இந்தியாவின் பெங்களூர் நகரில், விளையாட்டு அரங்கு அருகே சனிக்கிழமை பிற்பகல் நடந்த குறைந்த சக்தி கொண்ட குண்டு வெடிப்புச் சம்பவத்தில் போலீசார் உட்பட சுமார் 8 பேர் காயமடைந்திருக்கிறார்கள்.
ஐபிஎல் 20-20 கிரிக்கெட் போட்டிகள் துவங்குவதற்கு சற்று முன்னதாக அங்கு குண்டு வெடித்திருக்கிறது. சுமார் 40 ஆயிரம் ரசிகர்கள் கூடியுள்ள அந்த விளையாட்டு அரங்கில், குண்டுவெடிப்புக்குப் பிறகும், போட்டிகள் பாதிக்கப்படாமல் தொடர்ந்து நடைபெற்றன.
பெங்களூர் சின்னசாமி விளையாட்டரங்கின் 12-வது நுழைவாயில் அருகே வெளிப்புற சுவற்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குறைந்த சக்தி கொண்ட வெடிகுண்டு பிற்பகல் 3.15 மணியளவில் வெடித்ததாகவும், அங்கிருந்த நான்கு காவலர்கள் உட்பட சிலர் காயமடைந்ததாகவும் பிபிசி செய்தியாளர் தெரிவித்தார்.
இதே நேரத்தில், சில நிமிட இடைவெளியில், விளையாட்டு அரங்கிலிருந்து சற்று தொலைவில் எம்.ஜி. சாலை பகுதியில் உள்ள அனில்கும்ளே சதுக்கத்தில் இன்னொரு குறைந்தசக்தியுடைய குண்டு வெடித்தது. இதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என்றும், யாரும் பீதியடைய வேண்டாம் என்றும் பெங்களூர் காவல் துறை ஆணையர் சங்கர் பித்ரி தெரிவித்தார்.
மேலும், இரவு 7 மணிக்குப் பிறகு விளையாட்டு அரங்கத்தின் 8-வது நுழைவாயில் அருகே, வெடி்க்க முன்னதாகவே குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்க வைக்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் போட்டி முடிந்து ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வெளியே வருகின்ற நேரமான இரவு 8 மணிக்கு வெடிக்கும் வகையில் அந்த குண்டு பொருத்தப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’