வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 24 ஏப்ரல், 2010

ஐ.பி.எல். ஊழல்; நாடாளுமன்றில் அமளி : சோனியா - மன்மோகன் சந்தித்து ஆலோசனை _

ஐ.பி.எல். ஊழல் பற்றி விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கை பற்றி ஆலோசிக்க சோனியா காந்தியின் தலைமையில் நேற்று மாலை காங்கிரஸ் கட்சியின் முக்கிய குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மன்மோகன் சிங்கும் கலந்து கொண்டார். இருவரும் இது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினர் என டில்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொழில் அதிபர் லலித் மோடியைத் தலைவராகக் கொண்ட ஐ.பி.எல். அமைப்பு (இந்தியன் பிரீமியர் லீக்) 3ஆவது ஆண்டாக இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகளை நடத்தி வருகிறது. சமீபத்தில் மத்திய மந்திரி சசிதரூர் தனது காஷ்மீர் காதலி சுனந்தாவுக்கு கொச்சி அணியின் பங்குகளை வாங்கி கொடுத்த விவகாரத்தால், அவர் பதவியை இழந்தார்.
இதன் பின்னர், இந்த அணிகளில் மத்திய விவசாய மந்திரியும் தேசியவாத காங்கிரஸ் தலைவருமான சரத் பவார், அவரது கட்சியைச் சேர்ந்த மந்திரி பிரபுல் படேல் ஆகியோரின் குடும்பத்தினரும் முதலீடு செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து பரபரப்பும் சர்ச்சையும் எழுந்துள்ளன.

நாடாளுமன்றத்தில் எதிரொலி
இந்த நிலையில், இந்த விவகாரம் நேற்று நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது. ஐ.பி.எல். கிரிக்கெட் ஊழல் பற்றி எதிர்க்கட்சிகள் பிரச்சினையைக் கிளப்பியதால் சபையில் அமளிதுமளி ஏற்பட்டது. நேற்று நாடாளுமன்றம் கூடியதும், எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் எழுந்து ஐ.பி.எல். முறைகேடுகள் குறித்தும், அதுதொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகள் குறித்தும் பேசினார்.
இடதுசாரி தலைவர்கள் பாசுதேவ் ஆச்சாரியா, குருதாஸ் தாஸ்குப்தா, ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவர் சரத் யாதவ் ஆகியோரும் இவரது கருத்தையே வற்புறுத்தினர். ஐ.பி.எல்லில் பெரிய அளவில் முறைகேடு நடந்திருப்பதாக அவர்கள் குற்றம்சாட்டினார்கள்.
சரத் யாதவ் பேசுகையில், ஐ.பி.எல். தற்போது ஊழல்வாதிகளின் கூடாரமாகி விட்டதாகவும், மொரீசியஸ் தீவில் இருந்தும் சுவிஸ் வங்கிகளில் இருந்தும் சட்ட விரோதமாக கொண்டு வரப்பட்ட பணம் ஐ.பி.எல்லில் முதலீடு செய்யப்பட்டிருப்பதாகவும் கூறினார்.
ஐ.பி.எல்லில் மிகப்பெரிய சூதாட்டம் நடந்திருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் பாசுதேவ் ஆச்சார்யா குற்றம் சாட்டினார். முன்பு நரசிம்மராவ் ஆட்சியின் போது பங்கு மார்க்கெட் மோசடி பற்றி விசாரணை நடத்த நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட்டது போல் ஐ.பி.எல். முறைகேடு பற்றியும் விசாரிக்க கூட்டுக்குழு அமைக்க வேண்டும் என்றும் அவர் வற்புறுத்தினார்.
இதைத்தொடர்ந்து, நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி எழுந்து உறுப்பினர்களின் கோரிக்கைக்கு பதில் அளித்து பேசினார். "உடனடி காபி போல் இந்த விஷயத்தில் (நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைப்பது) திடீரென்று முடிவு எடுத்து விட முடியாது. உறுப்பினர்களின் உணர்வுகளை பிரதமரிடம் தெரிவிப்பேன். அரசாங்கம் ஆலோசித்து உரிய முடிவு எடுக்கும். அந்த முடிவு சபைக்கு தெரிவிக்கப்படும்'' என்று அவர் கூறினார்.

சபை ஒத்திவைப்பு
சபை நிகழ்ச்சிகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டதால், சபையை பகல் 12.00 மணி வரை சபாநாயகர் மீரா குமார் ஒத்தி வைத்தார். பின்னர் சபை கூடியதும், மீண்டும் இதேநிலை தொடர்ந்தது.
உறுப்பினர்கள் அமளியில் தொடர்ந்து ஈடுபட்டதால் சபையில் அமைதியற்ற நிலை நீடித்தது. இதைத்தொடர்ந்து, பிற்பகல் 2.00 மணி வரை சபையை, துணை சபாநாயகர் கரிய முண்டா ஒத்தி வைத்தார்.
மேல்-சபையிலும் இதே பிரச்சினை எதிரொலித்தது. காலையில் சபை கூடியதும், எதிர்க்கட்சி துணை தலைவர் எஸ்.எஸ்.அலுவாலியா, மற்றும் பாரதீய ஜனதா உறுப்பினர்கள் பிரகாஷ் ஜாவ்தேகர், மாயா சிங், ரவி சங்கர் பிரசாத் ஆகியோர் எழுந்து,

"ஐ.பி.எல். புகார்கள் பற்றி நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்'' என்று கோஷமிட்டனர்.
இதனால் அமளி ஏற்பட்டதால், அப்போது சபையை நடத்திய துணைத்தலைவர் கே.ரகுமான்கான், பிற்பகல் 2-30 மணி வரை சபையை ஒத்தி வைத்தார். பின்னர் சபை கூடியதும், பாரதீய ஜனதா, இடதுசாரிகள், அ.தி.மு.க. ராஷ்டிரீய ஜனதாதளம், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளின் எம்.பி.க்கள் எழுந்து மீண்டும் தங்கள் கருத்தை வலியுறுத்தினார்கள்.
சபைத்தலைவரின் மேஜை முன் சென்று கோஷமிட்டனர். இதைத்தொடர்ந்து, துணைத்தலைவர் ரகுமான்கான், நாள் முழுவதும் சபையை ஒத்திவைத்து விட்டு வெளியேறினார்.

கூட்டுக்குழு அமைக்க கோரிக்கை

ஐ.பி.எல். ஊழல் பற்றி விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கை பற்றி ஆலோசிக்க சோனியா காந்தியின் தலைமையில் நேற்று மாலை காங்கிரஸ் கட்சியின் முக்கிய குழு கூட்டம் நடைபெற்றது.
இதில் பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி, சோனியாவின் அரசியல் ஆலோசகர் அகமது பட்டேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டுக்குழு அமைக்கும் கோரிக்கை, நிதி மசோதாவை சுமூகமாக நிறைவேற்றுவது உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. நாடாளுமன்ற கூட்டுக்குழுவை அமைப்பது பற்றி முடிவு எடுக்கும் பொறுப்பை பிரதமரிடம் விட்டுவிடுவது என்று கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
கூட்டம் முடிந்ததும் காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் நிருபர்களிடம் பேசுகையில், "இந்த பிரச்சினை பற்றி அரசாங்கம் முடிவு எடுக்கும்" என்றார். இதற்கிடையே, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் துணைத் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராஜீவ் சுக்லா, நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியைச் சந்தித்து ஐ.பி.எல். தொடர்பான பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்தினார். _

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’