வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 10 பிப்ரவரி, 2010

மகளை மறைத்து வைத்து கடத்தல் நாடகம்: தாய் கைது


சென்னை: மகளை கடத்தி மறைத்து வைத்து விட்டு பொய் புகார் அளித்த தாயை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை, குரோம்பேட்டையை சேர்ந்தவர் ஷீலா (30). கணவர் பாபு இறந்து விட்டதால் ஷாலினி என்ற மகள் மற்றும் சாலமன் என்ற மகனுடன் வசித்து வந்தார்.

பல்லாவரத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவருடன் ஷீலாவுக்கு பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது.

தனது நகையை ஏமாற்றி எடுத்துக் கொண்டதாக கூறி மகேந்திரன் மீது ஷீலா பல்லாவரம் போலீசில் புகார் செய்தார். இது குறித்து பல்லாவரம் போலீசார் விசாரணை செய்து வந்தனர்.

இந் நிலையில் ஷீலா வீட்டிலேயே நடத்தி வந்த பெட்டிக் கடையை அடித்து நொறுக்கி விட்டு தனது மகள் ஷாலினியை மகேந்திரன் கடத்திச் சென்று விட்டதாக குரோம்பேட்டை போலீசில் ஷீலா புகார் செய்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேந்திரனை கைது செய்து விசாரணை நடத்தினார்கள். அதில் மகேந்திரன் எந்த தவறும் செய்யவில்லை என்பது தெரிய வந்தது.

இதனையடுத்து மகேந்திரன் மூலம் போலீசார் ஒரு நாடகம் நடத்தினர். இதன்படி ஷீலாவை தொடர்பு கொண்ட மகேந்திரன், ஷாலினியை கடத்திச் சென்றதாக போலீசார் தன்னை மிகவும் துன்புறுத்துவ தாகவும், தான் வாங்கிய நகைகளை திருப்பி கொடுத்து விடுவதாகவும் தன் மீது கொடுத்த வழக்கை திரும்ப பெற வேண்டும் என்றும் ஷீலாவிடம் கேட்டுக் கொண்டார்.

அப்போது ஷாலினியை சைதாப் பேட்டையில் உள்ள தனது மாமியாரி டம் விட்டிருப்பதாகவும், வழக்கை திரும்ப பெற்றால் தான் மாட்டிக் கொள்ள நேரிடும் என்றும் ஷீலா கூறியிருக்கிறார்.

அதற்கு மகேந்திரன் குரோம் பேட்டை பஸ் நிலையத்தில் ஷாலினியை கொண்டு வந்து விட்டால் தான் காப்பாற்றியதாக போலீசில் கூறி விடுவதாக சொல்லியிருக்கிறார்.

அதன்படி ஷீலா, ஷாலினியை குரோம்பேட்டை பஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தபோது அங்கு மறைந்திருந்த போலீசார் அவரை கையும், களவுமாக பிடித்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், ஷீலாவின் போக்கு பிடிக்காமல் ஷாலினி அவரை திட்டி வந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து ஷாலினியை சைதாப் பேட்டையில் உள்ள தனது மாமியார் பத்மாவதி யிடம் கொண்டு போய் விட்டு விட்டு, சில பிரச்சனைகள் முடியும் வரை ஷாலினி இங்கேயே இருக்கட்டும் என்று சொல்லி இருப்பது தெரிய வந்துள்ளது.

மகளை கடத்தி மறைத்து வைத்து விட்டு பொய் புகார் அளித்த ஷீலாவுடன், அதற்கு உடந்தையாக இருந்ததாக பத்மாவதியையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’