வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2010

பொதுத்தேர்தலில் போட்டியிடுதல் பற்றி ஈ.பி.ஆர்.எல்.எவ் (பத்மநாபா) பொதுச்செயலர் ரி.சிறீதரன், புளொட் தலைவர் த.சித்தார்த்தனின் கருத்துக்கள்..!


பொதுத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல்கட்சிகள் தொடர்ந்தும் இரகசிய சந்திப்புகளிலும் விசேட கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டு வருகின்ற நிலையில் தமிழரசுக் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தனுடன் தேர்தல் உடன்பாடு தொடர்பாக இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் தொடர்பில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழக (புளொட்)த்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் கருத்துரைக்கையில், தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் மாத்திரமல்ல ஏனைய தமிழ்க் கட்சிகளுடனும் தேர்தல் உடன்பாடு தொடர்பாகச் சந்திப்புகளிலும் பேச்சுவார்த்தைகளிலும் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றோம். தேர்தல் உடன்பாடு என்பதற்கு அப்பால் எதிர்காலத்தில் எமது மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்கான பொதுவான ஐக்கியத்துடன் செயற்படும் ஜனநாயகச் செயற்பாடே அவசியமாகும். தேர்தலில் போட்டியிடுவதற்கான உடன்பாடு என்பது தற்காலிகமான ஒன்றாகும். ஆனால் எமதுமக்களின் அரசியல் உரிமைகளை முழுமையாக வென்றெடுப்பதற்கான ஒருமித்த கருத்துள்ள நிலைப்பாட்டை அனைத்து தமிழ்கட்சிகளும் ஒன்றுபட்டு முன்னெடுக்க வேண்டும். இதற்காகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட ஏனைய தமிழ்க்கட்சிகளுடனும் தொடர்ந்தும் பேச்சுகளில் ஈடுபட்டு வருகின்றோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல்கட்சிகள் தொடர்ந்தும் இரகசிய சந்திப்புகளிலும் விசேட கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டு வருகின்ற நிலையில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எவ். பத்மநாபா) பொதுச் செயலர் தி.சிறீதரன் எதிர்வரும் பொதுத்தேர்தல் தொடர்பாகத் தெரிவிக்கையில், அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றுபட்டு செயற்படுவதன் மூலமே எமதுமக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்க முடியுமென்பதில் நாம் உறுதியாகவுள்ளோம். வடக்கின் தற்போதைய அரசியல் சூழலுக்கு ஏற்பவும் கிழக்கின் நிலைமைகளுக்கு ஏற்பவும் நாம் செயற்படவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார். இதேவேளை பொதுத் தேர்தலில் கிழக்கு மாகாணசபை உறுப்பினரான இரா.துரைரட்ணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக கூட்டமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார். அதேநேரம் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், செல்வி க.தங்கேஸ்வரி, த.கனகசபை ஆகியோர் இம்முறையும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை திருமலை மாவட்ட நிலைமைகள் தொடர்பாக ஆராய பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், துரைரெட்ணசிங்கம் ஆகியோர் நேற்று திருகோணமலைக்கு விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’