மடீராவில் வெள்ளம் |
போர்த்துகல் சூறாவளியில் பலர் பலி
போர்த்துகலின் மடீரா தீவில் சூறாவளியால் ஏற்பட்ட மண்சரிவு போன்றவற்றில் சிக்கி கொண்டவர்களை தேடும் பணியில் மீட்பு பணியாளர்கள் ஈடுப்பட்டு வருகின்றனர்.
தலைநகர் ஃபூன்சல் மற்றும் இதர பகுதிகளில் மழை வெள்ளம் உட்புகுந்ததில் 40 பேர் பலியாகியுள்ளனர். மிக அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ள தீவின் தென்பகுதிக்கு மீட்பு பணியாளர்கள் செல்ல முடியாமல் இருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சாலைகளில் தடை ஏற்பட்டுள்ளன, தொலைபேசி தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன, மின்சார மற்றும் குடிநீர் வசதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
ஐரோப்பிய ஒன்றியத்திடம் அரசியல் ஒத்துழைப்பையே எதிர்பார்க்கிறோம் - கிரேக்கம்
ஐரோப்பிய ஒன்றிய கொடி |
கிரேக்கம் எதிர்நோக்கியுள்ள நிதிப்பிரச்சனையின் மீட்சிக்கான உதவியை இன்றி அரசியல் ரீதியான ஒத்துழைப்பையே ஐரோப்பிய ஒன்றியத்திடம் இருந்து எதிர்பார்ப்பதாக அந்நாட்டு பிரதமர் ஜோர்ஜ் பாப்பண்ரோவ் தெரிவித்துள்ளார்.
மற்றைய நாடுகள் பெறும் கடன்களுக்கான வட்டி வீதத்தை போலவே தாமும் கடன்பெற அனுமதிக்கப்பட வேண்டுமென பிபிசிக்கு அளித்த செவ்வியில் பாப்பண்ரோவ் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப்பிரச்சனை ஐரோப்பாவில் ஒற்றுமையை வலுப்படுத்தும் என நம்புவதாகவும் சாதகமான பெறுபேறுள்ள பரீட்சார்த்தமாக இதனைப் பார்க்க முடியும் எனவும் குறிப்பிட்டுள்ள அவர், ஆனால் மற்ற நாடுகளுக்கும் பரவக்கூடிய ஐரோப்பிய பிரச்சனையாக இது உள்ளதாகவும் எச்சரித்துள்ளார்.
சவுதி அரேபியாவில் பெண் வழக்கறிஞர்களுக்கு வாய்ப்பு
சவுதியில் பெண்களுக்கு கட்டுப்பாடு |
பெண் வழக்கறிஞர்கள் முதல் முதலாக நீதிமன்றத்தில் வாதாடக் கூடிய வாய்ப்பை வழங்கும் சட்டத்தை கொண்டுவருவது குறித்து சவுதி அரேபியா திட்டமிட்டு வருகிறது. நாட்டின் சட்ட நடைமுறைகளை மேம்படுத்தும் அரசர் அப்துல்லாவின் திட்டத்தின் ஒரு பகுதி இது என்று சவுதியின் நீதி அமைச்சர் முகமது அல் ஏசா தெரிவித்துள்ளார்.
விவாகரத்து, குழந்தைகள் பராமரிப்பு போன்ற குடும்பம் தொடர்பான வழக்குகளில் வாதிட பெண் வழக்கறிஞர்களுக்கு இந்த சட்டத்தின் மூலம் வாய்ப்பு கிடைக்கும். தற்போதைய நிலையில் அரசு அலுவலகங்களிலும், நீதிமன்றங்களிலும் பெண்கள் பின்தள வேலைகளைத்தான் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.
சட்டவிரோத குடியேற்றவாசிகளை கொன்றுள்ளனர் எகிப்திய பொலிஸார்
இஸ்ரேல்-எகிப்து |
இஸ்ரேலுக்குள் சட்டவிரோதமாக உட்புக முயற்சித்ததாக கூறி இரு ஆப்ரிக்க குடியேற்றவாசிகளை எகிப்து பொலிஸார் சுட்டு கொன்றுள்ளனர்.
நிற்க சொல்லியும் நிற்காமல் கேளாமல் சென்றதால் எல்லை பாதுகாப்பு படையினர் அவர்களை சுட்டு கொன்றதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இருவரும் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்று தெரியவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக எகிப்து பாதுகாப்பு படையினர் இது போன்று பலமுறை சட்ட விரோத குடியேற்றவாசிகளை சுட்டு கொன்றுள்ளனர்.
குடியேற்றவாசிகள் தனது எல்லை ஊடாக வருவதை எகிப்து தடுக்க வேண்டும் என்று இஸ்ரேல் கூறி வருகிறது. இருநாடுகளும் எல்லையில் தடுப்பு சுவர்களை எழுப்பி வருகின்றன.
சுரேஸ் பிரேமசந்திரன் |
நாடாளுமன்ற தேர்தலில் த.தே.கூ எம்.பிக்களில் மீண்டும் எத்தனை பேருக்கு வாய்ப்பு - சுரேஸ் பிரேமசந்திரன் செவ்வி
இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள பொது தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் முன்னர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்களில் வெளிநாடுகளுக்கு சென்று வசிப்பவர்கள், ஒய்வு பெற்றவர்கள் மற்றும் கடந்த ஜனாதிபதி தேர்தலில் தனியாக போட்டியிட்டு அதனை ஆதரித்து கட்சியில் இருந்து விலகியவர்களை தவிர மற்றவர்கள் போட்டியிடுவார்கள் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
முன்னர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த அனைவரும் அடுத்த தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற நியதி இல்லை என்பதால் அது தொடர்பில் வெளியாகும் ஊகங்கள் அர்த்தமற்றவை எனவும் அவர் தெரிவித்தார்.
இலங்கை ஊடகவியலாளர் குறித்து எவ்வித தகவலும் இல்லை என மனைவி புகார்
ஊடகவியலாளரின் குடும்பம் |
இலங்கையில் கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு இரண்டு தினங்களுக்கு முன்னர் காணாமல போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் இல்லையென அவரது மனைவி கூறியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலின் போது எதிரணிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவாக செய்தி இணையதளமொன்றில் கருத்துக்களை எழுதி வந்த நிலையில் பிரகீத் காணாமல் போயிருந்தார்.
இந்த நிலையில் அவர் காணாமல்போய் ஒருமாதம் கடந்துள்ள போதிலும் பொலிசாரின் விசாரணையில் எவ்வித முன்னேற்றமும் இல்லையெனவும் அதிகாரிகளிடம் அவரை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்வதாகவும் ஊடகவியாளர் பிரகீத்தின் மனைவி சந்த்யா எக்னலிகொட குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், அவரைக்கண்டுபிடிக்கும் பணியில் நீதிமன்றம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் சில தினங்களுக்கு முன்னர் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
ஊடகவியாளரை கண்டுபிடிக்கும் விசாரணைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டுவருவதாக இலங்கைப் பொலிஸ் பேச்சாளர் பிபிசியிடம் கூறினார்.
தெலுங்கானா விவகாரத்தில் மேலும் ஒரு மாணவர் தீக்குளித்து பலி
தெலுங்கானா போராட்டம் |
ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலுங்கானாவை தனியாக பிரிப்பதில் உள்ள தாமதத்தை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தின் போது தீக்குளித்த மாணவர் இறந்துவிட்டதாக ஐதரபாத் நகர போலீசார் கூறுகின்றனர்.
தெலுங்கானாவை தனி மாநிலமாக உருவாக்க வேண்டும் என்று கோரி நூற்றுக்கணக்கான மாணவர்கள் டிசம்பரில் இருந்து தொடர்ந்து போராட்டம் நடத்திவருகின்றனர்.
வன்முறைகள் தொடர்ந்ததன் காரணமாக புதிய மாநிலத்ததை அமைக்கும் பணிகளை மத்திய அரசு நிறுத்தியது. தகவல் தொழில்நுட்பம், மற்றும் மருந்து நிறுவனங்கள் பல அமைந்துள்ள ஐதராபாத் தெலுங்கானாவின் பகுதியாக இருக்க வேண்டும் என்று ஆர்பாட்டக்காரர்கள் விரும்புகின்றனர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’