அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா |
சுகாதார மறுசீரமைப்புத் திட்டத்திற்காக ஒபாமா அனைத்துக் கட்சி கூட்டம்
அமெரிக்க காங்கிரஸ் நாடாளுமன்றத்தினூடாக தனது சுகாதார பராமரிப்பு மறுசீரமைப்புத்திட்டத்தை முன்னெடுப்பதில் ஏற்பட்டுள்ள தாமதத்துக்குக் காரணமான அரசியல் முட்டுக்கட்டையை தகர்ப்பதற்காக, அமெரிக்க அதிபர் ஒபாமா அவர்கள், வாசிங்டனில் அனைத்துக் கட்சி கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளார்.
முக்கிய அமெரிக்க தொலைக்காட்சிகளின் ஊடாக நேரடியாக ஒளிபரப்பப்படவுள்ள இந்த 6 மணிநேரக் கூட்டம், இந்த மறுசீரமைப்புத் திட்டத்தை காப்பாற்றுவதற்கான இறுதி முயற்சியாக விபரிக்கப்படுகின்றது.
ஒபாமா அவர்கள் தனது சொந்த சுகாதார பராமரிப்பு பிரேரணைகளை 40 குடியரசு மற்றும் ஜனநாயக்கட்சி உறுப்பினர்களுக்கு விபரிப்பார்.
ஏற்கனவே காங்கிரஸ் எதிர்கட்சி உறுப்பினர்களால் எதிர்க்கப்பட்ட இரு பிரேரணைகளுக்கான மாற்றுப் பிரேரணைகளாக அவரது இந்த சொந்தப் பிரேரணைகள் இருக்கும்.
அல்ஜீரிய தேசிய பாதுகாப்பு இயக்குநர் கொலை
அல்ஜீரிய பொலிஸார் |
அல்ஜீரியாவின் தேசிய பாதுகாப்பு இயக்குனர் கேணல் அலி தௌன்ஸி அவர்கள் பணியின் போது சுட்டுக்கொல்லப்பட்டதாக அல்ஜீரிய அரசாங்கம் கூறியுள்ளது.
அல்ஜியர்சில் உள்ள பொலிஸ் தலைமையகத்தில் தனது அறையில் வைத்து தேசிய பாதுகாப்பு இயக்குனர் அலி தௌன்ஸி, தனது சகா ஒருவரால் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், கொலையாளி பின்னர் தன்னைத் தானே சுட்டு கொண்டதாகவும் உள்துறை அமைச்சகம் கூறுகிறது.
கடுமையாக காயமடைந்த தாக்குதலாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலாளி குற்ற நடவடிக்கையை எதிர்கொள்ளும் ஒருவர் என்று செய்தி கூறுகின்றது. ஆனால் அது உறுதி செய்யப்படவில்லை.
அரசியலமைப்புக்குள் பிரச்சனையை தீர்க்க வேண்டும் - துருக்கி அரசு மற்றும் இராணுவம்
அதிபரும் இராணுவ தளபதியும் |
துருக்கியில் அரசாங்கத்துக்கும், இராணுவத்துக்கும் இடையில் நிலவுகின்ற பதற்றத்தை குறைப்பதற்காக நடத்தப்பட்ட உயர் மட்ட பேச்சுக்களை அடுத்து, இரு தரப்பினரும், நாட்டின் பிரச்சினை அரசியலமைப்புக்குள் தீர்க்கப்பட வேண்டும் என்று கூறியிருக்கின்றனர்.
அதிபர் அப்துல்லா குல், அவரது பிரதமர் தையிப் எர்டோகன் மற்றும் இராணுவத்தலைவர் ஜெனரல் இல்கர் பஸ்பக் ஆகியோர் கூட்டத்தில் இருந்து மூன்று மணி நேரத்தின் பின்னர் வெளிவந்தனர்.
7 வருடத்துக்கு முன்னர் அரசாங்கத்தை கவிழ்க்க சதி செய்தததாக மேலும் உயர் அதிகாரிகள் மீது முன்னதாக ஒரு நீதிமன்றம் குற்றஞ்சாட்டியது. இதன் மூலம் இவ்வாறு குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்ததுள்ளது.
துபாய் கொலையாளிகள் போலி பிரெஞ்ச் கடவுச்சீட்டை பயன்படுத்தியுள்ளனர் - பிரான்ஸ்
கொலையான ஹமாஸ் தலைவர் |
துபாயில் வைத்து கடந்த மாதம் ஹமாஸ் தலைவரை கொன்ற கொலையாளிகள் என்று சந்தேகிக்கப்படும் நபர்கள் போலியான பிரஞ்சு கடவுச்சீட்டுக்களை பயன்படுத்தியதாக பிரான்ஸ் உறுதி செய்திருக்கிறது.
இந்த கொலையில் சந்தேகிக்கப்படும் மூன்று நபர்கள், பிரஞ்சு குடிமக்களின் அடையாளங்களை திருடி தங்களின் கடவுச்சீட்டுக்களில் பயன்படுத்தியிருப்பது தெளிவாக தெரியவந்திருப்பதாக, பிரஞ்சு வெளியுறவு அமைச்சகம் கூறியிருக்கிறது.
இந்த கொலையுடன் தொடர்புடையவர்கள் என்று இதுவரை 26 சந்தேகநபர்களை துபாய் காவல்துறையினர் அடையாளம் கண்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் ஐரோப்பிய மற்றும் ஆஸ்திரேலிய கடவுச்சீட்டுக்களை பயன்படுத்தி பயணம் செய்திருக்கிறார்கள்.
இந்த கொலைக்கு இஸ்ரேல் தான் பொறுப்பு என்று பரவலாக குற்றம் சாட்டப்படுகிறது. ஆனால் இந்த குற்றச்சாட்டை இஸ்ரேல் இதுவரை மறுக்கவும் இல்லை. உறுதிப்படுத்தவும் இல்லை.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் பேச்சுவார்த்தை |
இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையில் பேச்சுவார்த்தை
இந்தியா – பாகிஸ்தான் நாடுகளின் வெளியுறவுச் செயலர்கள் இடையே இன்று வியாழக்கிழமை டெல்லியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்துதல், காஷ்மீர் விவகாரம் உள்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.
அந்தப் பேச்சுவார்த்தையில் எதிர்பார்த்த அளவு முன்னேற்றம் ஏற்படாவிட்டாலும், இரு நாடுகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு ஒப்புக் கொண்டிருப்பது ஒரு முக்கிய முன்னேற்றமாகப் பார்க்கப்படுகிறது.
இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் மற்றும் பாகிஸ்தான் வெளியுறவுச் செயலர் சல்மான் பஷீர் இடையிலான பேச்சுவார்த்தை இன்று டெல்லியில் நடைபெற்றது.
முதலில் இரு நாட்டு அதிகாரிகளும் தனியாக ஒன்றரை மணி நேரம் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இரு நாட்டுப் பிரநிதிதிகள் கலந்துகொண்ட கூட்டம் நடைபெற்றது. இரு நாடுகளுக்கும் இடையே நம்பகத்தன்மை மிகவும் குறைவாக இருப்பதை இருதரப்பும் ஒப்புக்கொண்டன.
பின்னர், இரு நாட்டு அதிகாரிகளும் தனித்தனியாக செய்தியாளர்களிடம் பேசினார்கள்.
இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் இந்தப் பேச்சுவார்த்தை முடிவுகள் குறித்துக் கருத்துத் தெரிவித்தபோது, ``விரிவான, வெளிப்படையான, பயனுள்ள பேச்சுவார்த்தையாக இது அமைந்தது. ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு, இருதரப்பும் பயனடையும் வகையில் பேச்சுவார்த்தை இருந்தது’’ என்றார்.
இரு நாடுகளும் பரந்துபட்ட பேச்சுவார்த்தையை மீண்டும் துவக்க வேண்டும் என்று பாகிஸ்தான் வலியுறுத்திய நிலையில், அதற்கான நேரம் இன்னும் வரவில்லை என்று இந்தியா தெரிவித்திருக்கிறது.
பாகிஸ்தானைப் பொருத்தவரை, காஷ்மீர் பிரச்சினைதான் இரு நாடுகளுக்கும் இடையிலான முக்கியப் பிரச்சினையாக இருப்பதாகவும், அதைத் தீர்ப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்றும் அது வலியுறுத்தியது.
ஆனால், இந்தியாவைப் பொருத்தவரை, பயங்கரவாதம் முக்கிய பிரச்சினையாக எடுத்துரைக்கப்பட்டது.
மும்பை தாக்குதல் சம்பவம் தொடர்பாக இதுவரை பாகிஸ்தான் எடுத்துள்ள நடவடிக்கைகளை அங்கீகரித்ததாகவும், அதே நேரத்தில், குற்றவாளிகளைத் தண்டிக்க இந்த நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்றும் நிருபமா ராவ் தெரிவித்தார்.
லஷ்கர்-இ- தொயிபா, ஜமாத் உத் தவா, ஹிஸ்புல் முஜாஹிதீன் உள்பட பல்வேறு பயங்கரவாதக் குழுக்கள் தொடர்ந்து பாகிஸ்தானில் செயல்பட்டு வருவதை பாகிஸ்தான் தரப்பிடம் எடுத்துரைத்ததாகவும் நிருபமா தெரிவித்தார்.
சரத் பொன்சேகா மீது இலங்கை அரசு மேலும் நடவடிக்கை
சரத் பொன்சேகா |
சரத் பொன்சேகாவை கைது செய்து அவரை இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கான இலங்கையின் நடவடிக்கைகள் ஏற்கனவே சர்வதேச கண்டனத்தை ஈர்த்துள்ளன.
இந்த நடவடிக்கைகள் இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை இலகுபடுத்துவதற்கு எந்த வகையிலும் உதவாது என்று பிரிட்டன் கூட விமர்சித்துள்ளது.
ஆனால், இலங்கை அரசாங்கமோ இப்போது இந்த நடவடிக்கைகளை மேலும் முன்னெடுக்க தயாராகி வருகிறது.
சரத் பொன்சேகா அவர்கள் தனது சொந்தக்காரர்கள், சட்டவிரோத இலாபங்களைப் பெறவும், இராணுவத்தில் அதிருப்தியை ஏற்படுத்தவும், இராணுவத்தில் இருந்து தப்பி ஓடியவர்களுக்கு தஞ்சமளித்தும் மற்றும் வெளிநாட்டு நாணயமாற்று விதிகளை தகர்த்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டார் என்றும் அதற்காக அவருக்கு சிவில் சட்டங்களின் அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட விருப்பதாகவும், இலங்கை அரசாங்கப் பேச்சாளரான அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
ஆனால், இந்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் போலியானவை என்று சரத் பொன்சேகாவின் நெருங்கிய சகாவான டிரான் அலஸ் கூறுகிறார். ஒட்டுமமொத்தமாக தாம் இவை அனைத்தையும் மறுப்பதாகவும் அவர் கூறுகிறார்.
முன்னாள் இராணுவ தளபதியான சரத் பொன்சேகா அவர்கள் இன்னமும் தடுத்து வைக்கப்பட்டே உள்ளார், ஆனால், அவர் நடக்கவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட நீதிமன்றம் அவருக்கு அனுமதி வழங்கியுள்ளது.
ஜனநாயக தேசியக் கூட்டணி என்னும் பெயரில் அவர் தற்போது கட்சிகள் மற்றும் குழுக்கள் அடங்கிய ஒரு கூட்டணிக்கு தற்போது தலைமை தாங்குகிறார். அந்த கூட்டணியின் சார்பில் அவர் போட்டிடுவதற்காக கொழும்பு மாவட்டத்தில் அவர் சார்பில் அவரது மனைவி வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் அவருக்கு ஆதரவு வழங்கிய முக்கிய எதிர்க்கட்சி வேறு ஒரு கூட்டணியாக தேர்தலில் போட்டியிடுவது குறித்து அவர் ஏமாற்றமடைந்துள்ளதாகவும் அலஸ் ஒப்புக்கொண்டார்.
இலங்கையைப் பொறுத்தவரை அங்குள்ள அரசியல் கட்சிகளுக்கு அவற்றின் சின்னம் மிகவும் முக்கியமான விடயமாகும். அதனடிப்படையில் வேறு அனைத்தையும் விட ஐக்கிய தேசிய கட்சி தனது பாரம்பரிய யானைச் சின்னத்தில் போட்டியிடுவதிலேயே ஆர்வம் காட்டுகிறது.
தற்போதைய நாடாளுமன்றத்தில் எதிரணியில் இருந்து பலர் விலகி அரசாங்க தரப்பில் இணைவது பல தடவைகள் நடந்துள்ளது. ஆகவே இந்த தேர்தலிலும் ஆளும் கட்சி மீண்டும் வெற்றிபெற்றால் அத்தகைய கட்சி மாற்றங்கள் தொடரக் கூடும் என்று எதிர்க்கட்சிகள் அஞ்சுகின்றன.
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி சந்தேக நபரை அடையாளம் காண்பித்துள்ளார்
மட்டக்களப்பில் சம்பவம் |
இலங்கையின் - கிழக்கே மட்டக்களப்பு மாவட்டம் புலிபாய்ந்தகல் பிரதேசத்சில் 8 வயது பாடசாலை மாணவியொருவர் இராணுவத்தினரால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்டப்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான அடையாள அணி வகுப்பு வியாழக்கிழமை மட்டக்களப்பு நீதிமன்றத்தில்
நடைபெற்ற போது சந்தேக நபர்களிலொருவரை பாதிக்கப்பட்ட மாணவி அடையாளம் காட்டியுள்ளார்.
கடந்த 12 ம் திகதி குறிப்பிட்ட மாணவி பாடசாலையிலிருந்து வீடு திரும்பும் போது வழியில் நீராடிக் கொண்டிருந்த இராணுவத்தினரால் வழிமறித்து கடத்தப்பட்டு பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகின்றது.
சம்பவம் தொடர்பாக திகிலிவெட்டை இராணுவ முகாமில் கடமையிலிருந்த இராணுவ சிப்பாய்கள் 6 பேர் சந்தேகத்தின் பேரில் பொலிசாரால் கைதாகி நீதிமன்ற விளக்கமறியலிலும் வைக்கப்பட்டிருந்தனர்.
அடையாள அணிவகுப்பு நடைபெற்ற போது அன்றைய தினம் குறித்த முகாமில் கடமையிலிருந்த 49 இராணுவ சிப்பாய்களும் நிறுத்தப்பட்டிருந்ததாக பாதிக்கப்பட்ட மாணவி சார்பில் ஆஜரான சட்டத்தரணி பேரின்பம் பிரேம்நாத் கூறுகின்றார்
4 சுற்றுக்களில் நடைபெற்ற இந்த அடையாள அணிவகுப்பில் இறுதிச் சுற்றிலேயே சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டதாகவும் கூறும் அவர்,
குறிப்பிட்ட சந்தேக நபர்கள் 6 பேரும் தொடர்ந்தும் எதிர்வரும் 3 ம் திகதி வரை நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடுகின்றார்.
எம்.எஃப் ஹுசைனுக்கு கத்தார் குடியுரிமை
ஹுசைனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் |
இந்தியாவின் பிரபல ஒவியர் எம்.எஃப் ஹுசைன் தனக்கு கத்தார் குடியுரிமை வழங்க முன் வந்திருப்பதாக தி ஹிந்து நாளிதழுக்கு பேட்டி கொடுத்துள்ளார். ஆனால் இந்த கெளரவத்தை அவர் ஏற்பாரா என்பது தெரியவில்லை.
இந்துக் கடவுள்களை நிர்வாணமாக வரைந்தற்காக இவர் மீது இந்துத்துவாவாதிகள் தாக்குதல்களை நடத்தியிருந்தனர்.
95 வயதான எம்.எஃப் ஹுசைன் அவர்கள் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் துபாய் மற்றூம் லண்டனில் வசித்து வருகிறார். நாட்டை விட்டு வெளியேறும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்ட எம். எப் ஹுசைன் இந்தியாவின் முக்கியமான ஒவியர்களில் ஒருவர்.
2006 ஆம் ஆண்டு இந்திய தேசத்தை நிர்வாண தெய்வமாக வரைந்ததற்காக எம்.எஃப் ஹுசைன் மன்னிப்பு கோரியிருந்தார். அதே போன்று 1990 களின் மத்திய பகுதிகளில் இந்து பெண் தெய்வங்களை நிர்வாணமாக வரைந்ததை தொடர்ந்து மும்பையில் பெரும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
இவர், தங்களுடைய மத நம்பிக்கையை புண்படுத்துவதோடு, மதத்தை இழிவுப்படுத்துவதாகவும் இந்துத்துவா குழுக்கள் கூறி வருகின்றன.
தன் மீது இந்தியாவில் கிட்டதட்ட 900 வழக்குகள் இருப்பதாக கணக்கீடும் எம்.எப் ஹுசைன் அவர்கள், தனக்கு கும்பல்கள் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த்தாகவும், தன்னுடைய ஒவியக் கண்காட்சிகளை அவர்கள் நாசப்படுத்தியதாகவும் கூறியிருக்கின்றார்.
எம்.எஃப் ஹுசைன். அவர்கள் தாமாக கத்தார் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கவில்லை என்றும் மன்னர் குடும்பமே அவர்களுக்கு முன் வந்து இந்த கெளரவத்தை கொடுத்த்தாகவும் தி இந்து கூறியுள்ளது.
இந்தியாவில் அவர் மீது தொடரப்பட்ட பல்வேறு ஆபாச குற்றச்சாட்டுகளில் இருந்து தப்புவதற்காக அவர் கடந்த 2006 முதல் வெளிநாடுகளில் வசித்து வருகிறார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’