அவசரகாலச் சட்டத்ததையும், மனித உரிமைகள் தொடர்பான சட்டங்களையும் மறுஆய்வு செய்ய தாம் தயாராக இருப்பதாக இலங்கை அதிகாரிகள் குழுவினர் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
இரண்டு நாள் விஜயமாக பிரசல்ஸ் சென்றுள்ள இலங்கை குழுவினர், ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை மீண்டும் பெறுவது குறித்து கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தனர்.
இதன் போது அவசரகாலச் சட்டத்தை தளர்த்துவது, குற்றப்புலனாய்வு விசாரணைகளுக்கு அதிக அதிகாரங்களை கொடுக்கும் சில சட்டவிதிகளையும், சரத்துக்களையும் நீக்குவது போன்றன தொடர்பில் அவர்கள் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுக்கு சில உறுதிமொழிகளை வழங்கியுள்ளனர்.
எதிர்வரும் பொதுத்தேர்தலின் பின்னர் சாட்சியங்களை பாதுகாத்தல், பாதிக்கப்பட்டவர்களை பாதுகாத்தல் போன்ற விதிகளையும் தாம் அறிமுகப்படுத்த உள்ளதாக இலங்கை குழு தெரிவித்துள்ளது.
இதனிடையே இலங்கை தூதுக்குழுவினருடன் நடைபெற்ற பேச்சுக்கள் குறித்த தகவல்களை வெளியிடுவதற்கு ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் பேர்னாட் சாவேஜ் மறுத்துள்ளபோதும், பேச்சுக்கள் முக்கியமானது எனவும், ஆனால் அது மட்டும் தமது முடிவுகளை மாற்றியமைக்க போதுமானதல்ல எனவும் தெரிவித்துள்ளார்.
இலங்கை என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பில் நாம் ஒரு உடன்பாட்டுக்கு வந்துள்ளோம். மனித உரிமைகளே எமது வெளிவிவகார உறவுகளுக்கு முக்கியமானவை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஆகஸ்ட் 15 ஆம் நாளுடன் நிறுத்தப்படவுள்ள ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையால் பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலைவாய்புக்களை இழப்பார்கள் என தெரிவிக்கப்படுகின்றபோதும், தாம் ஐரோப்பிய ஒன்றிய விதிகளை மீறமுடியாது என சாவேஜ் தெரிவித்துள்ளார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’