சிரச ஊடகம் மீது தாக்குதல் நடத்தியது நான்தான் என்று அமைச்சர் மேர்வின் சில்வா பாராளுமன்றத்திலேயே ஒப்புக் கொண்டுள்ளார். இந் நிலையில் அவர் மீது அரசாங்கம் எடுக்கின்ற நடவடிக்கை என்ன? அமைச்சர்களின் பதில் என்ன? என்று ஐக்கிய தேசிய முன்னணியின் எம்.பி.யும் வேட்பாளருமான டாக்டர் ஜயலத் ஜயவர்தன நேற்று சபையில் தெரிவித்தார்.
நாட்டின் ஜனநாயகம் சவக்குழிக்குள் போடப்பட்டுள்ளது. பொலிஸ் துறை செயலற்றுக் கிடக்கின்றது. அரசாங்கத்தின் ஏகாதிபத்திய நிர்வாகத்துக்கு முடிவு கட்டும் வல்லமை வாக்காளர்களுக்கே இருக்கின்றது. இதனை நாளைய தினம் நிரூபித்துக் காட்டுவார்கள் என்றும் அவர் சொன்னார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடித்துக் கொள்வதற்கான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஜயலத் எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
30 வருட காலமாக இருந்து வந்த துன்பத்தில் இருந்து விடுபட்டுள்ளோம். அது போதுமானது. இனியும் இனவாதம் கைவிடப்பட வேண்டும். தேசப்பற்று பேச வேண்டுமே தவிர இனவாதத்தை தூண்டும் அளவில் எந்தப் பேச்சுக்களும் அமையக் கூடாது.
இன்றைய அரசாங்கத்தின் நிர்வாகத்தையும் அதன் நடவடிக்கைகளையும் மக்கள் நிராகரித்திருக்கின்றனர்.
அரசியலமைப்புக்கு அமைவான சட்டங்கள் பாதுகாக்கப்படவில்லை. தேர்தல்களை நோக்கும் போது தேர்தல்கள் ஆணையாளரின் உத்தரவுகள் நிறைவேற்றப்படுவதில்லை. இதனால் ஆணையாளர் இயலாமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
கருத்து தெரிவிக்கும் சுதந்திரம் பறித்தெடுக்கப்பட்டுள்ளது. ஊடகங்கள் ஒடுக்கப்படுகின்றன. தாக்குதல்களுக்கு இலக்காகின்றன.
சற்று முன்னர் சிரச ஊடகத்தின் மீது தாக்குதல் நடத்தியது நான் தான் என்று அமைச்சர் மேர்வின் சில்வா இந்தச் சபையில் பகிரங்கமாக தெரிவித்துள்ளார். ஊடகங்கள் மீது தாக்குதலை நடத்திவிட்டு அதனை சபையில் வந்து ஒப்புக் கொள்ளும் அளவில் இன்றைய அரசாங்கத்தின் நிர்வாகம் அமைந்துள்ளது. இது தொடர்பில் இங்கு அமர்ந்திருக்கின்ற அமைச்சர்கள் என்ன கூறப் போகின்றனர்? அரசாங்கம் என்ற ரீதியில் எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகின்றது என்று கேட்க விரும்புகிறேன்.
இந்தப் பாராளுமன்றத்துக்கு புத்திஜீவிகளே வர வேண்டும் என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர். ஆளும் தரப்பு என்னை புலி என்று கூறி குற்றஞ்சாட்டியது. அவ்வாறு நான் தவறிழைத்திருந்தால் அது குறித்த நடவடிக்கைகளை எடுக்க முடியும்.
எது எவ்வாறிருந்தாலும் இன்றைய ஏகாதிபத்திய நிர்வாகத்தை இனங்கண்டுள்ள மக்கள் நாளை நடைபெறும் தேர்தலில் சிறந்த முடிவுகளை வழங்கவிருக்கின்றனர் என்பது உறுதியாகும். எதிர்க் கட்சிகளின் குரலை முடக்கி விட வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நோக்கமாக இருக்கின்றது.
இதற்கு மக்கள் இடமளிக்க மாட்டார்கள் என்றார்.
-














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’