வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2010

இராணுவ விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க பொன்சேகா மறுப்பு


கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சரத் பொன்சேகா, கடந்த வியாழக்கிழமை தம்மிடம் மேற்கொள்ளப்படவிருந்த விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தாம் இராணுவத்தில் இருந்து விலகிவிட்ட நிலையில், இராணுவ நீதிமன்றம் தம்மை விசாரிக்க முடியாது எனக் கூறியே மறுத்துள்ளார்.
இராணுவத்தில் இருந்து விலகிவிட்ட தாம், தற்போது ஒரு பொதுமகன் எனவும், இந்த நிலையில் இராணுவ நீதிமன்றம் தம்மை விசாரிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது அவர் கொழும்பில் உள்ள இலங்கை கடற்படைத் தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், சரத் பொன்சேகாவுக்கு எதிராக சேகரிக்கப்பட்ட ஆதாரங்களை இராணுவ தளபதியிடம் சமர்ப்பிப்பதற்கு முன்னர், சரத் பொன்சேகாவின் விசாரணை அறிக்கையும் இணைக்கப்பட வேண்டும்.

இந்த நிலையில் சரத் பொன்சேகாவை கடந்த வியாழக்கிழமை விசாரணை நடத்த முயன்ற வேளையில், அதற்கு அவர் கடுமையான மறுப்பை தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் தொடர்ந்தும் அவர் மறுப்பு தெரிவிக்கும் பட்சத்தில், அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது கேள்விக்குறியாகியுள்ளதாக இராணுவத்தரப்பின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

எனினும் தற்போது இராணுவத்தினர் தமது அடுத்த நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அவர் கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்படும் போதும், இராணுவத்தினருடன் வர மறுப்பு தெரிவித்த வேளையில், பலவந்தமாக தூக்கியே வானில் அடைத்து கொண்டு சென்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் சரத் பொன்சேகாவின் வழக்கினை இராணுவ நீதிமன்றில் மூன்று பேர் கொண்ட விசாணைக் குழு ஒன்று மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த குழுவுக்கு கூட்டுப்படைத் தலைமை அதிகாரி ரொசான் குணதிலக தலைமை தாங்குவார். அத்துடன் ஓய்வு பெற்ற இரண்டு இராணுவ அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

1996 – 1997ம் ஆண்டு வரையில் இராணுவ தளபதியாக இருந்த ரொஹான் டி எஸ் தளுவத்த, மற்றும் 2004ம் - 2005ம் ஆண்டுகளில் இராணுவ கட்டளைத் தளபதியாக இருந்த லெப்டினன் ஜெனரல் கொட்டேகொட ஆகியோரே மற்றைய இருவரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’