வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 12 மே, 2010

பாசிசத்தின் மீதான வெற்றியின் 65ஆவது ஆண்டு செங்கொடியின் தீர்மானகரமான பங்களிப்பை வரலாற்றைத் திரித்து அழித்திட முடியாது

பாசிசத்தின் மீதான வெற்றி என்பது மனிதகுல நாகரிகத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதிலும், அதனை முன்னெடுத்துச் செல்வதிலும் ஒரு முக்கியமான மைல்கல்லாக விளங்குகிறது.
1917 இல் நடைபெற்ற மகத்தான அக்டோபர் சோசலிஸ்ட் புரட்சி, 1949 சீனப் புரட்சி, பாசிசத்தின் மீதான வெற்றி ஆகிய மூன்றும் 20 ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில் நடைபெற்ற மூன்று முக்கிய நிகழ்வுகளாகும். உண்மையில் இம் மூன்று நிகழ்வுகளும் உலக அளவில் அரசியல் சக்திகளின் புதியதொரு சேர்மானத்தை, உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர் வர்க்கம் அதுவரை கண்டிராத வகையில் ஆதாயங்களைக் கொண்டு வந்தது.

பாசிசத்தின் மீதான வெற்றி, உலகம் முழுவதும் காலனியாதிக்கத்தின் நுகத்தடியிலிருந்த இலட்சக்கணக்கான மக்களின் விடுதலைக்கு இட்டுச் சென்றது. காலனியாதிக்க நாடுகளில் நடைபெற்ற மக்கள் போராட்டங்கள் மற்றும் விடுதலை இயக்கங்களுக்கு முன் மாதிரியாகத் திகழ்ந்து, மக்களின் உரிமைகள் மற்றும் ஜனநாயகம் குறித்த தெளிவான கண்ணோட்டத்தை இம்மக்களுக்கு வழங்கியது. இதன் தொடர்ச்சியாக இந்நாடுகளில் போராட்டங்களில் ஈடுபட்ட மக்களுக்கு எண்ணற்ற அரசியல் மற்றும் பொருளாதார ஆதாயங்களைக் கொண்டு வந்தது.

பாசிசத்தின் மீதான வெற்றி, உலகையே தங்கள் ஆளுகைக்குள் கொண்டுவர வேண்டும் என்று நினைத்த பாசிஸ்ட்டுகளின் எண்ணத்தில் மண்ணைவாரிப் போட்டது. இதன் பொருள், உலகில் பல பகுதிகளில் பயங்கரவாத சர்வாதிகாரத்தை வெளிப்படையாக நிறுவியவர்களை மண்ணைக் கவ்வச் செய்தது மட்டுமல்ல, ஜனநாயக உரிமைகளையும் சமூக உரிமைகளையும் மறுதலித்து வந்த சக்திகளையும் முன்னேற விடாமல் தடுத்து நிறுத்தியது. இட்லரின் நாசிசத்தையும், ஜப்பான் மற்றும் இத்தாலி நாடுகளின் பாசிசத்தையும் இரண்டாவது உலகப்போரில் தோல்வியடையச் செய்ததானது, மனிதகுல நாகரிக வளர்ச்சியை இச்சக்திகள் பின்னோக்கித் தள்ள முயற்சித்ததைத் தடுத்து நிறுத்தியது.

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலகட்டத்தில்தான் உலகின் பல நாடுகள் மனிதகுலத்தின் சமூக உரிமைகளை அடிப்படை உரிமைகளாக சட்டரீதியாக ஏற்றுக் கொண்டன. இன்றையதினம் எந்த ஒரு நாகரிக சமுதாயமும் அவற்றைத் தனித்துப் பிரித்துப் பார்க்க இயலாத அளவிற்கு நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளன. எண்ணற்ற வீரஞ்செறிந்த போராட்டங்களின் மூலமாகக் கிட்டியுள்ள தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகளும் உலகின் பல நாடுகளில் சட்டரீதியாக்கப்பட்டுள்ளன. ‘‘சேமநல அரசு’’ என்பதே, பாசிசத்தின் மீதான வெற்றியின் பின்வந்த ஒரு கருத்தாக்கம்தான்.

இருபதாம் நூற்றாண்டின் இறுதி ஆண்டுகளில், சோவியத் யூனியன் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் சோசலிசம் தகர்ந்த பின், தொழிலாளி வர்க்கம் கடுமையாகப் போராடி வென்றெடுத்த உரிமைகள் ஒன்றன் பின் ஒன்றாக அரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவ்வுரிமைகளில் பல, ஆரம்பத்தில், பல நாடுகளில் சோசலிசம் எழுச்சியுடன் உருவாகி வந்ததை அடுத்து, சோசலிசத்திற்கு மாற்றாக, முதலாளித்துவத்தால் அளிக்கப்பட்டவைகளாகும். சோவியத் யூனியன் தகர்வுக்குப் பின்னர், இவ்வச்சுறுத்தல் இப்போது முந்தைய அளவிற்கு இல்லாது, தணிந்துள்ள நிலையில், முதலாளித்துவம் தன்னுடைய ரத்தவெறி பிடித்த காட்டு மிராண்டித்தனமான லாபவேட்கையை எவ்வித கூச்சநாச்சமுமின்றி மீண்டும் காட்டத் தொடங்கியிருக்கிறது. ஏகாதிபத்திய உலக மயத்தின் கடந்த இருபதாண்டுகள் இதற்குச் சரியான எடுத்துக்காட்டாகும். ஒரு பக்கத்தில் சுரண்டுபவர்களின் கொள்ளை லாபம் பன்மடங்கு அதிகரித்துள்ள அதே சமயத்தில், சுரண்டப்படும் சாமானிய மக்கள் சொல்லொண்ணா துன்ப துயரங்களுக்கு ஆளாகிக் கொண்டிருக்கின்றனர்.

தாங்கள் அடிக்கும் கொள்ளையைத் தொடர்ந்து நிலைநிறுத்திக் கொள்ளவும், அதனை மக்கள் மத்தியில் நியாயப்படுத்தவும், உலக முதலாளித்துவமானது சோசலிசத்திற்கு எதிராக புதியதொரு தத்துவார்த்தத் தாக்குதலைத் தொடுத்திருக்கிறது. உலகில் முதலாளித்துவமே ‘நிலையானது’ என்றும் அதற்கு மாற்றாக வரும் எதுவும் நிலைத்து நிற்காது தூக்கி எறியப்பட்டுவிடும் என்றும் கூறிவருகிறது. இவ்வாறான தத்துவார்த்தத் தாக்குதலுடன், தொழிலாளர் வர்க்கம் அதுநாள் வரை அனுபவித்து வந்த உரிமைகளையும் கொஞ்சம் கொஞ்சமாகப் பறிக்கத் துவங்கியிருக்கிறது. உலக அளவிலும் பல்வேறு நாடுகளிலும் சுரண்டல் மூர்க்கமாகக் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. இதன் விளைவாக முதலாளித்துவம் மிகப் பெரிய அளவில் இலாபத்தை ஈட்டிக் குவிக்கத் தொடங்கியதை அடுத்து, மக்களிடையே பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் மிகவும் கூர்மையாக விரிவடைந் திருக்கின்றன. அதன் காரணமாக பெருவாரியான மக்களின் வாங்கும் சக்தி வீழ்ச்சி அடைந்தது. இவ்வாறு மக்களின் வாங்கும் சக்தி வீழ்ச்சியடைந்ததானது, முதலாளித் துவத்தின் விரிவாக்கத்தையும், பெருகி வந்த அதன் லாபத்தையும் கூட ஒரு வரையறைக்குள் நிறுத்தியிருக்கிறது. ஏனெனில் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களை விற்றால்தானே முதலாளிகளுக்கு லாபம் கிடைக்கும்? உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களை விற்க வேண்டுமானால், மக்களிடம் அவற்றை வாங்குவதற்கான வளங்கள் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாததனால் இந்த அமைப்பு முறையே இன்றைய தினம் நிலைத்து நிற்கமுடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது.

பெருவாரியான மக்களுக்கு மிகவும் மலிவான வகையில் கடன் வசதிகளை அளிப்பதன் மூலம் உலகமயம், இப்பிரச்சனையை சமாளித்திட முன்வந்துள்ளது. அவ்வாறு கடன் பெறுவோர் மீண்டும் அதனைச் செலவு செய்வதன் மூலம் தங்கள் லாபங்களைத் தக்க வைத்துக் கொள்ளலாம் என்று முதலாளித்துவம் நம்புகிறது. இந்த நோக்கத்துடன்தான் எண்ணற்ற வகையில் மக்களுக்குக் கடன் வழங்க உலக நிதிமூலதனம் முன்வந்துள்ளது. ஆயினும் அதனால் நெருக்கடியிலிருந்து மீள முடியவில்லை. இவ்வாறு கடன் வாங்கியோர் தங்கள் பழைய கடன்களை அடைக்கவே அவற்றைப் பயன்படுத்தியதால், புதிதாக அவர்களால் எந்தப் பொருளும் வாங்க முடியவில்லை. உலக முதலாளித்துவத்திற்கு இப்போது ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி என்பது 1930 களில் ஏற்பட்ட மாபெரும் பொருளாதார மந்த நிலைமையை விட மோசமானதாகும். இந்நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக அதிகரித்து வரும் வேலைவாய்ப்பின்மையைப் பற்றியோ, பெருவாரியான மக்களின் வறுமை நிலைமையைப் பற்றியோ கொஞ்சமும் கவலைப்படாமல், முதலாளிகளுக்கு ஆட்சியாளர்கள் பல கோடி டாலர்கள் அள்ளிக் கொடுக்க முன்வந்திருப்பதன் காரணமாக முதலாளித்துவத்திற்கும் ஆட்சியாளர்களுக்கும் எதிராக மக்கள் மத்தியில் அதிருப்தியும் எதிர்ப்புகளும் இயற்கையாகவே அதிகரித்து வருகின்றன.

இந்தப் பின்னணியில்தான், முதலாளித்துவத்திற்கு எதிராக சோசலிச மாற்று மீண்டும் உருவாகி வளர்ந்துவருவதைத் தடுப்பதற்காக, ஏகாதிபத்தியமானது கம்யூனிஸ்ட் எதிர்ப்புப் பிரச்சாரத்தைத் தீவிரமாக முடுக்கிவிட்டுள்ளது. இதில் மிகவும் முக்கியமானது, வரலாற்றைத் திரித்திட, பாசிசத்தை கம்யூனிசத்துடன் ஒப்பிடுவதுடன், சோசலிச மாற்றைக் கொச்சைப்படுத்திடவும் முயற்சிகள் மேற்கொண்டிருப்பதாகும். 2009 ஜூலை 3 அன்று ஐரோப்பாவில் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவுக்கான அமைப்பின் முறையான நாடாளுமன்ற அமர்வு ஒன்றில், கம்யூனிசத்தை பாசிசத்துடன் சமமாகப் பாவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. பாசிசத்தை முற்றிலுமாகத் தோல்வியுறச் செய்த சோவியத் யூனியன் மற்றும் கம்யூனிசத்தின் பங்கினை இருட்டடிப்புச் செய்வதும், வரலாற்றை மூடிமறைத்து கம்யூனிச எதிர்ப்புப் பிரச்சாரத்தை முடுக்கிவிடுவதுமே இவ்வாறு தீர்மானம் கொண்டுவந்ததற்கான முக்கிய நோக்கமாகும். இரண்டாம் உலகப் போரின் வரலாற்றையே மாற்றி எழுதுவதற்கான முயற்சி இப்போது தொடங்கியிருக்கிறது. பாசிசத்தை நிர்மூலமாக்கிய செம்படை மற்றும் சோவியத் மக்களின் துணிவு, வீரம், பேராண்மை மற்றும் தியாகங்களை வரலாற்றின் பக்கங்களிலிருந்து அழித்திட முயற்சித்து வருகின்றனர். இந்தப் போரில் சோவியத் யூனியன் மட்டுமே 2 கோடி உயிர்களைப் பலி கொடுத் திருக்கிறது. இது நேச நாடுகளில் உயிர்நீத்தவர்களின் மொத்த எண்ணிக்கையைப் போல் 40 மடங்காகும். எனவேதான், இவ்வாறு வரலாற்றை மாற்றி எழுத முயற்சிக்கும் கம்யூனிச விரோதிகளின் தத்துவார்த்த போராட்டத்தை எதிர் கொண்டு முறியடித்திடுவோம்.

(தமிழில்: ச.வீரமணி)

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’