வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 15 மார்ச், 2010

செய்தியறிக்கை


 

பயங்கரவாத சதி: தாக்குதல் தொடர்பில் மும்பையில் இந்தியர் இருவர் கைது
2008ல் நடந்த தாக்குதலில் 160 பேர் கொல்லப்பட்டிருந்தனர்
இந்தியாவின் மும்பை நகரில் பல்வேறு இடங்களைத் தாக்கத் திட்டமிட்டார்கள் என்று கூறி இரண்டு பேரை அந்நாட்டின் பொலிசார் கைது செய்துள்ளனர்.
இந்தியப் பிரஜைகளான அவ்விருவரும் பாகிஸ்தானில் உள்ள சதித் திட்ட வகுப்பாளர்களிடம் இருந்து உத்தரவுகளைப் பெற்றுவந்ததாக பொலிசார் நம்புவதாக மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
மும்பையின் எரிபொருள் சேமிப்புக் கூடம், கடை வளாகம் போன்றவற்றில் தாக்குதல் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது என்று குற்றஞ்சாட்டப்படுகிறது.
2008 நவம்பரில் மும்பையில் நூற்று அறுபது பேரை பலிகொண்ட தாக்குதல்களுக்கு பாகிஸ்தானைத் தளமாகக் கொண்டியங்கும் பயங்கரவாதக் குழுக்கள் மீதே இந்தியா பழி சுமத்தியிருந்தது.
அண்டை நகரான புனேயில் கடந்த மாதம் நடந்த 16 பேர் கொல்லப்பட்ட குண்டுவெடிப்பை அடுத்து மும்பையில் அதிகாரிகள் பாதுகாப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.


பாகிஸ்தானில் தாலிபான் சந்தேக நபர்களின் பதுங்கிடங்கள் மீது விமான குண்டு வீச்சு
பாகிஸ்தான் குண்டுவீச்சு விமானங்கள்

பாகிஸ்தானின் வடமேற்குப் பிராந்தியத்தில் ஆப்கானுடனான எல்லையை ஒட்டிய பகுதிகளில் தாலிபான்களின் பதுங்கிடமாக சந்தேகிக்கப்படும் இடங்களில் அரச படையினர் நடத்திய வான் தாக்குதலில் குறைந்தபட்சம் ஒன்பது கிளர்ச்சிக்காரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகின்றனர்.
இஸ்லாமியவாத ஆயுததாரிகள் வலுவாகவுள்ள ஓரக்ஸாய் பழங்குடியினப் பகுதியில் வட்டார தாலிபான் தளபதி ஒருவரின் வீடும் தாக்குதல் இலக்காகியுள்ளது.
அத்தாலிபான் தளபதி கொல்லப்பட்டாரா என்பது இதுவரை தெளிவாகவில்லை.
கடந்த ஒருவார காலமாக நடந்த குண்டுத் தாக்குதல்களை அடுத்து இந்த வான் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
குண்டுத் தாக்குதல்களில் பாதுகாப்புப் படையினர், தொண்டு நிறுவன ஊழியர்கள் உட்பட எண்பதுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருந்தனர்.


தாய்லாந்து எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் பாங்காக்கில் ஆர்ப்பாட்டம்
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் ஆர்ப்பாட்டம் நடத்திய பல்லாயிரக்கணக்கானவர்கள், திங்கட்கிழமை மதியவேளைக்கு முன்பாக அரசாங்கம் கலைக்கப்பட்டு தேர்தல் அறிவிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசாங்கம் ராஜினாமா செய்யாவிட்டால் தங்களுடைய ஆர்ப்பாட்டம் தலைநகரின் மற்ற பகுதிகளுக்கு பரவும் என ஆர்ப்பாட்டகாரர்கள் கூறியுள்ளனர்.
ஆனால் உடனடியாக நாடாளுமன்றத்தை கலைப்பது என்பது நடக்காத ஒன்று என்று அரசாங்கத்தின் சார்பில் பேசவல்லவர் கூறியுள்ளார்.
தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்சின் சினாவத்ராவின் ஆதரவாளர்களான இவர்கள், தற்போதைய அரசு சட்டப்பூர்வமான ஒன்று அல்ல என்றும், இதற்கு இராணுவத்தின் ஆதரவு இருப்பதாகவும் கூறுகின்றனர்.


போஷாக்கின்மையால் 11 சைபீரியப் புலிகள் உயிரிழந்த உயிரியல் பூங்காவுக்கு நிதியுதவி
சைபீரியப் புலிகள்
சீனாவில் விலங்கியல் பூங்கா ஒன்றில் அரிய சைபீரியப் புலி வகையைச் சேர்ந்த 11 புலிகள் போஷாக்கின்மையால் உயிரிழக்க நேர்ந்ததாக செய்திகள் வெளியாகிய நிலையில், அந்த உயிரியல் பூங்காவுக்கு அரசாங்க நிதியிலிருந்து ஒரு மில்லியன் டாலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்த நிதியில் பெரும்பங்கு விலங்குகளைப் பராமரிப்பதற்கும் மீதிப் பணம் விலங்கியல் பூங்காவை நிர்வகிப்பதற்கும் பயன்படுத்தப்படும் என்று சீனாவின் வட கிழக்கில் உள்ள ஷென்யாங் பிராந்திய அரசாங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்த விலங்கியல் பூங்காவில் நிதி நெருக்கடி ஏற்பட்டதால், விலை மலிவான கோழி எலும்புகள் புலிகளுக்கு உணவாக வழங்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’