வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 25 பிப்ரவரி, 2010

சச்சின் காலைத் தொட்டுக் கும்பிடத் தோன்றுகிறது- கவாஸ்கர்.


டெல்லி: சச்சின் நிகழ்த்தியுள்ள உலக சாதனையைப் பார்த்ததும் அவரது காலைத் தொட்டு கும்பிட வேண்டும் என்று எனக்குத் தோன்றியது என்று ரொம்பவே உணர்ச்சிசப்பட்டுள்ளார் சுனில் கவாஸ்கர். நேற்று குவாலியரில் நடந்த ஒரு நாள் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் 200 ரன்களை அடித்து புதிய உலக சாதனை படைத்தார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கவாஸ்கர் அதி பயங்கரமாக உணர்ச்சிவசப்பட்டுள்ளார். சச்சின் காலைத் தொட்டுக் கும்பிட வேண்டும் என்று நெகிழ்ந்து போய்க் கூறினார்.

கவாஸ்கர் கூறுகையில், உலகில் வேறு எந்த வீரர் 93 சர்வதேச சதங்களை அடித்துள்ளார்?. யார் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒரு நாள் ரன்களை அடித்துள்ளனர்?. யார் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டெஸ்ட் ரன்களை எடுத்துள்ளார்?. உண்மையில் சச்சினின் சாதனைகள் என்னை பிரமிக்க வைக்கின்றன.

தலை வணங்கி, காலைத் தொட்டுக் கும்பிட வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது. இந்த சாதனையைச் செய்தது யாராக இருந்தாலும் நிச்சயம் நான் காலைத் தொட்டு வணங்குவேன்.
சச்சின் செய்த சாதனை என்னை வியக்க வைத்துள்ளது. துரதிர்ஷ்டவசமாக சச்சின் சாதனை செய்ததை என்னால் நேரில் பார்க்க முடியவில்லை. சச்சின் இன்னும் நிறைய சாதிப்பார். அவர் போக வேண்டிய தூரம் நிறைய உள்ளது.

அவருக்குள் அந்த குட்டிப் பையன் இன்னும் இருக்கிறான். அந்தப் பையன்தான் விளையாடு, விளையாடு, விளையாடு என்று அவரை உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கிறான். அந்த உணர்வுதான் அவரை தொடர்ந்து ஆட வைத்துக் கொண்டிருக்கிறது. நாட்டுக்காக விளையாடுவதும் அவரை உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கிறது.

சச்சினின் சிறப்பம்சம் என்னவென்றால், நிகழ்காலத்தை பற்றி மட்டுமே அவர் நினைப்பார். கடந்த காலத்தை அவர் நினைக்கவே மாட்டார் என்றார் கவாஸ்கர்.

ஒரு இந்தியர்தான் எனது சாதனையை உடைக்க வேண்டும்- சச்சின்

இதற்கிடையே தனது சாதனை குறித்து சச்சின் கூறுகையில், சாதனைகள் என்றால் யாராவது ஒருவர் வந்து நிச்சயம் அதைக் தகர்ப்பார். இருப்பினும் எனது சாதனையை ஒரு இந்திய வீரர் உடைக்க வேண்டும் என விரும்புகிறேன்.

எந்த சாதனையும் தகர்க்க முடியாததில்லை. நிச்சயம் ஒவ்வொன்றும் தகர்க்கப்படும். எனது சாதனையை இந்தியர் ஒருவர் தகர்த்தால் பெரும் சந்தோஷப்படுவேன்.

எனது சாதனையை ரசிகர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். சாதனைகளுக்காக நான் விளையாடுவதில்லை. உண்மையில் 175 ரன்களைக் கடந்த பின்னர்தான் 200 ரன்கள் எடுக்கலாமே என்று நான் நினைத்தேன்.

அனுபவித்து ஆடுகிறேன். லட்சியத்துடன் ஆடுகிறேன். சாதனைகளை படைக்க வேண்டும்,உடைக்க வேண்டும் என்று நினைத்து ஆடுவதில்லை. எப்போதாவது அது அமைந்து விடுகிறது. அது நிச்சயம் மகிழ்ச்சியான விஷயம்தான்.

எனக்கு வந்த பந்துகள் எல்லாமே நல்ல பந்துகள். எனவேதான் வந்த பந்தையெல்லாம் அடிக்க முடிந்தது. 200 ரன்கள் எடுக்க முடியும் என்ற நம்பிக்கையும் வந்தது.

பல சவால்களை நான் சந்தித்துள்ளேன். 2007ம் ஆண்டு முதல் நல்ல கிரிக்கெட்டை ஆடிக் கொண்டிருக்கிறேன். கேரி கிரிஸ்டனுக்கே இந்தப் பெருமையெல்லாம் போக வேண்டும். அணியை அருமையாக வழி நடத்திக் கொண்டிருக்கிறார். அணி வீரர்களை ஒருங்கிணைத்து ஆட வைத்துக் கொண்டிருக்கிறார். அது பெரிய விஷயம் பயிற்சியின்போது கூட யாருக்கும் அவர் பாரபட்சம் காட்டுவதில்லை என்றார் சச்சின்.

கவாஸ்கரின் 'சாதனை'..!

பல சாதனைகளைப் படைத்தவரான கவாஸ்கர் ஒரு வித்தியாசமான சாதனையையும் படைத்தவர். 1975ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியின்போது (அப்போது 60 ஓவர்கள்), ஆட்டமே இழக்காமல் 36 ரன்களை மட்டுமே எடுத்தார் கவாஸ்கர். இதற்காக அவர் சந்தித்த பந்துகள் 174. ஒரே ஒரு ஃபோர் மட்டுமே அடித்தார்.

அந்தப் போட்டியில் 60 ஓவர்களையும் ஆடிய இந்தியா 3 விக்கெட்களை இழந்து 132 ரன்களை மட்டுமே எடுத்தது.

எஸ்.வெங்கட்ராகவனை கேப்டனாக்கியது பிடிக்காததால்தான், வேண்டுமென்றே இப்படிக் கட்டையைப் போட்டார் கவாஸ்கர் என்று அப்போது கடும் புகார்கள் கூட எழுந்தன. ஆனால் தனக்கு ஆட்டத்தின் வேகத்தைத் தாக்குப் பிடிக்க முடியாததால், அவ்வாறு நிதானமாக ஆடியதாக விளக்கம் அளித்தார் கவாஸ்கர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’