
லண்டனில் உள்ள இலங்கை வங்கிக் கிளையை பிரதான வங்கியாக மாற்றியமைத்து அதனூடாக உலக நாடுகளில் கிளைகளைத் திறக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக வங்கியின் தலைவர் கலாநிதி காமினி விக்கிரமசிங்க தெரிவித்ததாக அரச இணையத்தளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
அச்செய்தியில்,
'இலங்கை வங்கி யூ. கே. லிமிடெட்' என்ற பெயரில் லண்டனில் ஆரம்பிக்கப்படும் இந்த வங்கியே உலக நாடுகளில் உள்ள இலங்கை வங்கிக் கிளைகளை நிர்வாக மேற்பார்வை செய்யும் என்று தெரிவித்த கலாநிதி விக்கிரமசிங்க, அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் கிளைகளைத் திறக்க எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.
வங்கியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த கலாநிதி விக்கிரமசிங்க, தற்போது லண்டனிலிருந்து இலங்கை வங்கி ஊடாக மேற்கொள்ளப்படும் அனைத்துவித பணப்பரிமாற்றங்களுக்கும் கட்டணம் எதுவும் அறவிடப்பட மாட்டாதென்றும் குறிப்பிட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமுர்த்தி வங்கிகள் கணினிமயமாகும்
அதே வேளை, நாடளாவிய ரீதியில் செயற்பட்டுவரும் சமுர்த்தி வங்கிகளைக் கணினிமயப்படுத்த உள்ளதாக சமுர்த்தி பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி ஆர்.பி.பி. திலகசிறி தெரிவித்தார்.
கணினிகளைக் கொள்வனவு செய்வதற்கான சுற்று நிருபங்கள் சமுர்த்தி வங்கிகள் மற்றும் மகாசங்கம் என்பவற்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
கணினிகளைக் கொள்வனவு செய்வதுடன் ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்திலிருந்து இணையத்தள வசதிகளை பெற்றுக் கொள்வதற்கான அங்கீகாரமும் வழங்கப்பட்டுள்ளதாக பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’