வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 27 பிப்ரவரி, 2010

மின் கட்டணத்தைக் குறைக்க விரைவில் நடவடிக்கை : ஜனாதிபதி உறுதி


மின் கட்டணத்தை குறைப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

கெரவலப்பிட்டிய அனல் மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டாம் கட்டம் திறக்கப்படுவதால் நூறு மெகா வோட் மின்சாரம் தேசிய மின் உற்பத்தியில் சேர்க்கப்படுகின்றது. புதிய மின் உற்பத்தி நிலையங்களின் பலாபலன்கள் மக்களைச் சென்றடையும் வகையில் இந்தக் கட்டணக்குறைப்பு மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி கூறினார்.

வத்தளை, கெரவலப்பிட்டிய அனல் மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டாம் கட்டத்தைத் திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

"பெற்றோலியப் பொருட்களைப் பயன்படுத்தி மின் உற்பத்திய மேற்கொள்வதற்கு அதிக செலவாகும். அதனால் இலாபகரமான மாற்று வழிகளைப் பயன்படுத்தி மின் உற்பத்தியை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது.

இதன் பயனாக, கெரவலப்பிட்டியவில் உலை எண்ணெயைப் பயன்படுத்தி, மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நிலையம் அமைக்கப்பட்டு இப்போது திறந்து வைக்கப்பட்டிருக்கின்றது. இதில் நூறு மெகா வோட் மின்சாரம் எண்ணெய் இல்லாமல் உற்பத்தி செய்யப்படுகிறது.

இதேபோல் நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் உற்பத்தி நிலையமும், மேல் கொத்மலை நீர்மின் உற்பத்தி நிலையமும் நிர்மாணிக்கப்படுகின்றன.

இருப்பினும் எம் முன்பாக இருக்கும் அடுத்த பிரச்சினை மின் கட்டணமாகும். மின் நுகர்வோர் செலுத்துகின்ற கட்டணத்தைக் கூடிய கதியில் குறைப்பதே எமது அடுத்த பணியாகும்.

மின் உற்பத்திச் செலவு குறைந்துள்ளது. ஆகவே நுகர்வோர் செலுத்தும் மின் கட்டணமும் குறைக்கப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டு வருகின்றோம்.

இந்த உற்பத்தி தேசிய கட்டமைப்பில் சேரும்போது அதன் நன்மையை நுகர்வோருக்குப் பெற்றுக் கொடுக்கும் பொறுப்பு எம்முடையது" என்றார்.

கெரவலப்பிட்டிய மின்னுற்பத்தி நிலையத்தின் முதலாம் கட்டம் ஏற்கனவே திறக்கப்பட்டதைத் தொடர்ந்து 200 மெகா வோட் மின்சாரம் தேசிய மின் உற்பத்தியில் சேர்க்கப்பட்டது.

மின்வெட்டைத் தவிர்ப்பதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய 294.8 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் இம்மின் உற்பத்தி நிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’