வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 23 மார்ச், 2010

செய்தியறிக்கை


 

அமெரிக்க காங்கிரஸ் சபாநாயகர் நான்சி பெலொசி
செய்தியாளர் சந்திப்பில் அமெரிக்க காங்கிரஸ் சபாநாயகர் நான்சி பெலொசி
சுகாதார மறுசீரமைப்பு சட்டமூலம் வெற்றி பெற்றமை மக்களுக்கு கிடைத்த வெற்றி என்கிறார் அதிபர் ஒபாமா
பெருமளவில் மாறுதல்களை கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற தனது சுகாதாரத்துறை மறுசீரமைப்பு சட்டமூலத்துக்கு கிடைத்த அங்கீகாரத்தை அமெரிக்க மக்களுக்குக் கிடைத்த வெற்றி என்று அதிபர் ஒபாமா விபரித்துள்ளார்.
ஒரு வருட காலம் தொடர்ச்சியாக நடந்த முயற்சிகள் மற்றும் விவாதங்களுக்குப் பிறகு அரசியல் வேறுபாடுகளைக் கடந்து நாடு எழுச்சி பெற்றுள்ளதை இது காட்டுவதாக அவர் கூறினார்.
மிகவும் சிறிய பெரும்பான்மையுடன் அங்கீகரிக்கப்பட்ட இந்த சட்டமூலம், 16 மாதங்களுக்கு முன்னதாக ஒபாமா அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் அவருக்குக் கிடைத்துள்ள முதல் முக்கிய வெற்றியாகும்.
இதன் மூலம், சுகாதாரக் காப்புறுதி மேலும் 3 கோடி மக்களுக்கு விஸ்த்தரிக்கப்படுவதுடன், காப்புறுதி நிறுவனங்கள் மேற்கொள்ளும் கட்டுப்பாட்டு நடைமுறைகளுக்கு தடை விதிக்கப்படும்.
ஆனால், இதனை தாம் தொடர்ந்தும் எதிர்க்கப்போவதாக எதிர்க்கட்சியான குடியரசுக்கட்சியினர் கூறுகிறார்கள்.


இஸ்ரேலிய பாதுகாப்பில் அமெரிக்காவுக்கு அக்கறை உண்டு என்கிறார் ஹிலாரி
ஹிலாரி கிளிண்டன்
ஹிலாரி கிளிண்டன்
மத்திய கிழக்கின் அமைதி நடவடிக்கைகள் தொடர்பில் இஸ்ரேல் சிரமமான ஆனால் தேவையான தெரிவுகளை எதிர்நோக்குவதாக அமெரிக்காவின் வெளியுறவுச் செயலர் ஹிலாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் தற்போதுள்ள நிலை நீடிப்பது என்பது அனைத்து தரப்பினருக்கும் இயலாததாகும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இஸ்ரேலுக்கு ஆதரவான பலம் பொருந்திய ஒரு குழுவினரிடையே உரையாற்றிய திருமதி கிளிண்டன், இஸ்ரேலுடன் தற்போது அமெரிக்காவுக்கு மாற்றுக் கருத்துக்கள் ஏற்பட்டுள்ள நிலையிலும், இஸ்ரேலின் பாதுகாப்பு தொடர்பில் அந்நாட்டுக்கு அமெரிக்கா அளித்துவரும் ஆதரவு மலை போன்று உறுதியானது என்று கூறியுள்ளார்.
மத்திய கிழக்கு பகுதியில் அமைதியை ஏற்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகளில் அமெரிக்காவுக்கு உள்ள பங்கை, கிழக்கு ஜெருசலேம் அல்லது மேற்கு கரையில் இஸ்ரேலால் மேற்கொள்ளப்பட்டுவரும் கட்டுமானப் பணிகள் குறைத்து மதிப்பிடுவது போல உள்ளது என்றும் திருமதி கிளிண்டன் தெரிவித்துள்ளார்.
அந்தப் பகுதியின் அமைதி மற்றும் பாதுகாப்புக்கு இரு நாடுகள் என்கிற தீர்வுதான் ஒரே சாத்தியக்கூறு என்றும் அமெரிக்க வெளியுறவுச் செயலர் கருத்து வெளியிட்டுள்ளார்.


ஆப்கானிய கிளர்ச்ச்சிக்குழுவுடன் அதிபர் கர்சாய் சமாதானப் பேச்சுவார்த்தை
குல்புதீன் ஹெக்மத்தாயர்
குல்புதீன் ஹெக்மத்தாயர்
ஆப்கானிஸ்தானின் முக்கிய கிளர்ச்சிக்குழுவான குல்புதீன் ஹெக்மத்தாயர் தலைமையிலான ஹெஸ்ப் -ஈ- இஸ்லாமி அமைப்பின் மூத்த பிரதிநிதிகள் குழுவுடன் அதிபர் ஹமீட் கர்சாய் அமைதிப் பேச்சுவார்த்தைகளை நடத்தியதாக ஆப்கான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சந்திப்பு தலைநகர் காபூலில் நடந்ததாக கூறிய அதிபர் சார்பிலான பேச்சாளர் ஒருவர், மேலதிக விபரங்கள் எதனையும் தரவில்லை.
ஆப்கானிய அரசாங்கத்துக்கும், சர்வதேச படைகளுக்கும் எதிராக சண்டையிட்டு வருகின்ற ஹெஸ்ப்-ஈ- இஸ்லாமி அமைப்புடன் நேரடியாக தொடர்புகொண்டதாக ஆப்கானிய அதிபர் உறுதி செய்வது இதுதான் முதல் தடவை என்று செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.
ஆப்கானில் இருந்து சர்வதேச படைகள் வெளியேற வேண்டும் என்பது உட்பட 15 அம்சங்களைக் கொண்ட சமாதானத்திட்டம் ஒன்றை தாம் முன்வைத்ததாக அந்தக் குழுவின் சார்பிலான பேச்சாளர் ஒருவர் முன்னதாக கூறியிருந்தார்.


பர்மாவில் ஆலை அமைக்கும் டாடா நிறுவனம்
டாடா நிறுவன முத்திரை
டாடா நிறுவன முத்திரை
பர்மாவில் கனரக வாகனங்களை உற்பத்தி செய்வதற்கான ஆலை ஒன்றை அமைப்பதற்கான ஒப்பந்தம் ஒன்றை பர்மிய அரசாங்க நிறுவனம் ஒன்றுடன் செய்துகொண்டுள்ளதாக இந்தியாவின் மிகப்பெரிய வணிக வாகன தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.
இந்த ஆலைக்கு இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் கடனைக்கொண்டு நிதி வசதி மேற்கொள்ளப்படும் என்றும், ஆரம்பத்தில் வருடாந்தம் ஆயிரம் வாகனங்களை அது உற்பத்தி செய்யும் என்றும் டாடா கூறுகிறது.
பரவலான மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாக பர்மாவின் இராணுவ அரசாங்கம் குற்றஞ்சாட்டப்படும் நிலையில், அந்த நாட்டில் முதலீடு செய்வதற்காக இந்தியா போன்ற நாடுகளை எதிர்ப்புக்குழுக்கள் விமர்சித்து வருகின்றன. 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’