வன்னியில் இடம்பெற்ற மனிதாபிமான நடவடிக்கையைச் சித்திரிக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட விவரணத் திரைப்படம் கணனியின் ‘ஹார்ட் டிஸ்க்’ இல் இருந்து முழுமையாகக் களவாடப்பட்டுள்ளதாக மிரிஹான பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வன்னியில் இடம்பெற்ற இறுதிநேர நடவடிக்கையின் போது இடம்பெற்றதாகச் சித்திரிக்கப்பட்டுத் தயாரிக்கப்பட்ட அற்புதமானதொரு காதல் காவியமாக வடிவமைக்கப்பட்டிருந்த இந்த விவரணச் சித்திரம் சர்வதேச விருதுக்கு போட்டியிடுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் சுமார் நான்கு கோடி ரூபா செலவில் தயாரிக்கப்பட்டிருந்த ‘மாத்தா’ (மாதா) என்ற இந்தச் சிங்கள விவரணச் சித்திரம் மிகவும் நுட்பமான முறையில் கணனியின் ஹார்ட்டிஸ்க்கிலிருந்து முழுமையாகக் களவாடப்பட்டிருப்பதாக அதன் தயாரிப்பாளர் விஸ்வநாத் புத்திக்க கீர்த்திசேன தெரிவித்தார். முழுக்க முழுக்க உள்ளூர்க் கலைஞர்களைக் கொண்டு இந்த விவரணச் சித்திரம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார். சில இடங்களில் இராணுவ வீரர்களும் நடித்துள்ளனர். மனிதாபிமான நடவடிக்கைகளின் இறுதிக் காலகட்டத்தில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்ட ‘மாதா’ படம் 120 நிமிடங்கள் ஓடக்கூடிய விவரணச் சித்திரமாகும்.
பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் நான்கு கோடி ரூபா செலவில் சுமார் ஒரு வருட காலமாக வட மாகாணத்தில் வைத்து இது படமாக்கப்பட்டுள்ளது. சர்வதேச விருதில் போட்டியிடும் வகையில் இந்த விவரணச் சித்திரம் தயார்படுத்தப்பட்டிருந்த நிலையிலேயே கடந்த இரு தினங்களுக்கு முன்னர் விவரணச் சித்திரம் அடங்கிய சகல ஆவணங்களும் கொண்ட ஹார்ட் டிஸ்க் களவாடப்பட்டிருப்பதாக அதன் தயாரிப்பாளர் கூறினார். நாவலையில் அமைந்துள்ள அவர்களது, ‘ரூம் சினிமா கிரியேஷன்ஸ் ஹவுஸ்’ எனும் ஸ்டூடியோவில் வைத்தே திட்டமிட்ட சதிகார கும்பலொன்று கணனியிலிருந்து இதனை திருடிச் சென்றிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
விவரணச் சித்திரமடங்கிய ஹார்ட் டிஸ்க் திருட்டுப் போன சம்பவம் குறித்து மிரிஹானை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பொலிஸார் சந்தேக நபர்களை தேடிக் கண்டுபிடிக்கும் நோக்கில் பல்வேறு கோணங்களிலும் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர். இலங்கைக்கு எதிரான அவதூறுப் பிரசாரங்களை முன்னெடுக்கும் வகையில் சில சதிக் கும்பல்கள் இதனைத் திருடியிரு க்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர்
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’