதல் 2 நாள் மாநாட்டில் கலந்து கொண்ட அவர் கோவை ரேஸ்கோர்சில் உள்ள காங்கிரஸ் பிரமுகர் வீட்டில் தங்கி இருந்தார்.
இந்தநிலையில் 24-ந் தேதி நள்ளிரவு அவருக்கு `திடீரென்று' உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சிறுநீருடன் ரத்தம் கலந்து வந்ததால் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. உடனே அவர், அவினாசி ரோட்டில் உள்ள கே.எம்.சி.எச். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு உடனடியாக சிறிய ஆபரேசனும் செய்யப்பட்டது.
தகவல் அறிந்ததும் முதல்-அமைச்சர் மு.கருணாநிதி, துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய மந்திரிகள் ஆ.ராசா, ஜி.கே.வாசன், உள்பட பலர் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்து அவரை பார்த்தனர்.
துணை முதல்-அமைச்சர் ஸ்டாலின் நேற்று 2-வது நாளாக மருத்துவமனைக்கு சென்று, சுதர்சனம் எம்.எல்.ஏ.வுக்கு அளிக்கப்பட்டு வரும் மருத்துவ சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து அவரது உடல் நிலையை கண்காணிக்குமாறு இருதய நிபுணர் டாக்டர் நரசிம்மனுக்கு துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.
அதைத்தொடர்ந்து டாக்டர் நரசிம்மன் தனது ஐதராபாத் பயணத்தை ரத்து செய்து விட்டு, கோவை மருத்துவமனையில் தங்கி சுதர்சனம் எம்.எல்.ஏ. உடல்நிலையை கண்காணித்து வந்தார்.

மரணம்

டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் சுதர்சனம் எம்எல்.ஏ. நேற்று மாலையில் மிகவும் கவலைக்கிடமாக இருந்தார். தொடர்ந்து டாக்டர்கள் அவரது உடல் நிலையை கண்காணித்து வந்தனர்.
இந்தநிலையில் நேற்று இரவு 8.30 மணிக்கு திடீரென்று சுதர்சனத்துக்கு மாரடைப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அவரது உயிர் பிரிந்தது. அதை அறிந்ததும் ஆஸ்பத்திரியில் இருந்த காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

முதல்-அமைச்சர் அஞ்சலி

சுதர்சனம் எம்.எல்.ஏ.வின் மரணம் பற்றிய தகவல் கிடைத்ததும் முதல்-அமைச்சர் கருணாநிதி விரைந்து சென்று சுதர்சனம் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய மந்திரி மு.க.அழகிரி ஆகியோரும் சுதர்சனம் உடலுக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.
மேலும் மத்திய மந்திரிகள் ஆ.ராசா, காந்தி செல்வம், மற்றும் எம்.பிக்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, சபாநாயகர் ஆவுடையப்பன், அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரை முருகன்,பொன்முடி,எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ஐ.பெரியசாமி, ஏ.வா.வேலு., தங்கம் தென்னரசு பெரியகருப்பன், சாமிநாதன், மதிவாணன், பூங்கோதை, கீதாஜீவன், தமிழரசி, முன்னாள் எம்.பி. மு.ராமநாதன், எம்.எல்.ஏ.க்கள் காயத்திரி தேவி, பீட்டர் அல்போன்ஸ், கோவை தங்கம், ராஜசேகர், விடியல் சேகர் ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள்.
அவருடைய உடல் இன்று சென்னை கொண்டு வரப்படும் என்று குடும்பத்தினர் தெரிவித்தனர்.

வாழ்க்கை குறிப்பு

மரணம் அடைந்த டி.சுதர்சனம், 1943-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6-ந்தேதி பிறந்தவர். அவருடைய சொந்த ஊர், காஞ்சீபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் தாலுகா, தென்னேரி அருகில் உள்ள பண்ருட்டி கிராமம். ஆகும். எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்த சுதர்சனம், மாணவர் காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ், மாவட்ட காங்கிரஸ் என கட்சியில் பல்வேறு பதவிகளை வகித்து படிப்படியாக உயர்ந்தவர்.
கடந்த சட்டசபை தேர்தலில், பூந்தமல்லி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சுதர்சனம், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டார். ஏற்கனவே 1991, 1996, மற்றும் 2001-ம் ஆண்டு நடை பெற்ற தேர்தல்களிலும் போட்டியிட்டு இவர் எம்.எல்.ஏ.வாக தேர்ந்து எடுக்கப்பட்டார்.
67 வயதான சுதர்சனம், பொது சேவை மற்றும் சமூக சேவைகளில் பெரிதும் ஈடுபாடு கொண்டவர். தமிழ்நாடு செங்கல் ஓடு உற்பத்தியாளர்கள் சங்கம், தர்மா நாயுடு கல்வி அறக்கட்டளை மற்றும் பூந்தமல்லி நிலவள வங்கியின் தலைவராக பணிபுரிந்தவர்.
திருமணம் ஆன அவருக்கு 3 மகன்கள் உள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’