வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 30 ஏப்ரல், 2010

புறக்கோட்டை நடைபாதை கடைகள் இரவோடு இரவாக அகற்றப்பட்டன : வியாபாரிகள் நடுத்தெருவில் என கண்ணீர்

கொழும்பு புறக்கோட்டை ஒல்கொட் மாவத்தையில் நடைபாதைகளில் அமைக்கப்பட்டிருந்த அனைத்துக் கடைகளும் இரவோடு இரவாக அகற்றப்பட்டுள்ளன. இதனால் வியாபாரத்தில் ஈடுபட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக விசனம் தெரிவிக்கப்படுகிறது.

இக் கடைகளை அகற்றியமைக்கும் கொழும்பு மாநகர சபைக்கும் எவ்வித தொடர்பும் இல்லையென்றும் விசேட ஆணையாளர் ஓமர் காமில் தெரிவித்தார்.
இப் பிரச்சினை தொடர்பாக பாதிக்கப்பட்ட நடைபாதை வியாபாரிகளின் ருகுணு பிரஜா சங்கத்தின் பிரதிநிதியான கே. வை. சுகத் கருத்துத் தெரிவிக்கையில்,
ஓல்கொட் மாவத்தையில் சுமார் 1, 200 பேர் வியாபாரம் செய்து வந்தனர். இதன் மூலம் பெற்றுக் கொள்ளும் வருமானம் மூலமாகவே நாங்கள் வாழ்க்கை நடத்தி வருகிறோம். எமது பிள்ளைகளை பாடசாலை அனுப்புவது உட்பட அனைத்துத் தேவைகளையும் வியாபாரத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்திலேயே மேற்கொள்கிறோம்.
இவ்வாறானதொரு நிலையில் எந்தவிதமான முன்னறிவிப்புமின்றி இரவோடிரவாக கடைகள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பாக புறக்கோட்டை பொலிஸாரிடம் வினவினோம். கொழும்பு மாநகர சபையிடமும் விசாரித்தோம். ஆனால் இக்கடைகளை யார் அகற்றினார்களென்பது தெரியாது என கைகளை விரிக்கின்றனர்.
நாங்கள் கடன் வாங்கி பொருட்களை கொள்வனவு செய்து வியாபாரம் செய்து வாழ்ந்து வந்தோம். இன்று வியாபாரமும் போய் விட்டது. வாழவும் வழியில்லாது நடுத் தெருவில் நிர்க்கதியாக்கப்பட்டுள்ளோம்.
எமது குடும்பங்களும் நடுத்தெருவில் தள்ளப்பட்டுள்ளன.
எமக்கு வியாபாரம் செய்வதற்கு மாற்று வழியை ஏற்படுத்திக் கொடுத்து வாழ்வதற்கு வழிகாட்ட வேண்டுமென்ற கோரிக்கையை அரசாங்கத்திடம் முன்வைக்கின்றோம். இல்லாவிட்டால் குடும்பத்தோடு நஞ்சருந்தி தற்கொலை செய்து கொள்ள வேண்டிய நிலைமையே ஏற்படுமென்றும் வியாபாரியான சுகத் தெரிவித்தார்.
இவ் விடயம் தொடர்பாக கொழும்பு மாநகர சபையின் விசேட ஆணையாளர் ஒமர் காமிலை தொடர்பு கொண்டு கேட்ட போது,
நடைபாதை கடைகள் கொழும்பு மாநகர சபையால் அகற்றப்படவில்லை. எமக்கும் இப்பிரச்சினைக்கும் எதுவிதமான தொடர்பும் கிடையாது. பண்டிகைக் காலங்களில் இவர்களுக்கு வியாபாரம் செய்வதற்கு நாம் எந்தவிதமான தடைகளையும் விதித்ததில்லை.
நடைபாதை முழுவதையும் ஆக்கிரமித்து மக்களுக்கு நடமாடுவதற்கு பாரிய இடைஞ்சலாக அமைந்ததால் மக்கள் தெரிவித்த புகார்களையடுத்து சட்ட ரீதியாக பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். நகர சபை இப்பிரச்சினையில் தலையிடவில்லையென்று தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’