பெரிதாக செய்திகளில் அடிபடாமல் ஒதுங்கி இருந்துவருகிறார் கியானேந்திரா |
நாட்டு மக்கள் விரும்பும் பட்சத்தில் நேபாளத்தில் மன்னராட்சிக்கு மீண்டும் புத்துயிர் அளிக்க முடியும் என்று தான் நம்புவதாக அந்நாட்டின் முன்னாள் மன்னர் கூறியுள்ளார்.
முடி இழக்க நேரிட்ட நேபாள மன்னர் கியானேந்திரா அந்நாட்டின் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கியுள்ள அரிதான ஒரு பேட்டியில், மன்னராட்சி அகற்றப்பட்டது குறித்தும், தற்போதைய சூழலில் தனது அரசியல் லட்சியங்கள் என்ன என்றும், தான் தற்போது என்ன செய்து வருகிறார் என்பது பற்றியும் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
நேபாள மக்கள் மீண்டும் மன்னராட்சியைக் கொண்டுவர விரும்புகிறார்கள் என்றால், தாங்கள் என்ன செய்வீர்கள் என்று கேட்கப்பட்டபோது, "இது கற்பனை அடிப்படையிலான ஒரு கேள்விதான் என்றாலும், தங்களுக்கு என்ன வேண்டும் என்று முடிவெடுக்க வேண்டியது மக்கள்தான் என்றும், மக்களின் விருப்பங்கள் மதித்து நிறைவேற்றப்பட வேண்டும்" என்றும் கூறியுள்ளார். நேபாளத்திலே மன்னராட்சி முறை என்பது முற்றுப்பெற்றுவிட்டது என்றுதான் கருதவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நேபாளத்தில் அரசாங்கத்துக்கும் மாவோயிய கிளர்ச்சிக்காரர்களுக்கும் இடையில் ஒரு தசாப்தகாலம் நடந்த உள்நாட்டு யுத்தம் 2008ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தபோது அந்நாட்டின் 240 வருட கால மன்னராட்சி முறை ஒழிக்கப்பட்டிருந்தது.
கடைசி மன்னராக இருந்த மக்கள் செல்வாக்கு அற்றவரான கியானேந்திரா, 2005ஆம் ஆண்டு நாட்டின் உச்ச நிறைவேற்று அதிகாரத்தைக் கைப்பற்றியிருந்தார்.
அவர் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது மக்கள் கிளர்ந்தெழுந்து ஜனநாயகம் கோரி காத்மாண்டு வீதிகளில் ஆர்ப்பாட்டங்கள் செய்ய வழிவகுத்திருந்தது.
ஆட்சி அதிகாரத்தை அதிரடியாகக் கைப்பற்றியது தவறு! அந்த அனுபவத்தில் இருந்து நான் பாடம் கற்றுக்கொண்டுள்ளேன் |
அண்மைய சில மாதங்களாக, கியானேந்திராவுக்கு மக்கள் செல்வாக்கு அதிகரித்துவருகிறது. திருவிழாக்களின்போதும், கோயில் வழிபாட்டுக்கு அவர்ச் செல்லும்போதும் பெருந்திரளான மக்கள் கூடவும், உடன் செல்லவும் துவங்கியுள்ளனர்.
அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக வேஷம் போடுகிறார் என்ற குற்றச்சாட்டை கியானேந்திரா மறுத்துள்ளார். தற்போதைய அரசியல் சூழநிலை குறித்து சிந்தித்துக்கொண்டு அமைதிகரமாக தனது நாட்களை கடத்திவருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’