ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவின் சுரங்க ரயில் கட்டமைப்புக்குள் நடந்த இரண்டு தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் குறைந்தது 38 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் 70 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் ரஷ்ய அதிகாரிகள் கூறுகின்றனர்.
ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தவர்களும் மற்றும் ரயில் நிலையத்தின் நடைமேடையில் வண்டிக்காக காத்திருந்தவர்களும் பலியானவர்களில் அடங்குவர்.
இத்தாக்குதல்களுக்கு இதுவரை எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை.
ஆனால் தாக்குதலை நடத்தியதாகத் தெரியவரும் பெண்கள் தற்கொலை குண்டுதாரிகள் ரஷ்யாவின் வடக்கு காகஸஸ் பிராந்திய ஆயுதக் குழுக்களுடன் தொடர்புடையவர்கள் என்று தாங்கள் நம்புவதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் செச்சன்யா, இங்குஷெட்டியா ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதியான வடக்கு காகஸஸைச் சேர்ந்த ஆயுதக் குழுக்களுக்கு இந்த தற்கொலைத் தாக்குதல்களுக்கு தொடர்பு இருக்கிறது என்று ரஷ்யாவின் முக்கிய உளவுத்துறையான எஃப்.எஸ்.பி. அமைப்பின் தலைவர் உடனடியாகவே பழிசுமத்தியுள்ளார்.
ரஷ்யாவின் முக்கிய நகரங்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுவருகின்றன என்று இப்பகுதி கிளர்ச்சிக் குழுவின் தலைவராகத் தன்னை சுயமாக அறிவித்துக்கொண்டவரான டோகு உமரொவ் தெளிவாக எச்சரித்திருந்தார்.
தங்களுடைய செயற்பாடுகளை நாடு முழுக்க விரிவுபடுத்தப்போவதாகவும் இவர், அண்மையில் இணையதளத்தில் வெளியிட்ட ஒரு வீடியோ செய்தியில் கூறியிருந்தார்.
ஆறு ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் மாஸ்கோவில் நடக்கும் இப்படிப்பட்ட ஒரு பயங்கரவாதத் தாக்குதல் இது.
உயிர்ச் சேதத்தின் அளவு அதிகமாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் நன்றாகத் திட்டமிடப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ள ஒரு தாக்குதல் இது.
கூட்டம் நிரம்பி வழியும் நேரத்தில் சுரங்க ரயில் நிலையங்களுக்குள் ரயில் நிற்கும்போது குண்டு வெடிப்பதுபோல இந்தத் தாக்குதல்கள் வடிவமைக்கப்பட்டிருந்தன.
இரண்டு தாக்குதலிலுமே, இரும்பு துண்டுகள், நட்டுகள் போன்றவை நிரப்பப்பட்ட வெடிகுண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்று மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
பிரதமர் பயணம் இடைநிறுத்தம்
சைபீரியாப் பகுதியில் சுற்றுப் பயணம் செய்து கொண்டிருக்கும் ரஷ்யப் பிரதமர் புடின், இந்தச் சம்பவங்களை அடுத்து தனது சுற்றுப் பயணத்தை நிறுத்திக்கொண்டு மாஸ்கோ திரும்பியுள்ளார்.
மாஸ்கோவில் இடம்பெற்றுள்ள குண்டு வெடிப்புக்கு காரணமானவர்களை கண்டுபிடித்து தண்டனை வழங்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றும், தீவிரவாதிகள் முற்றிலுமாக அழிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’