வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 3 ஏப்ரல், 2010

என்ன செய்யப் போகின்றார்கள் என்பதே முக்கியம்


தமிழ் மக்களின் வாக்குகள் சிதறடிக்கப்படுவதை அனுமதிக்க வேண்டாம் என்று தமிழ்த் தேசியக் கூட்ட மைப்புத் தலைவர்கள் இப்போது அடிக்கடி வேண்டுகோள் விடுக்கின்றார்கள். தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் தாங்களே என்று இதுவரை உரிமை கோரியவர்கள் இப்போது இந்த வேண்டுகோளை விடுக்கும் நிலைக்கு வந்திருக்கின்றார்கள்.

இந்த வேண்டுகோளின் அர்த்தம் தங்களைத் தவிர மற்றவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என்பதாகும். கூட்டமைப்புக்கு மாறான நிலைப்பாட் டைக் கொண்டுள்ள கட்சிகளுக்கு வாக்களிக்கும் மனோ நிலை தமிழ் மக்கள் மத்தியில் வளர்ந்து வருவதை உணர்ந்ததாலேயே இந்த வேண்டுகோளை விடுக்கின்றார்கள் என்பதைக் கூற வேண்டியதில்லை.
தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் ஒரேயொரு 'தகை மையை' மாத்திரம் கூற முடியும். அறுபது வருடங்களு க்கு மேலாகத் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாரம்பரியத்தைக் கொண்டவர்கள் என்ற 'தகைமையை' மட்டுமே அவர்களால் கூற முடியும்.

1947ம் ஆண்டு முதல் எல்லாத் தேர்தல்களிலும் வட மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்டவர்களில் ஓரிருவரைத் தவிர மற்றைய அனைவரும் தமிழ்க் காங்கிரஸ் கட்சி, தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகியவற்றின் உறுப்பினர்களே. இக்கட்சிகளின் புதுவடிவம் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.

அறுபது வருடப் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் என்ற 'தகை மையை' முன்வைக்கின்ற அதேவேளை சாதனை என்று இவர்களால் எதையும் கூற முடியாது. தமிழ்ப் பிரதேசங்க ளில் அபிவிருத்தியை ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. இன பிரச்சினைக்குத் தீர்வைக் காண முடியவில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்களும் அவர்களின் முன் னோடிகளும் தொடர்ச்சியாகத் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய போதிலும் அம் மக்களுக்கு இவர் களால் எவ்வித விமோசனமும் கிடைக்கவில்லை.

இனப் பிரச்சினை கூர்மையடைந்ததும் தமிழ் மக்கள் சொந்த இடங்களிலிருந்து வெளியேற நேர்ந்ததும் எண்ணற்ற உயிரிழப்புகள் இடம்பெற்றதும் இவர்களின் பிரதிநிதித்து வக் காலங்களிலேயே. இத் தலைவர்களின் தவறான அனுகுமுறை காரணமாகவே இந்த அனர்த்தங்கள் நேர்ந் தன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் இத் தேர்தல் பிரசாரத்தின் போது அளிக்கும் வாக்குறுதிகள் தமிழ் மக் களுக்குப் புதியனவல்ல. இத் தலைவர்களும் இவர்களின் முன்னோடிகளும் முன்னைய எல்லாத் தேர்தல்களிலும் அள்ளி வழங்கிய வாக்குறுதிகளே அவை.

தமிழ் மக்க ளின் பிரச்சினைகள் தொடர்பாக ஆக்கபூர்வமாக இத் தலைவர்கள் எந்தக் காரியத்தையும் செய்யாததாலேயே எல்லாத் தேர்தல்களிலும் ஒரே வாக்குறுதிகளை அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது. இது தலைவர்க ளின் வினைத்திறமையின்மையையே வெளிப்படுத்துகின்றது.

எத்தனை பிரதிநிதிகளைத் தெரிவு செய்யப் போகின்றோம் என்பதிலும் பார்க்க, எங்களால் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகள் என்ன செய்யப் போகின்றார்கள் என்பது பற்றிச் சிந்திக்க வேண்டியவர்களாகவே இன்று தமிழ் மக் கள் உள்ளனர்.

இனப் பிரச்சினை உட்பட அடிப்படைப் பிரச்சினைகளுக்கான தீர்வு ஒரே நாளில் கிடைக்கப் போவ தில்லை. சாதகமான சூழ்நிலையை உருவாக்கிக் கட்டங் கட்டமாக அதிகாரங்களைப் பெறுவதன் மூலம் முழுமை யான தீர்வை அடையும் அணுகுமுறையே இன்றைய நிலையில் ஆக்கபூர்வமானது.

வாக்குகளை அளிப்பதற்கு முன், வாக்குக் கேட்கும் வேட்பாளர்கள் இவ்வாறான அணுகுமுறையைப் பின்பற்றக் கூடியவர்களா அல்லது முன்னரைப்போல முழுமையான தீர்வை வலியுறுத்தி எதையும் பெறாமல் காலங்கடத்துபவர்களா என்பதையிட் டுத் தமிழ் மக்கள் நிதானமாகச் சிந்திக்க வேண்டும்.
தினகரன் தலையங்கம்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’