வன்னிப் போரின் போது 57வது படைப்பிரிவுக்கு தலைமை தாங்கிச் சென்றவரும், தற்போது ஜெர்மன் மற்றும் சுவிஸ்லாந்துக்கான பதில் தூதுவராக பணியாற்றி வருபவருமான மேஜர்ஜெனரல் ஜகத் டயஸ் அவர்கள் சுவிஸ்லாந்தின் சூரிச் மாநிலத்தில் தமிழ், சிங்களப் பிரமுகர்களுடனான கலந்துரையாடல் ஒன்றுக்கு பங்கேற்க வந்திருந்த போது அதிரடி இணையம் சார்பாக திரு.தாஸ் என்பவரினால் சுவிஸில் காணப்பட்ட பேட்டியின் விபரம் இங்கு தரப்படுகின்றது..கேள்வி: வன்னிப் போரின் போது தாங்கள் எத்தனையாவது படைப்பிரிவுக்கு எங்கிருந்து எங்குவரையில் தலைமை வகித்து சென்றீர்கள்? வன்னிப்போரின் தங்கள் அனுபவங்கள் என்ன?
திரு.ஜயத் டயஸ்: நான் 57வது படைப்பிரிவுக்கு தலைமைதாங்கி மடு பெரியதம்பனை, இரணை இலுப்பைக்குளம், பாலம்பிட்டி, பெரியமடு, முள்ளிக்குளம் போன்ற பகுதிகளின் ஊடாக வன்னி நோக்கிச் சென்று இறுதியாக புதுமாந்தளன் நோக்கியதாக எமது போர் நடவடிக்கை அமைந்திருந்தது. வன்னிப் போரின் போதே தமிழ்மக்களை புலிகள் எவ்வாறு அடக்கி ஆண்டு வந்துள்ளார்கள் என்பதையும் வெளிஉலகுக்கு தம்மை விலாசமாகக் காட்டிக் கொண்ட புலிகள் மிகவும் பலவீனமானவர்கள் என்பதையும் உணாந்து கொண்டேன். கேள்வி: வன்னிப்போர் குறித்து தங்களது கருத்தென்ன?
திரு.ஜகத் டயஸ்: வன்னிப்போர் என்பது பாஸிச அராஜக சக்தியான புலிகள் அமைப்பு அழித்தொழிக்கப்பட வேண்டுமென்பதற்காக முன்னெடுக்கப்பட்ட பாரிய நடவடிக்கையாகும். அதில் நாம் வெற்றியீட்டியது எமக்கு மனதார சந்தோசமான விடயமே. எனவே இதனையிட்டு நாம் பெருமையடைகிறோம்.கேள்வி: பிரபாகரன் பொட்டம்மான் தொடர்பிலான உண்மை நிலையென்ன?
திரு.ஜகத் டயஸ்: பிரபாகரன் பொட்டம்மான் ஆகிய இருவருமே மரணித்து விட்டார்கள் என்பது நூற்றுக்கு நூறு வீதமான உண்மையே. இதில் நாம் பொட்டம்மானின் சடலத்தைக் கைப்பற்றவில்லையே தவிர அவரும் கொல்லப்பட்டு விட்டார் என்பதை எம்மால் உறுதியாகத் தெரிவிக்க முடியும். பிரபாகரனினதும் அவரது குடும்பத்தினரதும் சடலங்கள் எம்மால் கைப்பற்றப்பட்டன. ஆனால் பொட்டம்மானின் மனைவியின் சடலம் மாத்திரமே எம்மால் கைப்பற்றப்பட்டு அது தொடர்பிலான புகைப்படங்கள் கூட எம்மிடமுள்ளன. பொட்டம்மானின் மனைவி கொல்லப்பட்டது கூட எம்மால் அல்ல. தான் இறப்பதற்கு முன்னர் பொட்டம்மானே தனது மனைவியை அவரே கொலை செய்ததாக பொட்டம்மானுடன் இருந்து தற்போது எம்மால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள முக்கியஸ்தர்கள் மூலம் நாம் அறிந்து கொண்டோம். ஆகவே பொட்டம்மான் பிரபாகரன் மாத்திரமல்ல, புலிகளின் தலைமைகள் அனைவரும் அழிக்கப்பட்டு விட்டார்கள் என்பது நூற்றுக்கு நூறுவீதமான உண்மையாகும். கேள்வி: புலிகள் அமைப்பு குறித்த தங்களது கருத்தென்ன? அவ்வியக்கத்தினரின் செயற்பாடுகள் பற்றி நீங்கள் என்னகூற விரும்புகிறீர்;கள்?
திரு.ஜகத் டயஸ்: புலிகள் இயக்கமானது இலங்கையின் வடக்கு கிழக்கு மக்களுக்காகவோ, புலம்பெயர் வாழ் தமிழ் மக்களுக்காகவோ எதுவுமே செய்யாமல் வன்னியில் தமக்கென ஒரு இராஜ்ஜியத்தை உருவாக்கி தாமே ஆளவேண்டுமென்ற கோட்பாட்டின் கீழ் தாமே தலைவர்கள் தாமே மந்திரிமார் என்ற ரீதியில் செயற்பட்டவர்கள். அந்தவகையில் அவர்கள் அழிக்கப்பட வேண்டுமென்பதில் நம்மைவிட பெரும்பாலும் தமிழ்மக்களே விரும்பினார்கள். எனவே மக்களின் உதவியின் மூலம் எமது போராட்டம் வெற்றி பெற்றது. கேள்வி: இலங்கையின் தற்போது புலிகள் இயக்கத்தினர் உள்ளனரா? இல்லையா? அவர்களின் செயற்பாடுகள் எதுவும் உள்ளதாக தெரிகிறதா?
திரு.ஜகத் டயஸ்: புலிகளின் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் தற்கொலைப் போராளிகளான கரும்புலிகள் மற்றும் பிஸ்டல் குழுவைச் சேர்ந்தவர்கள் நாம் வன்னிப்போரை ஆரம்பிக்கு முன்னமே வன்னியிலிருந்து வெளியேறி குறிப்பிட்ட பிரதேசங்களுக்கு சென்று விட்டனர். இவ்வாறு சென்றவர்களுக்கு தற்போது அவர்கள் எதுவுமே செய்ய முடியாதநிலையில் இருக்கிறார்கள். ஏனென்றால் அவர்களின் தலைமைகள் அழிக்கப்பட்டு விட்டன. அவர்களுக்கான கட்டளைகளைப் பிறப்பிக்கவோ, அவர்களை வழிநடத்தவோ, எவருமில்லை. அவர்களுக்கான உத்தரவுகள் யாரிடமிருந்து எப்போ வருமென்பது தெரியாத நிலை. இந்நிலையில் அவர்களில் பலர் தமது பகுதிகளிலிருந்து தலைமறைவாகியிருக்கலாம். காடுகளுக்குள்ளும் இருக்கலாம் அல்லது இருக்கிறார்கள் என்று கூறமுடியும். இவர்கள் திறம்பட பயிற்றப்பட்டு வளர்க்கப்பட்டவர்கள். ஆகவே இவர்கள் குறித்தும் இவர்களின் நடவடிக்கைகள் தொடர்பிலும் நாம் விழிப்பாகவே இருக்கிறோம். இவர்கள் தற்போது புலம்பெயர் நாடுகளிலுள்ள புலிகளின் உதவியுடன் மீண்டும் தலைதூக்கலாம் என்று சிலர் கனவு காண்கிறார்கள். அந்தக்கனவு எக்காரணம் கொண்டும் நிறைவுறாதென்பதை உறுதியாகக் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.கேள்வி: வன்னிப் போரின்போது பொதுமக்கள் பலரும் கொல்லப்பட்டதாகவும், காயமடைந்ததாகவும் கூறப்படுகின்றது. வன்னிப் போர் நடவடிக்கையின் போது 57வது படைத்தளபதியாக நீங்கள் இருந்தீர்கள் என்ற ரீதியில் இதுகுறித்த உண்மை நிலையென்ன என்பதைக் கூற முடியுமா?
திரு.ஜகத் டயஸ்: இந்தக் குற்றச்சாட்டினை முற்றுமுழுதாக நான் மறுக்கவில்லை. பொதுமக்கள் கொல்லப்பட்டும் உள்ளனர். காயமடைந்தும் உள்ளனர். இதற்குக் காரணம் நாமல்ல. புலிகள் தான் இதற்கு காரணமாகும். புலிகள் எம்முடன் (இலங்கை அரச படையுடன்) மோதல்களில் ஈடுபட விரும்பியிருப்பின் அவர்கள் தாம் தடுத்து வைத்திருந்த அப்பாவிப் பொதுமக்களை வெளியேறுவதற்கு அனுமதித்து விட்டு எங்களுடன் மோதல்களில் ஈடுபட்டிருக்கலாம். இவ்வாறு மோதியிருந்தால் நாம் மே 19வரை பொறுத்திருக்க வேண்டி ஏற்பட்டிராது. அதற்கு ஆறு மாதங்களுக்கு முன்னமே இந்தப் போர் நிறைவடைந்து புலிகளின் பிரச்சினையை முற்றுமுழுதாக முடிந்திருப்போம். ஏனெனில் நாம் உலகத்திலேயே பலம்வாய்ந்த இராணுவமாக தற்போது திகழ்கிறோம் என்பதை நாம் புலிகளை அழித்துக் காட்டி நிரூபித்துள்ளோம்.
பொதுமக்கள் மீது நாம் வேண்டுமென்றோ அன்றில் திட்டமிட்டோ எந்தவொரு தாக்குதலையும் மேற்கொள்ளவில்லை. நான் ஒரு பௌத்த மதத்தைச் சேர்ந்தவன். பௌத்தமோ, இந்துவோ, இஸ்லாமோ, கிறிஸ்தவமோ தர்மத்தைத் தான் போதிக்கின்றன. நாங்கள் என்ன பாவத்தைச் செய்கின்றோமோ அது திரும்பவும் எங்களுக்கே வந்துசேரும் என்பதும் எமக்குத் தெரியும். ஆகவே நாம் திட்டமிட்டு எதையும் செய்யவில்லை. தாக்குதலின் போது இடையில் அகப்பட்டு பொதுமக்கள் கொல்லப்பட்டதும் காயமடைந்ததும் உண்மைதான். இதற்குக் காரணம் புலிகளே தவிர நாமல்ல.
புலிகள் பொதுமக்களை வெளியேறுவதற்கு விட்டிருந்தால் பொதுமக்கள் அழிவு குறைந்திருக்கும். பொதுமக்கள் வெளியேறி வந்தபொழுது நாம் அவர்களை மனிதாபிமான ரீதியில் எவ்வாறு அனுசரித்து உபசரித்து எவ்வாறான உதவிகளைச் செய்தோம் என்பது உலகமே அறியும். இங்குள்ள புலம்பெயர் தமிழ்மக்களுக்கும் தெரியும். ஆகவே நாம் பொதுமக்களை அழிக்க வேண்டும், கொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் எதையும் செய்யவில்லை என்பதை உறுதியாகத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். கேள்வி: வன்னி மோதல்களின் போது வெளியேறிய மக்கள் இதுவரையில் முழுமையாக மீள்குடியேற்றம் செய்யப்படாது தொடர்ந்தும் முகாம்களிலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். உண்மையிலேயே அரசாங்கம் தமிழ்மக்கள் மீது அக்கறை கொண்டதாக இருந்தால், தாங்கள் தற்போது இலங்கையரசின் பிரதிநிதியாக செயற்படுகின்ற ரீதியில் இடம்பெயர்ந்த மக்களை இதுவரை அரசாங்கம் மீள்குடியமர்த்தி முடிக்காமல் இருப்பதற்கான காரணமென்ன என்பதைக் கூறமுடியுமா?
திரு.ஜகத் டயஸ்: மீள்குடியேற்றம் என்பது உடனடியாக செயற்படுத்துவதற்கு நாம் முடிந்தவரை முயற்சிகளை மேற்கொண்டே வருகின்றோம். நாங்கள் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றாமல் இருக்கவுமில்லை. வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வந்த சுமார் 03லட்சம் மக்களில் தற்போது சுமார் 60ஆயிரத்திற்கு உட்பட்ட மக்கள் மாத்திரமே மீள்குடியமர்த்தப் படாது முகாம்களில் வசித்து வருகின்றனர். இவர்களும் மிகவிரையில் தமது சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப் படுவர். இதற்கான முழு முயற்சிகளையும் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றோம். மிதிவெடிகள், நிலக்கண்ணி வெடிகள் முற்றாக அகற்றப்படாத நிலையில் அப்பிரதேசங்களில் அவசரப்பட்டு இவர்களை மீள்குடியமர்த்துவதால் அம்மக்களுக்கு ஏதாவதொரு வகையில் பாதிப்புகள் ஏற்படும் போது அல்லது அவயவங்கள் இழப்பு என்பன ஏற்படும்போது பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையில் நாமே பதில் சொல்லியாக வேண்டும். இந்நிலையில் இவ்வாறான சம்பவங்களுக்கும் எம்மீதே குற்றஞ்சாட்டப்படும் நிலையும் ஏற்படும். இந்நிலையிலேயே நாங்கள் கண்ணிவெடிகள் அகற்றும் விடயங்கள் மற்றும் மீள்குடியேற்றம் என்ற விடயங்களை மிகவும் அவதானமாக மேற்கொண்டு வருகின்றோம். எனவே கண்ணிவெடிகள் யாவும் அகற்றப்பட்ட பின்பு மிகவிரைவாக எஞ்சியுள்ள மக்களும் குடியேற்றப்படுவார்கள். கேள்வி: தற்போது வன்னிப் பகுதிகளிலுள்ள வாகனங்கள், சொத்துக்கள் என்பன உரியவர்களிடம் மீளளிக்கப்படாமல் இருப்பதாக அறிகின்றோம். இதுபற்றி என்ன கூற விரும்புகிறீர்கள்?
திரு.ஜகத் டயஸ்: மேற்படி வாகனங்கள், சொத்துக்கள் யாவும் உரியவர்களுக்கு வழங்கப்படவே உள்ளன. அவற்றுக்கு உரித்துடையவர்கள் தமது உரிய ஆவணங்களைச் சமர்ப்பிக்கும் பட்சத்தில் அவர்களிடம் அவர்களின் வாகனங்கள் மற்றும் சொத்துக்களைக் கையளிக்க நடவடிக்கை எடுப்போம். சிலவேளைகளில் உரிமையாளர்கள், அல்லது ஆவணங்களைக் கொண்டிருப்பவர்கள் வெளிநாடுகளில் இருந்தால் எமது தூதுவராலயங்களின் ஊடாக தொடர்பு கொள்வதன் மூலம் அவற்றை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்போம். குறித்த வாகனங்கள் சொத்துக்களுக்கு உரித்துடையவர்கள் அல்லது உறுதிப்படுத்தக் கூடியவர்கள் ஜெர்மன் அல்லது சுவிஸ் ஆகிய நாடுகளில் இருந்தால் அவர்கள் நேரடியாக எம்முடன் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்தும் பட்சத்தில் அவர்களிடம் அவை ஒப்படைக்கப்படும். தற்போதும் இவ்வாறான சொத்துக்கள் வாகனங்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.கேள்வி: சரணடைந்த அல்லது பாதுகாப்புத் தரப்பினரால் கைதுசெய்யப்பட்ட சுமார் 10.000ற்கும் மேற்பட்ட புலி இயக்க உறுப்பினர்கள் இதுவரையில் விடுதலை செய்யப்படாதிருக்கின்றனர். அவர்கள் இதுவரை விடுவிக்கப்படாமைக்கான காரணமென்ன?
திரு.ஜகத் டயஸ்: இவ்வாறானவர்களுள் பலவந்தமாகவும், சிறுவர் போராளிகளாகவும் இணைத்துக் கொள்ளப்பட்டவர்கள் மற்றும் அங்கவீனமடைந்துள்ள புலிகள் அனைவரும் நிச்சயமாக விடுவிக்கப்படுவார்கள். விடுவிக்கப்பட்டு வருகின்றனர். இற்றை வரைக்கும் 2000ற்கும் மேற்பட்ட இவ்வாறான புலி உறுப்பினர்கள் விடுவிக்கப்பட்டு விட்டனர். ஆயினும் முக்கிய புலி உறுப்பினர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு அவர்கள் நீதிமன்றத்தில் தான் நிறுத்தப்படுவார்கள். சாதாரணமானவர்களை விடுவித்து வருகின்றோம். இவர்களில் சிலர் இரத்மலானை இந்துக் கல்லூரியில் பயில்கின்றனர். புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வருகின்றனர். தொழில் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கான தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தியும் கொடுத்து வருகின்றோம். உண்மையிலேயே புலிகளால் பலவந்தமாகவும் கடத்தப்பட்டும் கொண்டு செல்லப்பட்டு புலிகள் இயக்கத்தில் இணைக்கப்பட்டவர்கள் இருப்பின் அவர்கள் குறித்த தகவலை எமக்குத் தரப்படும் பட்சத்தில் அவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கையை உடன் எடுப்போம்.கேள்வி: வெளிநாடுகளில் வட்டுக்கோட்டைத் தீhமானம், நாடுகடந்த தமிழீழம் என்று சிலர் கூறி வருகின்றார்களே? அது குறித்து உங்களது கருத்தென்ன?
திரு.ஜகத் டயஸ்: வெளிநாடுகளில் தற்போது புலிகளாலும், புலி ஆதரவாளர்களாலும் வட்டுக்கோட்டைத் தீர்மானம், நாடு கடந்த தமிழீழம் என்பது பற்றி தெரிவிக்கப்பட்டு வருகின்றன. புலிகளின் தலைமை முற்றுமுழுதாக அழித்தொழிக்கப்பட்ட பின்பு வெளிநாடுகளில் புலிகளுக்காக செயற்பட்டவர்கள் தங்களுடைய வருமானம் தடைப்பட்டு விடும் அல்லது தமது நிதி சேகரிப்பு பாதிக்கப்பட்டு விடும் என்பதற்காக இங்குள்ள புலம்பெயர் தமிழ்மக்களை ஏமாற்றும் நோக்கில் இதுபோன்ற பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். புலித் தலைமைகளின் அழிவுக்குப் பின்னர் இதுவரை காலமும் வெளிநாடுகளில் பிரிந்தே செயற்பட்டவர்கள் அதாவது, பிரபாகரன் கொல்லப்பட்ட பின், கேபி கைது செய்யப்பட்ட பின் நெடியவன் அணியெனவும், உருத்திரகுமார் அணியெனவும் பிரிந்தே செயற்பட்டவர்கள், பிரிந்திருந்து செயற்படுவதனால் தாங்கள் தொடர்ந்தும் பலவீனப் படுத்தப்படுகிறோம் என்பதை உணர்ந்து தற்போது இரண்டு அணிகளும் ஒன்று சேர்ந்திருக்கின்றன. இந்த இரண்டு அணிகளும் ஒன்று சேர்ந்தமைக்கு தமிழர்கள் மீது கொண்ட அக்கறையோ அன்போ அல்லது அவர்களின் நலன் சார்ந்தோ அல்ல. தமது நிதி சேகரிப்பு, தமது வருமானம் என்பன குறைகின்றதாலும், வருமானம் இல்லாமற் போய்க் கொண்டிருப்பதனாலும், தாம் பிரிந்து செயற்படுவது மக்களுக்கு தெரிய வருகின்றது என்பவற்றை உணர்ந்ததாலும் இவர்கள் தற்போது வெளியுலகத்திற்காக ஒன்று சேர்ந்திருக்கிறார்கள். எனினும் இவர்கள் உள்ளளவில் பிரிந்தே செயற்பட்டு வருகின்றனர் என்பது எமக்கு தெரியும். இவர்கள் குறித்தும் இவர்களின் செயற்பாடுகள் தொடர்பிலும் நாம் உன்னிப்பாகவே அவதானித்து வருகின்றோம்.கேள்வி: தற்போது விடுமுறை காலம் என்பதால், விடுமுறை காலத்தில் பெருமளவிலான தமிழ்மக்கள் இலங்கைக்கு செல்ல விரும்புகின்றனர். இவர்கள் இலங்கைக்கு செல்வதற்கு மிகுந்த அச்சமடைகின்றனர். அதாவது தாம் கடத்தப்படலாம், கொலை செய்யப்படலாம் மற்றும் தமக்கு ஏதாவது அசௌகரியங்கள் ஏற்படலாம் என்று. இதுகுறித்து நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?
திரு.ஜகத் டயஸ்: நிச்சயமாக அப்படியான எந்தவித செயற்பாடுகளும் யாராலும் யார்மீதும் மேற்கொள்ளப்படாதென்பதை என்னால் உறுதியாகக் கூறமுடியும். இதுபோன்ற சம்பவங்கள் அல்லது நடவடிக்கைகளை யாராவது தங்கள்மீது. தனிப்பட்ட ரீதியிலோ, கோபதாபங்களை முன்நிறுத்தியோ அன்றில் எக்காரணத்திற்காகவோ மேற்கொள்ள முனையும் பட்சத்தில் உடனடியாக நீங்கள் பேர்லின் தூதுவராலயத்துடன் தொடர்பு கொண்டு முறைப்பாட்டினை தெரிவிக்கலாம். நேரடியாக தொடர்பு கொள்ள முடியாதவர்கள் மின்னஞ்சல் மூலமோ, இணையங்களின் (ஊடகங்களின்) ஊடாகவோ தெரிவிக்கப்படும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். கேள்வி: “அதிரடி” இணையம் ஊடாக புலம்பெயர் தமிழர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது என்ன?
திரு.ஜகத் டயஸ்: முப்பது வருடகாலப் போராட்டம் நிறைவடைந்து விட்டது. மூட நம்பிக்கை, ஆசை வார்த்தை மற்றும் பொய்யான பிரச்சாரங்களை இனிமேலும் நம்ப வேண்டாம். புலிகளின் ஈழம் அல்லது தமிழீழம் என்ற வார்த்தையானது ஒரு கனவாகும். ஈழம் அல்லது தமிழீழம் என்ற கோசங்களுக்கும், செயற்பாடுகளுக்கும் எதிர்காலத்திலும் நிச்சயமாக இடமளிக்க மாட்டோம். என்னைவிட புலிகள் இயக்கத்தினரின் செயற்பாடுகள் பற்றி தமிழ் மக்களாகிய உங்களுக்கு நன்றாகத் தெரியும். புலிகளின் மாயைக்குள் சிக்காது விலகிநின்று தங்கள் எதிர்கால நன்மை, தங்கள் குடும்பம், தங்கள் பிள்ளைகளின் கல்வி மற்றும் எதிர்காலம், பொருளாதார வசதிகள் போன்றவற்றில் கவனம் செலுத்தி நாம் இலங்கையர்கள் நமதுநாடு இலங்கை என்ற ரீதியில் செயற்பட வேண்டுமென்பதே எனது அன்பான வேண்டுகோளாகும்.
ஒரேயொரு கேள்வியை நான் தங்களிடம் கேட்க விரும்புகிறேன். இவ்வளவு காலமும் தமிழ் மக்களுக்கோ குறிப்பாக வடக்கு கிழக்கு தமிழ்மக்களுக்கோ அன்றில் புலம்பெயர்ந்த தமிழ்மக்களுக்கோ புலிகள் அமைப்பு ஏதாவதொரு நன்மை செய்துள்ளார்கள் அல்லது ஏதாவதொரு நல்ல காரியத்தை செய்துள்ளார்கள் என்பதை சுட்டிக்காட்ட முடியுமா?. புலிகளின் தமிழீழம் என்ற கோரிக்கையானது என்ன? அவர்கள் வடக்கு கிழக்கு மக்களுக்காகவா புலிகள் தமிழீழத்தைக் கோருகின்றார்கள்? அவ்வாறெனில் கொழும்பிலும், கண்டியிலும், கேகாலையிலும், பதுளையிலும், இரத்தினபுரியிலும், களுத்துறையிலும், மாத்தளையிலும், நுவரெலியாவிலும், காலியிலும் என நாடெங்கிலும் பரந்துவாழும் தமிழ்மக்கள் எங்கே போவது? அதனை நாம் நன்கு சிந்தித்து செயற்பட வேண்டும்.
நாம் இலங்கையர்கள் என்ற ரீதியில் தமிழ், சிங்கள, முஸ்லிம் என்ற பேதங்களைக் களைந்து நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும். இதற்காக அனைத்துத் தமிழ்மக்களும் ஒத்துழைப்பையும் அர்ப்பணிப்பையும் மேற்கொள்ள வேண்டும். வெளிநாடுகளில் நாடுகடந்த தமிழீழம் வட்டுக்கோட்டை தீர்மானம் போன்றவற்றில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலானோர் இளைஞர்களே. அவர்களிலும் பெரும்பாலானவர்கள் இலங்கையில் பிறக்காதவர்கள். அவர்களுக்கு இலங்கையின் பிரச்சினை தான் என்ன?, இலங்கையில் என்ன நடக்கிறது? என்பது பற்றி எதுவுமே தெரியாது. அவர்களை மூளைச்சலவை செய்து அவர்களை ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள் உள்ளிட்ட விடயங்களுக்கு முன்வரிசையில் அமர்த்தி அவர்களைத் தூண்டிவிட்டு பின்னாலிருந்து புலி முக்கியஸ்தர்களும், ஆதரவாளர்களும் குளிர்காய்கின்றார்கள். எனவே இந்நிலையைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு உண்மை நிலையினைத் தெளிவுபடுத்தி, புத்திமதி கூற வேண்டும். இவ்வாறான சம்பவங்களில் ஈடுபடுவதன் மூலம் தமக்கும் தமது குடும்பத்திற்கும் பிரச்சினைகளை ஏற்படுத்தவிடக் கூடாதென்பதை அந்த இளைஞர்கள் உணர்ந்து கொள்ளச் செய்ய வேண்டும். இதுவே எனது அன்பான வேண்டுகோளாகும். தமது பிள்ளைகளை திருத்துவது மாத்திரமல்லாது பெற்றோர்கள் தாமும் உண்மைநிலையினை உணர்ந்து நாம் இலங்கையர் என்ற ரீதியில் ஒன்றாக கைகோர்த்து நாம் ஒன்றாக செயற்பட முன்வர வேண்டுமென்பதையும் கேட்டுக் கொள்ளுகின்றேன்.!!!! வன்னிக்கள முனையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் சில..









பேட்டியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில் சில..



0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’