1977 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜே. ஆர் அரசாங்கமே இந் நாட்டில் மிகவும் திறமையாக இயங்கி வந்த கூட்டுறவு சங்கங்களை முடங்க வைத்தது. மக்களுக்கு பாரிய சேவைகளை வழங்கிவந்த கூட்டுறவுத் துறையை இயங்கவிடாது இந் நாட்டில் திறந்த பொருளாதார வர்த்தகத்துறையை அறிமுகப்படுத்தி நாசப்படுத்திவிட்டனர். இன்று எமது ஜனாதிபதியின் ஆலோசனையின் கீழ் மீண்டும் முறையாக கூட்டுறவு சங்கங்களை இயங்க வைத்து வருகின்றோம் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
மருதானையில் வரையறுக்கப்பட்ட சுகாதரத் திணைக்கள கூட்டுறவு சிக்கனக் கடனுதவிச் சங்கத்திற்கான புதிய ஐந்து மாடிக் கட்டடத்தை திறந்து வைத்தபின்னர் இடம்பெற்ற கூட்டத்திலேயே அமைச்சர் பந்துல குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார். திறந்த பொருளாதாரக் கொள்கையை அறிமுகப்படுத்திய ஜே. ஆர். தன்னால் பெண்ணை ஆணாகவும், ஆணை பெண்ணாகவுமே மாற்ற இயலாது என்றார்.
இவரின் பொருளாதாரக் கொள்கையால் பணக்காரர்களே பெரும் செல்வத்தை தேடினர். ஏழைகளின் சொத்தாக விளங்கிய கூட்டுறவுச் சங்கங்களின் சொத்துக்களையும், வாகன எண்ணெய் விற்பனை நிலையங்களையும் ஐ. தே. கட்சியின் ஆதரவாளர்களுக்கும், உறவினர்களுக்கும் மோசடியான வகையில் விற்றும், வழங்கியும் இருந்தனர்.
காலி முகத்திடலில் பிரபல ஹோட்டல் ஒன்றுக்கு பின் பகுதியில் கூட்டுறவு சங்கத்துக்கு உரிமையான காணியை தங்கள் கட்சி ஆதரவாளருக்கு விற்பனை செய்து இருந்தமை கண்டு பிடிக்கப்பட்டு, நீதிமன்றத்தின் மூலமாக மீளவும் கூட்டுறவு சங்கத்துக்கு பெறப்பட்டுள்ளது. பெரும் பெறுமதியான இக் காணியில் கூட்டுறவு சங்கத்தின் தலைமை அலுவலகத்தை நிர்மாணிக்க ஜனாதிபத மஹிந்த ராஜபக்ஷ ஆலோசனையை வழங்கி உள்ளார். கூடிய விரைவில் இப்பணியை மேற் கொள்வோம்.
வடக்கு, கிழக்கு பகுதி உட்பட நாட்டின் அனைத்து கூட்டுறவு சங்கங்களும் மீளவும் செயற்பட வைத்து வருகின்றோம். கூட்டுறவு சங்கங்கள் பொதுமக்களுக்கு பெரும் சேவைகளை புரிந்துவருகிறது. இன்று நாடு முழுவதுமாக 363 கோப் சிற்றி வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. மினி கோப் சிற்றி வர்த்தக நிலையங்கள் 1100 திறக்கப்பட்டுள்ளன. அரசாங்கம் பொதுமக்களின் நலனிலேயே கூடிய கவனத்தை செலுத்தி வருகிறது. கூட்டுறவுச் சங்கங்களின் ஊழல், இலஞ்சம் ஒழிக்கப்பட்டுள்ளது என்றார்.














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’