கொழும்பு துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இரசாயன கொள்கலனில் ஏற்பட்ட தீ விபத்தை அடுத்து கசிந்த வாயு அப்பிரதேசமெங்கும் பரவியமையினால் குழந்தைகள்,சிறுவர்கள் உட்பட அப்பகுதியை சேர்ந்த மக்கள் பல்வேறு உடல் உபாதைகளுக்கு முகம்கொடுத்தனர். கரும் புகையுடன் வாயு கசிந்தமையினால் பலர் மூச்சுத்திணறலுக்கு உள்ளாகியதுடன் தொண்டை எரிவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மூச்சுth திணறலுக்கு முகம்கொடுத்த சிறுவர்கள் பலர் வாந்தி எடுத்ததாகவும் கண் எரிவுக்கும் உள்ளாகியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் உயிர் ஆபத்துகள் எதுவும் ஏற்படவில்லை.கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்திற்கு பின்புறமாக நிறுத்தி வைக்கப்படும் துறைமுகப் பகுதியில் களஞ்சியப்பட்டிருந்த கொள்கலனிலேயே நேற்றிரவு 7.45 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இரசாயன கொள்கலனில் ஏற்பட்ட தீ விபத்தை அடுத்து அதிலிருந்து கசிந்த வாயு கந்தக வாசத்துடன் கடல் காற்றோடு கலந்து அப்பிரதேசமெங்கும் பரவியது. நாட்டில் நிலவும் மோசமான காலநிலையினால் காற்றின் வேகம் நேற்றிரவு சற்று அதிகமாக காணப்பட்டமையினால் வாயு மிக வேகமாக பரவத்தொடங்கியது.
துறைமுகத்தில் சுமார் நூறு அடிக்கு மேல் கரும்புகை மண்டலம் மேலெழுந்ததுடன் வாயு சுமார் இருநூறு மீற்றருக்கு அப்பால் பரவியுள்ளது. இதனால் கொழும்பு கொச்சிக்கடை, கொட்டாஞ்சேனை, உள்ளிட்ட பிரதேசங்களைச் சேர்ந்த மக்களே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் மூச்சுத் திணறலிலிருந்து தம்மை காப்பாற்றிக்கொள்வதற்காக மூக்குக் கவசங்களை போட்டுக் கொண்டனர். அப்பகுதியில் மாடிக்கட்டிடங்கள் மற்றும் உயரமான வீடுகளில் இருந்தோர் தங்களுடைய வீடுகளின் ஜன்னல்கள் கதவுகளை அடைத்துவாயு வீட்டிற்குள் உட்புகாமல் தடுக்க முயற்சித்தனர். வீடுகளுக்குள் உட்புகுந்த வாயுவை வெளியேற்றுவதற்கு மக்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் அம்முயற்சிகள் கைகூடவில்லை. இதனையடுத்து சிலர் வீட்டிலிருந்த காற்றாடிகளை மிகவேகமாக சுழல விட்டு வாயுவை வீட்டிற்குள்ளிருந்து வெளியேற்றுவதற்கு முயற்சித்தனர்.
செவ்வாய்க்கிழமையான நேற்று கொச்சிக்கடை பொன்னம்பலவாணேஸ்வரர், புனித அந்தோனியார் தேவாலய இரவு வழிபாட்டுக்குச் சென்றிருந்த பக்தர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்தனர். பலரும் வழிபாடுகளை இடைநடுவிலேயே ஆலயத்திலிருந்து வெளியேறினர்.
வாந்தி, கண் எரிவு, மூச்சுத்திணறலுக்கு உள்ளான மக்களில் எவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கவோ அல்லது சிகிச்சைப்பெற்று செல்லவோ இல்லை என்று கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் உடல் உபாதைகளுக்கு உள்ளான பலர் அப்பிரதேசங்களில் இருக்கின்ற தனியார் வைத்தியசாலைகளில் தற்காலிகமாக சிகிச்சை பெற்றுக்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தை கேள்வியுற்று மூன்று தீயணைப்பு கருவிகளுடன் துறைமுகத்திற்கு சென்ற தீயணைப்பு படையினர் தீயை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு முயற்சித்த போதிலும் கடற்காற்றின் வேகம் அதிகரித்திருந்தமையினால் மூன்று மணித்தியாலங்களாக தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாமல் போனது.
இதனால் அப்பிரதேச மக்களில் சிலர் அல்லோல கல்லோலப்பட்டு செய்வதறியாது வீடுகளை இழுத்து பூட்டிவிட்டு தலைநகருக்கு அண்மையிலுள்ள தங்களுடைய உறவினர்கள் நண்பர்களின் வீடுகளுக்கு சென்றுவிட்டனர்.
உடனடியாக விரைந்து செயற்பட்ட பாதுகாப்பு படையினர் மேலதிக படையினரை வரவழைத்து பிரதேசத்தின் பாதுகாப்பை பலப்படுத்தி வெளியாரை செல்வதற்கு அனுமதிக்கவில்லை. வாயு கசிவினால் அப்பகுதியிலிருந்த உணவுகள் உட்பட சகல வியாபார ஸ்தலங்களும் இழுத்து மூடப்பட்ட இதனால் இரவு சாப்பாட்டை கடைகளில் உண்போர் பெரிதும் சிரமப்பட்டனர்.அச்சத்தினால் வீட்டில் அடுப்பை பற்றவைக்க முடியாத நிலைமையும் ஏற்பட்டது.
இந்நிலையில் ஸ்தலத்திற்கு சென்றிருந்த தீயணைப்பு படையினர் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் தீயை இரவு 11.30 மணியளவில் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததாகவும் தீப்பற்றிய இரசாய கொள்கலனிலிருந்து எவ்வகையான இரசாயன பதார்த்தம் வெளியானது என்பது தொடர்பில் தெரியவில்லை என்றும் தெரிவித்தனர்.
தீ விபத்து இயற்கையாகவே ஏற்பட்டதா அல்லது ஏதாவது சதிமுயற்சியா என்பது தொடர்பில் பாதுகாப்பு தரப்பினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’