ஐதேக தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் நடவடிக்கை தமிழ் மக்களுக்குச் செய்யப்பட்ட பச்சை துரோகமாகும்.
நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டிய எமது தலைவர் மனோ கணேசனின் குரலை ஒலிக்கவிடாமல் செய்துவிட்ட ரணில் விக்ரமசிங்க தமிழ் மக்களுக்கு பதில் கூறியே ஆகவேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.
தமது கட்சிக்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலைதொடர்பில் விடுத்துள்ள அறிக்கையில் கருத்து தெரிவித்த பிரபா கணேசன் மேலும் கூறியதாவது:
"எமது கட்சி ஐக்கிய தேசிய முன்னணி என்ற கூட்டணியின் ஸ்தாபக கட்சியாகும். நான்கு ஸ்தாபக கட்சிகளுக்கும் தேசியப்பட்டியலில் குறைந்தபட்சம் ஒரு உறுப்புரிமை இருக்கின்றது என்ற அடிப்படையிலேயே ஐக்கிய தேசிய முன்னணி உருவாக்கப்பட்டது. மேலதிகமான தேசியப்பட்டியல் நியமனங்கள் அவ்வவ் கட்சிகள் சார்பில் வெற்றி பெற்றுள்ள வேட்பாளர்களின் தொகைக்கு ஏற்ப தீர்மானிக்கப்படவேண்டும்.
எமது தலைவர் கண்டி மாவட்ட மக்களின் நீண்டகால குறையைக் தீர்ப்பதற்காக ஒரு மக்கள் தலைவர் என்ற அடிப்படையில் கண்டி மாவட்டத்தில் போட்டியிட்டார். இதன் மூலம் கண்டி மாவட்டத்தில் நிலவக் கூடிய தமிழ் மக்கள் மீதான அநீதிகள், வாக்காளர் அட்டைகள் பறித்து அவர்கள் விரட்டப்படுவது, தமிழ் வேட்பாளர்களுக்கு எதிரான வன்முறைகள் ஆகிய அனைத்தும் அம்பலத்திற்கு வந்தன.
அதேவேளை, தேசியப்பட்டியலிலே எங்களது கட்சிக்குரிய இடம் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. கண்டி மாவட்டத்தில் போட்டியிட்டது என்பதுவும், தேசியப்பட்டியல் நியமனம் என்பதுவும் இரண்டு வெவ்வேறு விடயங்கள்.
கண்டியில் எமது தலைவர் வெற்றி பெற்றிருந்தாலும்கூட, தேசியப்பட்டியல் உறுப்புரிமை எங்களுக்குக் கிடைத்திருக்க வேண்டும். பல்லாண்டுகளாக பாரிய செயற்பாடுகளை எதிரணியிலே முன்னெடுத்த கட்சி என்ற வகையில், எங்களுக்கு ஐக்கிய தேசிய முன்னணி என்ற கூட்டணியில் முழுமையான உரிமை இருக்கின்றது.
கண்டியில் போட்டியிட்டதால்தான் தலைவர் மனோ கணேசன் நாடாளுமன்றத்திற்குச் செல்ல முடியாமல் போனது என்று சொல்லி, எமக்கு இழைக்கப்பட்ட அநீதியை ஐக்கிய தேசியக் கட்சியின் ரணில் குழு மூடி மறைக்கப் பார்க்கின்றது. இதை தமிழ் மக்கள் தெளிவாக புரிந்துக்கொள்ளவேண்டும்.
உண்மையை சொல்லப்போனால், எமது தலைவரும், எமது கட்சியும் ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆற்றிய பணிகளுக்காக ஒன்றல்ல, அதைவிட அதிகமாகக்கூட தேசியப்பட்டியல் நியமனங்களை ஐதேக வழங்கியிருக்கவேண்டும்.
கொழும்பு மாவட்டத்தைப் போலவே, கண்டி மாவட்ட தமிழ் மக்களும் நீண்டகாலமாக யானைச் சின்னத்திற்கு வாக்களித்து வருபவர்களாவர். இதன் காரணமாகவாவது எமது தலைவர் தேசியப்பட்டியலில் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும்.
அவ்வாறாயின் தேசியப்பட்டியல் மூலமாகவாவது கண்டி மாவட்ட தமிழ் மக்களுக்கு ஒரு தமிழ் எம்பி கிடைத்திருப்பார். இன்று நான்கு முஸ்லிம் எம்பிக்களும், 8 சிங்கள எம்பிக்களும் தெரிவு செய்யப்பட்டுள்ள கண்டி மாவட்டத்திலே தமிழ் மக்களுக்கு இது ஒரு பாரிய வாய்ப்பாக அமைந்திருக்கும்.
இதைக்கூட செய்வதற்கு ரணில் விக்ரமசிங்க தவறிவிட்டார். ஐவர் அடங்கிய இந்தக் குழுவிலே ரணிலுடன் கரு ஜயசூரிய, திஸ்ஸ அத்தநாயக்க, ரவி கருணாநாயக்க, மலிக் சமரவிக்ரம ஆகியோர் அடங்குகின்றார்கள். இந்தக்குழுதான் எமது கட்சிக்குரிய தேசியப்பட்டியலை வழங்காமல், தமிழ் மக்களுக்குத் துரோகம் இழைத்திருக்கின்றது."
இவ்வாறு பிரபா கணேசன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’