வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 3 மே, 2010

வாக்களிக்கும் ஜனநாயக உரிமை குறித்து தமிழ் மக்கள் அக்கறை செலுத்த வேண்டும் :மனோ கணேசன்


தமிழ் மக்கள் அரசியல் வாதிகளைக் குற்றம் சுமத்துவதைவிட தாம் தமது ஜனநாயக உரிமையான வாக்களிக்கும் உரிமையைச் சரியாக பயன்படுத்தியுள்ளோமா என்பதை ஒவ்வொருவரும் நினைத்துப் பார்க்க வேண்டும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.
ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸின் மேதினக்கூட்டம் அட்டன் அஜந்தா விருந்தகத்தில் இடம்பெற்ற போது தலைமையேற்றுப் பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த மேதினக் கூட்டத்தில் ஜனநாயக தொழிலாளர் காங்கிஸின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் ,உதவிச்செயலாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான முரளிரகுநாதன் உட்பட பலர் உரையாற்றினர்.

மனோகணேசன் தொடரந்து பேசுகையில் கூறியதாவது,

"நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தின் ஊடாகத்தான் மக்களுக்குச் சேவையாற்ற முடியுமென்று நான் கருதியதில்லை.எந்தப்பதவியில் இருந்தாலும் என்னால் மக்களுக்கு சேவையாற்றக்கூடிய தகுதி இருக்கின்றது.
கொழும்பு மாவட்டத் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய நான் அரசியல் உரிமையற்று வாழுகின்ற கண்டி மாவட்டத்தமிழ் மக்களுக்காக குரல்கொடுப்பதற்காகவே கண்டி மாவட்டத்தில் போட்டியிட்டேன். இந்த மாவட்டத்தில் 1994 ஆம் ஆண்டிற்குப்பிறகு தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதித்துவமொன்று இல்லாத காரணத்தினால் இந்த மாவட்டத்தைச்சேர்ந்த தமிழ் மக்கள் அரசியல் அனாதையாக உள்ளனர் என்பதை உணர்ந்து அவர்களுக்கு நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அடிப்படையிலேயே நான் கண்டி மாவட்டத்தில் கடந்த பொதுத்தேர்தலில் போட்டியிட்டேன்.
கொழும்பு மாவட்டத்தில் நான் போட்டியிருந்தால் அமோகமாக வெற்றிப்பெற்றிப்பேன் என்பதை நான் சொல்லித்தான் தெரியவேண்டியதில்லை.இவ்வாறானதொரு நிலையில் நான் கண்டி மாவட்டத்தில் போட்டியிட்ட போதும் எமக்குச் சுதந்திரமாக பிரசாரங்களில் ஈடுபட முடியாத நிலைமை காணப்பட்டது.
நாவலப்பிட்டி,கம்பளை ,உட்பட கண்டி மாவட்டத்தில் தமிழ் மக்கள் செறிந்து வாழுகின்ற பகுதிகளில் எமக்குச் சுதந்திரமாக தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட முடியாத நிலைமை ஏற்பட்டது.
எனினும் நான் துணிந்து நாவலப்பிட்டி போன்ற பகுதிகளுக்குச் சென்று அங்கு கட்டவிழ்க்கப்பட்டிருந்த வன்முறை மற்றும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டதன் மூலமாக அங்கு நிலவிய அநீதிகளை வெளியுலகிற்கு கொண்டுவந்தேன்.
எனினும் கண்டி மாவட்டத்திலுள்ள 85 ஆயிரம் தமிழ் வாக்காளர்களில் சுமார் 37 ஆயிரம் வாக்காளர்கள் மாத்திரமே வாக்களிப்பில் கலந்துகொண்டுள்ளனர்.ஏனையவர்களின் அக்கறையற்ற நிலைமையால் கண்டி மாவட்டத்தின் தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டுள்ளமையை நான் கவலையுடன் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
அதேபோல நுவரெலியா மாவட்டத்தில் ஒன்றரை இலட்சம் தமிழர்களும், கொழும்பு மாவட்டத்தில் சுமார் ஒரு இலட்சம் தமிழர்களும் வாக்களிப்பில் கலந்து கொள்ளாத காரணத்தினால் தான் இந்த மாவட்டங்களில் தமிழர் பிரதிநித்துவம் குறைவடைய காரணமென்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
எனவே தமிழ் மக்கள் அரசியல் வாதிகளைக் குற்றம் சுமத்துவதைவிட தாம் தமது ஜனநாயக உரிமையான வாக்களிக்கும் உரிமையைச் சரியாக பயன்படுத்தியுள்ளோமா என்பதை ஒவ்வொருவரும் நினைத்துப் பார்க்க வேண்டும். எனவே எதிர்கால தேர்தல்களில் மலையகம் உட்பட தென்பகுதி தமிழ் மக்கள் இவ்விடயம் குறித்து உரிய அக்கறை செலுத்த வேண்டும்.
இந்த நிலையில் எனக்கு தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இல்லாவிட்டாலும் மக்களுக்காக நான் தொடர்ந்து துணிவுடன் குரல் கொடுப்பேன்.தமிழ் மக்களுக்கு உரிய அரசியல் விடயங்கள் குறித்து அறிவூட்டும் வகையில் தொடர்ந்து நான் செயற்படுவேன்." எனத் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’