வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 23 பிப்ரவரி, 2010

செய்தியறிக்கை


கைது செய்யப்பட்டவர்
கைது செய்யப்பட்டவர்

'இரானில் முக்கிய தீவிரவாதி கைது'

இரானில் பல பயங்கரமான தாக்குதல்கள் நடத்தப்படக் காரணமாயிருந்த குழு என்று கூறப்படும் ஜுண்டோலா குழுவைச் சேர்ந்த, சுன்னி மதக்குழு தீவிரவாதி, அப்தொல்மலெக் ரிஜியை, தான் பிடித்துவிட்டதாக இரான் கூறுகிறது.

துபாயிலிருந்து மத்திய ஆசிய நாடொன்றுக்கு விமானம் மூலம் அவர் சென்று கொண்டிருந்த போது, அவர் பயணித்த விமானம் இரானில் இறங்குமாறு உத்தரவிடப்பட்டது என்று கூறப்படுகிறது.

தொலைக்காட்சிப் படங்கள், முகமூடியணிந்த பாதுகாப்புப்படையினரால், அவர் ஒரு விமானத்திலிருந்து கூட்டிச்செல்லப்படுவதைக் காட்டின.

இந்தக் கைது, ஜுண்டோல்லாவை ஆதரிப்பதாக இரான் குற்றம்சாட்டும், அமெரிக்காவுக்கும் பிரிட்டனுக்கும் ஒரு பெரியதோல்வி என்று இரான் கூறுகிறது.

இரு நாடுகளுமே இந்த குற்றச்சாட்டை மறுக்கின்றன. பிரிட்டன், இந்தத் தீவிரவாதியின் கைது, பயங்கரவாதத்துக்கு எதிரான ஒரு பெரிய அடி என்று வர்ணித்து வரவேற்றிருக்கிறது.


தேர்தல் ஆணையத்தை முழுமையாக கட்டுப்படுத்துவதற்கான கார்சாயின் முயற்சி குறித்து கவலை

அதிபர் கர்சாய்
அதிபர் கர்சாய்
ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமித் கார்சாய் தேர்தல் ஆணையம் ஒன்றை முழுமையாக தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர வழிசெய்யும் ஒரு உத்தரவைப் பிறப்பித்திருப்பது பற்றித் தாங்கள் கவலை அடைந்திருப்பதாக, ஆப்கானிஸ்தானில் உள்ள மேலை நாடுகளின் ராஜீய அலுவலர்கள் கூறுகிறார்கள்.

தேர்தல் புகார்கள் ஆணையத்தின் அனைத்து ஐந்து உறுப்பினர்களையும் அவரே நியமிக்க இந்த ஆணை வழி செய்கிறது.

இந்த ஆணையந்தான், கடந்த ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் நடந்த பெரும் மோசடியை வெளிக்கொண்டுவர உதவியது. இந்த விவகாரந்தான் கார்சாய் அவர்களை, ஏறக்குறைய மறு தேர்தலைக் கேட்கும் நிலைக்குத் தள்ளியது.

இந்த ஆணையத்தின் உறுப்பினர்களில் இருவர் வெளிநாட்டவராக இருக்கவேண்டும், அதில் ஒருவருக்கு வெட்டு வாக்கு அதிகாரம் வழங்கப்படலாம் என்று ஐ.நா மன்றத்துடன் போடப்பட்ட ஒப்பந்தத்தைப் பற்றி இந்த உத்தரவு எந்த வகையிலும் குறிப்பிடவில்லை என்று பிபிசிக்கு தெரிய வருகிறது.


பிராட்டஸ்டண்ட் மதத் தலைவர் குடிபோதையில் கார் ஓட்டியதாக ஒப்புதல்

போதையில் கார் ஓட்டிய ஆயர்
போதையில் கார் ஓட்டிய ஆயர்
ஜெர்மனியின் இரண்டரை கோடி பேர் பின்பற்றும் பிராட்டஸ்டண்ட் திருச்சபையின் தலைவர், மார்கோட் கேஸ்மான், குடிபோதையில் வாகனம் ஒட்டியதை அடுத்து கைது செய்யப்பட்ட பின்னர், ஒரு பெரிய தவறை இழைத்ததை ஒப்புக்கொண்டிருக்கிறார்.

கடந்த ஆண்டு இந்த திருச்சபையின் முதல் பெண் தலைவராக நியமிக்கப்பட்ட திருமதி கேஸ்மேன், ஹானோவர் நகரில் போக்குவரத்தை நிறுத்தும் சிகப்பு விளக்கை மீறிச்சென்றார்.

சட்ட ரீதியாக அனுமதிக்கப்பட்ட அளவை விட மூன்று மடங்கு அதிகம் மது அவரது இரத்தத்தில் கலந்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

2007 ஆம் ஆண்டில் விவாகரத்து செய்த முதல் ஜெர்மன் ஆயர் என்ற நிலையை அவர் பெற்றிருந்தார்.

இந்த சம்பவம் அவரது பதவியை எப்படி பாதிக்கும் என்பது குறித்து திருச்சபைத் தலைவர்கள் விவாதித்து வருகிறார்கள்.


டாபூரின் முக்கிய கிளர்ச்சிக்குழுவுடன் சுடான் அதிபர் சமாதான உடன்படிக்கை செய்கிறார்

டாபூர் கிளர்ச்சிக்குழுவினர்
டாபூர் கிளர்ச்சிக்குழுவினர்
டாபூரில் இருக்கின்ற ஒரு முக்கிய கிளர்ச்சிக்குழுவுடன் சுடானின் அதிபர் ஒமர் அல் பஷீர் அவர்கள் இன்று ஒரு சமாதான உடன்படிக்கையை கைச்சாத்திடவுள்ளார்.

நீதி மற்றும் சமத்துவத்துக்கான இயக்கம் என்னும் இந்த அமைப்புதான், நாடாளுமன்றம் அமைந்துள்ள ஒம்டுர்மன் நகருக்குள் இரு வருடத்துக்கு முன்னர் தாக்குதல் ஒன்றை நடத்தியதன் மூலம், சண்டையை நாட்டின் மையப் பகுதிக்குள் எடுத்துச் சென்ற ஒரே ஆயுதக்குழுவாகும்.

அண்டையில் உள்ள சாட் நாட்டின் மத்தியஸ்தத்துடன் கட்டாரிலேயே இந்த சமாதான உடன்படிக்கை கைச்சாத்தாகவுள்ளது.

உடனடியான ஒரு போர் நிறுத்தத்துடன், இந்த உடன்படிக்கை சகல மட்டங்களிலும் அதிகார பகிர்வுக்கும் வழி செய்கிறது.

இதன் மூலம் கிளர்ச்சிக்காரர்களுக்கு சுடானிய அரசாங்கத்தில் இடம் கிடைக்கும் கிடைக்கும் என்று சுடானில் உள்ள பிபிசி செய்தியாளர் ஒருவர் கூறுகிறார்.

செய்தியரங்கம்
இரா. சம்பந்தர்
இரா. சம்பந்தர்

'தமிழ் மக்களுக்கான போதிய சுயாட்சியே த.தே.கூவின் கொள்கை'

இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்கள் தமது தாயக பிரதேசங்களில் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் போதிய சுயாட்சி பெற்று வாழ வேண்டும் என்பதே தொடர்ந்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கொள்கையாக இருக்கும் என்று அதன் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

ததேகூ தனது கொள்கைகளை கைவிட்டு விட்டது என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் குற்றஞ்சாட்டியமைக்கு பதிலளிக்கும் வகையிலேயே சம்பந்தர் இதனை தெரிவித்தார்.

அத்துடன் தாம் இந்தியாவுடன் மிகவும் நட்பு ரீதியாக செயற்பட விரும்புகின்ற போதிலும், இந்தியாவின் நிகழ்ச்சி நிரல்களுக்கு அமைவாக தாம் செயற்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களையும் அவர் மறுத்துள்ளார்.

இவை குறித்த அவரது செவ்வியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


சரத் பொன்சேகாவுக்கு விடுதலை மறுப்பு

சரத் பொன்சேகா
சரத் பொன்சேகா
இராணுவத்தினால் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இலங்கையின் முன்னாள் தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்வதற்கான உத்தரவை வழங்க இலங்கை உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.

அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று சரத் பொன்சேகாவின் மனைவி சமர்ப்பித்த மனுவை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த சரத் பொன்சேகாவை, தொடர்ர்ந்து தடுத்து வைத்திருக்கின்ற இலங்கை அரசாங்கம், அவரை இராணுவ நீதிமன்றத்தின் முன்பாக நிறுத்த விளைகிறது.

ஆனால், தான் தற்போது இராணுவத்தில் இல்லாத சாதாரண பொதுமகன் என்பதால் தன்னை இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்தக் கூடாது என்று சரத் பொன்சேகா எதிர்த்து வருகிறார்.


தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் வடக்கிலும் வேட்பு மனுத் தாக்கல்

தனது சகாக்களுடன் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான்
தனது சகாக்களுடன் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான்
இலங்கையின் வடக்கே வன்னி மற்றும் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டங்களில் போட்டியிடுவதற்காக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சார்பில் இன்று வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன.

அந்தக் கட்சியின் செயலாளர் எட்வின் சில்வா கைலேஸ்வரராஜா தலைமையிலான 9 வேட்பாளர்கள் வன்னியிலும், அக்கட்சியின் முக்கியஸ்தராகிய கந்தையா அருமைலிங்கம் தலைமையிலான 12 வேட்பாளர்கள் யாழ்ப்பாணத்திலும் போட்டியிடுகின்றார்கள்.

வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக இன்று வவுனியாவுக்கு வருகை தந்திருந்த தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமாகிய சிவநேசதுரை சந்திரகாந்தன் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமது கட்சியை நாட்டின் பல பகுதிகளுக்கும் விரிவுபடுத்தும் நோக்கத்துடன் இந்தத் தேர்தலைப் பயன்படுத்தும் வகையிலேயே வடக்கு கிழக்கு மற்றும் பொலன்நறுவை ஆகிய இடங்களில் தேர்தலில் போட்டியிடப் போவதாகத் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிட்டு வெற்றியீட்டிய தாங்கள், இந்தப் பாராளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட்ட போதிலும் அரசாங்கத்துடன் இணைந்தே செயற்பட்டு வருவதாகவும், அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில் ஜனசெத்த பெரமுன என்ற தென்னிலங்கை அரசியல் கட்சியும் வன்னித் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்திருக்கின்றது. இன்று வரையில் 3 அரசியல் கட்சிகள் வன்னித் தேர்தல் மாவட்டத்தில் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது,

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’