வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 19 ஏப்ரல், 2010

யாழ்ப்பாணத்தில் முதலீடுகளை அதிகரிக்க இந்தியா தயார் : இந்தியத் தூதுவர் தகவல் _

வடபகுதியின் முன்னேற்றம் கருதி யாழ்ப்பாணத்தில் முதலீடுகளை அதிகரிக்க இந்தியா எப்போதும் தயாராகவே உள்ளது.இதனடிப்படையில் தலைமன்னாரிலிருந்தும் காங்கேசன்துறையிலிருந்தும் இந்தியாவுக்குக் கப்பல் சேவையும் பலாலியிலிருந்து இந்தியாவுக்கு விமான சேவையும் ஆரம்பிக்கப்படும் என்று இந்தியத்தூதுவர் அசோக் கே.காந்த் தெரிவித்தார்.

அத்துடன் எதிர்வரும் 5 ஆம் திகதி இந்திய விசா விண்ணப்பங்களை ஏற்கும் அலுவலகம் ஒன்று யாழ்ப்பாணத்தில் திறக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று ஆரம்பமான சர்வதேச வர்த்தகக் கண்காட்சி 2010 ஐ ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
யாழ்ப்பாணம் உங்கள் நுழைவாயில் என்னும் தொனிப் பொருளிலான யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக சந்தை 2010 கண்காட்சி நேற்றுக் காலை 9.00 மணிக்கு யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி தம்பர் மண்டபத்தில் கோலாகலமாக ஆரம்பமானது. இந்நிகழ்வை இந்தியத் தூதுவர் அசோக் கே.காந்த் நாடாவை வெட்டி திறந்து ஆரம்பித்து வைத்தார்.
ஞாயிற்றுக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை தொடர்ச்சியாக இடம்பெறவுள்ள இக்கண்காட்சியை யாழ்ப்பாணம் வர்த்தக கைத்தொழில் மன்றமும் வரையறுக்கப்பட்ட இலங்கை கண்காட்சி மற்றும் மாநாடுகள் சேவைகள் தனியார் நிறுவனமும் இணைந்து நடத்துகின்றன.
இக்கண்காட்சியில் இந்தியா, மலேசியா மற்றும் தென்னிலங்கை பிரபல நிறுவனங்களும் கம்பனிகளும் பங்குபற்றுவதுடன் குறித்த நாட்களில் கருத்தரங்குகளும் இசை நிகழ்ச்சிகளும் சாகஸங்களும் இடம்பெறவுள்ளன.

அங்கு இந்தியத் தூதுவர் மேலும் பேசுகையில்,
"இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பண்பாடு கலாசார ரீதியான தொடர்புகள் வரலாற்று ரீதியானவை. அவை தற்பொழுது மேலும் நெருக்கம் அடைந்துள்ளன.
ஏனைய தெற்காசிய நாடுகளை விடவும் இந்தியா இலங்கையுடன் அதிக உறவுகளைப் பேணி வருகின்றது.இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்துள்ள நிலையில் வடபகுதியின் முன்னேற்றம் கருதி பல்வேறு அபிவிருத்தி சார்ந்த நடவடிக்கைகளில் இந்தியா ஈடுபடவுள்ளது.
அந்த வகையில் இலங்கையில் புகையிரத சேவை புனரமைப்புக்கு இந்தியா பொறுப்பேற்றுச் செயற்படவுள்ளது.
மதவாச்சி முதல் தலைமன்னார் வரையிலும் ஓமந்தை முதல் பளை வரையிலும் பின்னர் பளையிலிருந்து காங்கேசன்துறை வரையிலும் புகையிரதப் பாதைப் புனரமைப்பு மேற்கொள்ளப்படும்.
யாழ். குடாவில் பலமான மனித வள மையம் உள்ளது. இதனை அபிவிருத்திக்குப் பயன்படுத்தி இழந்த பொருளாதாரத்தை கட்டியெழுப்ப இயலும். இந்தியா இன்று மட்டுமல்ல நீண்ட காலமாகவே இலங்கைக்குப் பல்வேறு உதவிகளையும் செய்துவருகிறது.
கடந்த வருடம் 12.5 பில்லியன் நிதி மன்மோகன் சிங் அரசால் வழங்கப்பட்டுள்ளது. 250000 குடும்பங்களுக்கு வீட்டு உபகரணப் பொதிகளை வழங்கியதுடன் சீமெந்துப் பைகள் மற்றும் மீள்குடியேறியவர்களுக்கான கட்டுமான உதவிகள் என்பவற்றையும் வழங்கியுள்ளது.
வன்னிப் பிரதேசத்தில் கல்வி, சுகாதார நடவடிக்கைகளை மேம்படுத்தவுள்ளது. விசேடமாக யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு மாகாணத்தை பொருளாதார ரீதியில் அபிவிருத்தி செய்ய தனது பங்களிப்பை வழங்கும்.
அத்துடன் தலைமன்னாரிலிருந்தும் காங்கேசன்துறையிலிருந்தும் இந்தியாவுக்குக் கப்பல் சேவையும் பலாலியிலிருந்து இந்தியாவுக்கு விமான சேவையும் ஆரம்பிக்கப்படவுள்ளன" என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’