வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 29 ஏப்ரல், 2010

முதல் வெற்றியின் எதிர்பார்ப்புக்களுடன் யாழ். இந்துக்களின் 3ஆவது போர் நாளை ஆரம்பம்

இந்துக்களின் போர் என வர்ணிக்கப்படும் கொக்குவில் இந்துக் கல்லூரி - யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் 19 வயதுப் பிரிவு கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான இவ்வருட போட்டிகள் நாளை 30ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ளது.

மட்டுப்படுத்தப்படாத ஓவர்கள் கொண்ட இரண்டு நாட்களாக நடைபெறவுள்ள இந்துக்களின் போர் இவ்வருடம் மூன்றாவது ஆண்டுப் போட்டியாக ஏப்பிரல் 30ஆம் திகதி மற்றும் மே மாதம் 1 ஆம் திகதி ஆகிய தினங்களில் கொக்குவில் இந்துக் கல்லூரியின் விரிவாக்கப்பட்ட மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இவ்வாண்டு நூற்றாண்டைக் கொண்டாடும் கொக்குவில் இந்துக் கல்லூரிக்கு இவ்வருட போட்டி சிறப்பானது. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கமும் இவ்வருடம் நூற்றாண்டு விழாவினைக் கொண்டாடுகின்றது. இதனால் இவ்வாண்டு போட்டிகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக இரு அணிகளுக்கும் அமையவுள்ளன.

இம்முறை போட்டிகள் நடைபெறவுள்ள கொக்குவில் இந்துக் கல்லூரி மைதானம் முன்பு போல் அல்லாது தற்போது விரிவாக்கப்பட்டு புதுப் பொலிவுடன் காணப்படுகின்றது.
கொக்குவில் இந்துக் கல்லூரி அணி எஸ். கோகுலனின் அனுபவமிக்க பயிற்சியில் கே.நிரோஜனின் தலைமையில் களமிறங்குகின்றது. அணியின் ஏனைய் வீரர்களாக என்.கார்த்திக் (உபதலைவர்), கே.ஜனார்த்தனன், இ.பவீந்திரன், பவிராஜ், பிரதீப், பிரதீஸ், உத்தமக்குமரன், ஜனுதாஸ், இராகுலன், சிலோஜன், பங்குஜன், திவாகர், ஆதித்தன், சுஜுதரன், சாம்பவன் ஆகியோர் விளையாடுகின்றனர்.
கொக்குவில் இந்துக் கல்லூரி அணி ஏழு சுழல் பந்துவீச்சாளர்களை பெரும் பலமாக கொண்டுள்ளது. கூடவே நான்கு வேகப்பந்து வீச்சாளர்களையும் அணியில் கொண்டுள்ளது.கொக்குவில் இந்துக் கல்லூரியின் விக்கெட் காப்பாளராக ஆதித்தன் செயற்படவுள்ளார்.
துடுப்பாட்டத்தில் தொடக்கம் முதல் இறுதி வரை அணியினைத் தாங்கிச் செல்ல சிறப்பான துடுப்பாட்ட வரிசையுள்ளது. இத்துடன் இலங்கை 19 வயதுப் பிரிவு தெரிவு அணியில் யாழ்.மாவட்டத்திலிருந்து சென்ற ஒரேயொரு வீரராக கொக்குவில் இந்துக் கல்லூரியின் இராகுலன் இருப்பது அணியின் பலம்.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணி எஸ்.உமாதரனின் இளமையான பயிற்றுவிப்பில் ஆர்.நிருஜன் தலைமையில் களமிறங்குகின்றது. அணியின் ஏனைய வீரர்களாக எஸ்.செந்தூரன் (உபதலைவர்), கே.டிலுக்ஸன், ஏ.பார்த்தீபன், ஆர்.அனோஜன், கே.பிரகாஸ், அமலன், ஜே.சஜீகன், எஸ்.சஜீவன், கே.சிவேந்திரன், ஜி.கஜீபராஜ், எல்.ரகோஜன், ஜி.கிருசோபன், எஸ்.மயூலக்ஸன் சுதன், ரஜீவன், ஜஸ்மினன், அகிலதர்சன் ஆகியோர் அணியின் உயிர்நாடிகளாகவுள்ளனர்.
யாழ்.இந்துக் கல்லூரி அணி செந்தூரன், மூன்று சுழல் பந்துவீச்சாளர்களையும் நான்கு வேகப் பந்துவீச்சாளர்களை கொண்டு கொக்குவில் இந்துவை மிரட்டக் காத்திருக்கின்றது.
இதனைவிட இவ்வருடம் யாழ்.மாவட்டப் பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் ;துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பாகச் செயற்பட்டுள்ளனர். டிலுக்ஸன், நிரூஜன் ஆகியோர் இவ்வருடப் போட்டிகளில் சிறப்பான அரைச் சதங்களைப் பெற்று அணியின் துடுப்பாட்ட வரிசையினை நம்பிக்கைக்குரியதாக்கியுள்ளனர்.
இவ்வாண்டு யாழ்.மாவட்ட பாடசாலைகள் கிரிக்கெட் சங்கம் ஏற்பாடு செய்து நடத்திய கிரிக்கெட் போட்டியில் இரு அணிகளும் தமது தனித்திறமையை வெளிப்படுத்தியிருந்தன. இரு அணிகளிலும் திறமையான துடுப்பாட்ட மற்றும் பந்துவீச்சாளர்கள் நிறைந்துள்ளனர்.
2008 ஆம் ஆண்டு முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்ட இப்போட்டியில் நடந்து முடிந்த 2 ஆண்டுப் போட்டிகளும் சமநிலையில் முடிவடைந்தது. இம்முறைப் போட்டியில் முதல் வெற்றியினை பதிவு செய்வது எந்த அணி என்ற ஆவலான எதிர்பார்ப்புடன் இரு அணி ரசிகர்களும் காத்திருக்கின்றனர். ,

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’